2017ம் ஆண்டு பரிசு பெற்ற கதைகள்

இளமைத்தமிழ்.காம் போட்டிகளில் பங்கேற்று, பரிசு பெற்ற 2017ம் ஆண்டின் கதைகள் இவை.

22 கருத்துரை

 1. கதிரவன் தன் பொற்கதிர்களை எங்கும் பரப்பிக் கொண்டிருந்தான்.நான் அப்போதுதான் தூங்கி எழுந்தேன். என் தாயார் காலையிலேயே கத்திரிக்காய் சாம்பார் மற்றும் தோசை செய்தார். அவற்றின் மணம் அருமையாக இருந்தது.நான் காலை உணவை உண்டுவிட்டு மெதுவோட்டம் ஓட புறப்பட்டேன்.அன்று ஒரு விடுமுறை நாள் என்பதால் பூங்கா கூட்டமாக இருந்தது.எங்கும் சத்தம் மற்றும் சிரிப்பு. பூங்காவே ஆரவாரமாக இருந்தது.அப்போது யாரோ ஒருவர் “ஆ!” என்று அலறும் சத்தம் கேட்டது. எனக்கு முன்பு ஒரு பெரிய கூட்டம் திரண்டது.

  என்ன தான் நடந்திருக்கும் பார்க்க போன எனக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.தரையில் ஒரு முதியவர் மயங்கி கிடந்தார்.நான் செய்வதறியாது திகைத்து நின்றேன்.அங்கிருந்த ஆடவரோருவர் முதியவருக்கு முதலுதவி அளித்தார்.ஆனால் முதியவர் எழவில்லை.அதனால் நான் உடனே மருத்துவமனையுடன் தொடர்பு கொண்டேன். கண் சிமிட்டும் நேரத்திற்குள் அவசர மருத்துவ வண்டி வந்தது.சிறிது நேரத்தில் வண்டி மருத்துவமனையை முதியவருடன் அடைந்தது.அந்த முதியவருக்கு ஒன்றுமாகிவிடக்கூடதென வேண்டி வீடு திரும்பினேன்.

  என் தாயாரிடம் நடந்ததை கூறினேன்.பிறகு நான் என் தாயாருடன் மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கே என் நண்பன் பாண்டியனை சந்தித்தேன்.அவன் நடந்ததைக் கூறினான்.நான் உதவிய முதியவர் பாண்டியனின் தாத்தா என்பதறிந்து ஆச்சரியப்பட்டேன். அவன் தாத்தாவை காப்பாற்றியதற்கு நன்றி கூறினான்.நாங்கள் மகிழ்ச்சி கடலில் மூழ்கினோம்.

  LAVANYA GANESAN KIRUTHEKESH
  ST HILDAS SECONDARY SCHOOL

 2. “தீபாவளி நெருங்குகிறது. வீடு அசுத்தமாக இருக்கிறது. சுத்தம் செய்!சுத்தம் செய்!” என்று என் அம்மாவின் சத்தமான குரல் ஒருபுறம், எனக்கு பிடித்தமான நிகழ்ச்சியின் இறுதி சுற்று மறுபுறம். சுறுசுறுப்புடன் நிகழ்ச்சியை பார்த்துகொண்டிருந்த நான், வேறு வழி இல்லாமல் சோம்பேறித்தனமாக வீட்டை சுற்றம் செய்ய முடிவு செய்தேன். முதலில் சேமிப்பு அறையை(store room) சுத்தம் செய்ய அதை நோக்கி நடந்துச்சென்றேன்.பொருட்கள் நிரம்பிருந்த பெட்டி ஒன்றை எடுத்து என் அருகில் வைத்தேன். அப்போதுதான் அந்த புகைப்படத்தை நீண்ட நாள் சென்று பார்த்தேன். அது எனக்கு அந்த நாளை ஞாபகப்படுத்தியது. என் தம்பி என்னை விட்டு பிரிந்த நாள்.

  விடுமுறை என்றாலே பலபேர் குடும்பத்தொடு அல்லது உறவினர்களோடு நேரம் செலவழிக்கவே விரும்புவார்கள். அதேபோல் நானும் என் குடும்பத்தினரும் முடிவு செய்தோம். ‘சாங்கி'(changi) கடற்கரைக்கு செல்ல முடிவு எடுத்த என் பெற்றோர்கள் என் அத்தையின் குடும்பத்துக்கு அங்கு வருமாறு தகவல் சொன்னார்.நான்கு வயதான என் தம்பிக்கு கடற்கரையென்றால் மிகவும் பிடிக்கும்.

  அங்கு சென்றதும் அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். என் அத்தையின் குடும்பம் வந்த பிறகு நாங்கள் அனைவரும் சிரித்து பேசி கொண்டு இருந்தோம். பிறகு நாங்கள் அருகில் இருக்கும் ‘பத்தாமிற்கு'(Batam) செல்ல முடிவு எடுத்தார்கள். நாங்கள் அனைவரும் அந்த படகில் ஏற சென்றோம். அப்போது ஓர் சந்தேகபடும் போல ஓர் ஆடவர் நின்று கொண்டு இருந்தார். அவரை நான் பார்த்ததுபோல இருந்தது.

  என் பெற்றோர்கள் என் அத்தையிடமும் மாமாமிடவும் சத்தமாக பெசி கொண்ட இருந்தார். என் தம்பியையும் என் அத்தையின் மகளையும் என் பொறுப்பில் விட்டுவிட்டார்கள். அவர்கள் இருவரும் விளையாடிகொண்டு இருக்கும்போது நான் என் கைதொலைபேசியை பயன்படுத்திக்கொண்டு இருந்தேன். திடீரென நாங்கள் இருந்த படகின் இயந்திரம் வேலைசெய்யாமல் அந்த படகை மூழ்க வைத்தது. என் இரு கரங்களில் அவர்கள் இருவரையும் பிடித்துகொண்டு நான் என் பெற்றோர்களிடம் ஓடினேன். பிறகு ஒரு சிறிய படகு ஒன்று வந்தது. நாங்கள் எல்லோரும் அதில் ஏறினோம். எங்கள் கண் முன் எந்த படகு மூழ்கியது. சிறிது நேரம் கழித்து என் அம்மா கதற ஆரம்பித்தார். என் தம்பியை நான் அப்படகிலிருந்து இறக்கவில்லை. என் கவனகுறைவால் ஒன்றுமே தெரியாத என் தம்பியை நாங்கள் இழந்தோம்.

  நாட்கள் கழிந்தன. நான் செய்தி பார்த்துகொண்டு இருக்கும்போது நான் பார்த்த அந்த சந்தேக நபரின் குடும்ப பிரச்சனையால் அந்த படகின் இயந்திரத்தை வேலைசெய்யாதபடி செய்தார் என்று.”மேரி, அந்த புகைபடத்தை வைத்துவிட்டு சுத்தம் செய்….” என்று என் அம்மா அமைதியாக சொல்லி என்னை திரும்பவும் நினைவுக்கு கொண்டு வந்தார். அந்த ஒரு ஆடவரின் பிரச்சனையால், ஒன்னும் தெரியாத என்ன தம்பியை நான் இழந்துவிட்டேன். கவனக்குறைவால் நாம் எதைவேண்டுமானாலும் இழம்போம்.

  Noorin Ayisha
  St Hilda’s Secondary School

 3. கலாட்டா கல்யாணம்!

  என் அண்ணனின் திருமனம் நன்றாகவே நடக்கவில்லை. எடுத்தவுடனே எதிர்மறையாக பேசுகிறேன் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள். உண்மைத்தான். ஆனால் வாழ்க்கை எப்போதுமே நேர்மறையாக இருக்காது. எதிற்மரைச் சம்பவங்கள் இருக்கதான் செய்யும். அப்படி ஒரு எதிர்மறைச் சம்பவத்தை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ளப்போகிறேன்.
  முன்பு கூறியது போல், என் அண்ணனின் திருமணம் நன்றாகச் நடக்கவில்லை. முதலில் நான், அண்ணன், அம்மா, அப்பா ஆகியோர் திருமண மண்டபத்திர்குச் சென்றோம். உள்ளே நான் கண்ட காட்சி என்னை என் கண்களை நம்பவிடாமல் செய்தது. மண்டபம் மிகவும் குப்பயாகவும் அலங்கறிக்காமலும் காணப்பட்டது! வேலைகளைச் செய்ய ஆள் ஏற்பாடு செய்திருந்தோம், ஆனால் யாரையும் காணோம். இறுதியில் நாங்களே சுத்தப்படுத்தும் வேலையையும் அலங்கறிக்கும் வேலையயும் செய்தோம்.

  திருமணத்திற்கு நேரம் நெருங்கிகொண்டிருந்து, ஆனால், யாரும் வரவில்லை. இரண்டு மனி நேரம் கழித்தும் யாரையும் காணோம். வெளியில் வந்து பார்த்தபோதுதான் நாங்கள் தவறான மண்டபத்திருக்கு வந்திருந்ததை அறிந்தோம். உடனடியாக நாங்கள் சரியான மண்டபத்திற்குச் சென்றொம். அங்கே வந்திருந்த விருந்தினர்களின் முகங்களில் ஒரு பயங்கர கோபம் தெரிந்தது. நாங்கள் அண்ணனை மேடை வரை பின்தொடர்ந்தோம். மணப்பென்னின் முகத்தை அரியாத என் அண்ணன்,” அப்பா! யார் இந்தப் பொண்ணு? பாக்கப் பேய் மாரி இருக்கா?” என்று என்னிடம் கேட்டார்.”உங்கள் மனைவி,” என்று கூறியபோது அண்ணன் தன் வருங்காலத்தைப் பற்றி யோசித்து நடுங்கினார்.

  தாலி கட்டும் நேரம் வந்தது. அந்தோ பரிதாபம்! தாலியை எங்கும் காணவில்லை! அக்கினிக் குழம்பை சீரியெரியும் எரிமலையைப் போல் சீறினார் மணப்பெண்னின் அப்பா.”முதலில், மிகவும் தாமதமாக வந்தீர்கள். இப்பொழுது தாலியைத் தொலைத்து விட்டீர்கள்! அடக் கடவுளே!”

  புரோகிரர் குறுக்கிட்டார்.” என் இத்தனை வருட சேவையில் இப்படி நடந்தது முதல் முறை!” என்று கத்திவிட்டு சென்றார். புரோகிரர் இல்லாமல் திருமணம் நடக்குமா? நாங்கள் அவமானத்தோடு வீடு திரும்பினோம். நான் திருமணம் நடக்கவில்லை என்ற வருத்தத்தோடு நாற்காலியின் மீது அமர்ந்தேன். நான் என் முன் இருந்த மீதிப் பத்திரிக்கை கட்டினை கண்டு என் நெற்றியை அடித்தேன். பத்திரிக்கையை கட்ட என்ன பயன்படுத்தினார்கள் தெரியுமா? தாலியை தான்.

  தாருண் தணிகைவேல்
  கான் எங் செங் பள்ளி

 4. அப்பாவின் கதை

  என் அப்பா மலேசியாவில் உள்ள பேராக் என்னும் கிராமத்தில், அவர் தாயாருடன் வசித்து வந்தார். அப்பொழுது நிறைய ஆடுகளை என் பாட்டி வளர்த்தார். அந்த ஆடுகளை மேய்க்கும் பொறுப்பை என் அப்பாவிடம் கொடுக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் சாயங்காலம் வழக்கம் போல ஆடுகளை அடைத்து வைக்கும் இடத்தில் அடைத்து வைத்தார் என் அப்பா, ஆனால், அதில் ஒரு சில ஆடுகள் மட்டும் அங்கிருந்து தப்பித்து ஓடியது. அதனைப் பார்த்த என் பாட்டி மிகுந்த கோபத்துடன் நீ அந்த ஆடுகளை ஓட்டி வந்து இங்கு அடைக்காவிட்டால் “உனக்குச் சோறு தண்ணி எதுவும் கிடையாது” என்று கூறிவிட்டார். அதனால், என் அப்பா அந்த ஆடுகளை அங்கும் இங்கும் தேடினார். பிறகு, ஒரு ஆட்டைத் தவிர மற்ற ஆடுகளைக் கண்டு பிடித்துக் கொண்டு வந்து அடைத்துவிட்டார். என் பாட்டி “அந்த ஒரு ஆட்டையும் தேடிவர வேண்டும்” என்று மிகுந்த கோபத்துடன் கூறிவிட்டார். உடனே என் அப்பா தன் அவரது நண்பர்களைத் துணைக்கு அழைத்துக்கொண்டு வயல்வெளிக்குச் சென்று தேடினார். இரவு வெகுநேரம் ஆகிவிட்டதால் இருட்டிவிட்டது. அப்போது அங்கு அவர்களுக்கு எதிரே ஒரு உருவம் தெரிந்தது. அதன் கண்கள் சிவப்பாக இருந்தது. அதனால் பயத்தில் அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர். அந்த உருவமும் அவர்களைத் துரத்த ஆரபித்தது. அது ஒரு நரியாக இருக்கலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். அவர்கள் காட்டுக்குள் ஓடிய வேகத்தில் கை, கால்களில் கற்கள், முட்கள் அனைத்தும் குத்தியது. வேகமாக ஊருக்குள் ஓடிவந்தனர். அப்போது வெளிச்சத்தில் திரும்பிப் பார்க்கும் போதுதான் அது ஒரு நாய் என்று அவர்களுக்குத் தெரிந்தது. அதன் பிறகுதான் அவர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். மறுநாள் காலையில் அந்தத் தொலைந்துபோன ஆடு தானாகவே வீட்டிற்கு வந்துவிட்டது. இதனைப் பார்த்த என் அப்பாவுக்கு ”போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது” என்று கூறினார்.

  SUSHMITHA D/O KRISHNAN
  FAJAR SECONDARY SCHOOL

 5. அப்பா, அம்மா சொன்ன கதை

  எனது அம்மா, அப்பாவின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களைப் பற்றி அவர்கள் என்னிடமும், எனது தம்பியிடமும் பலமுறை கூறியிருக்கிறார்கள். சிங்கப்பூரில் வளரும் எங்களுக்கு, இந்தியாவில் நடுத்தர ஓரு கிராமத்து சூழலில் வளர்ந்த அவர்களின் அனுபவங்கள் மிகவும் இரசிக்கத்தக்கதாக, சுவையானதாக இருக்கும். அவற்றில் மிகப்புதுமையான, என்னைக கவர்ந்த ஒரு சம்பவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

  எனது அம்மாவுக்கு எட்டு வயதாக இருக்கும் போது, அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் ஒரு பன்றியை வளர்த்தார்களாம். அது அவர்கள் வீட்டுக்கு வந்தபோது மிகவும் குட்டியாக இருந்ததாம்.

  காலை எழுந்தவுடன் எனது அம்மாவும், அவர்களது பக்கத்து வீட்டுத் தோழிகளும் அந்தப் பன்றிக்குட்டி கட்டியிருந்த இடத்தை சுத்தம் செய்வார்களாம். பிறகு ஒரு கழனியில் (கல்லால் செய்த பாத்திரம் போன்ற வடிவம்) , அது குடிப்பதற்காக அரிசி களைந்த நீர், காய் கழுவிய நீர் (அதற்குக் கழனித் தண்ணீர் என்று பெயர்) ஆகியவற்றை ஊற்றுவார்களாம். முந்தைய நாள் இரவே புளியங்காய் கொட்டைகளை இரும்பு சட்டியில் மணலில் இட்டு வறுத்து , அதன் தோலை நீக்கி, தண்ணீரில் ஊறவைத்து அதையும் அந்தக் கழனித் தண்ணீருடன் சேர்த்து பன்றிக்கு சாப்பிட வைப்பார்களாம். ஏனென்றால், அந்தக் கொட்டைகளில் இரும்பு சத்து அதிகமாக இருக்குமாம்.அதன் பிறகு தான் பள்ளிக்கே செல்வார்களாம்.

  சில மாதங்களில் பன்றி கொழு கொழு என்று வளர்ந்து பெரியதாக ஆனதாம். பிறகு அதை ஒரு நேர்த்திக் கடனுக்காக கோயிலில் விட்டு விட்டார்களாம்.

  தொலைக்காட்சி, கணினி விளையாட்டு என்று நேரத்தை வீணடிக்காமல் , நாமும் பெற்றோர்களுக்கு உதவியாகவும், வெளிப்புற நடவடிக்கைகளில் பங்கேற்றும் வாழ்க்கைக்குத் தேவையானவற்றை கற்றுக் கொள்ளவேண்டும் என்று உறுதி பூண்டேன்.

  தேஜல்
  சுவா சு காங் உயர்நிலைப்பள்ளி

 6. என் தந்தையின் காலத்தில் அவருக்கு நிறைய மறக்க முடியாத சம்பவங்கள் நடந்தன.சில நேரங்களில்,என் தந்தையின் சிறுவயது குறும்புத்தனமான செயல்களை பார்த்து,”இவர் இப்படியெல்லாம் கூட இருப்பாரா?” என்று எனக்கு தொடரும்.அதில் என் தந்தையால் மறக்கமுடியாத ஒரு சம்பவத்தை இப்போது நான் உங்களிடம் பகிர்ந்துகொள்ள போகிறேன்.

  அப்போது என் தந்தைக்கு வயது பதினொன்று.அவர் ஒரு கிராமத்தில் வளர்ந்து வந்தார்.அன்று ஒரு நாள்,என் தந்தை தன் நண்பர்களுடன் ஆடு மேய்க்க காட்டிற்கு சென்றிருந்தார்.அவர் அவருடன் ஒரு வைக்கோல் குச்சியையும் கொஞ்சம் அரிசியும் வெள்ளமும் எடுத்து கொண்டு சென்றிருந்தார்.

  காட்டிற்கு சென்றவுடன், அவரும் அவருடைய நண்பர்களும் எடுத்து வந்த அரிசியையும் வெல்லத்தையும் மண் சட்டி ஓட்டில் வறுத்து உருண்டையாக்கினார்கள்.பிறகு சிலர், மரத்தில் ஏறி தேங்காய்கள் பறித்தனர். அந்த தேங்காயில் இருக்கும் மூன்று ஓட்டைகள் வழியாக அந்த அரிசி வெள்ளம் உருண்டையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு ஓட்டையை அடைத்தனர்.அந்த தேங்காயின் மேல் மண் சேற்றை போட்டு,மர கட்டைகளை வைத்து நெருப்பு உருவாக்கி அந்த தேங்காயை நெருப்பின்மேல் வைத்தனர்.பிறகு அதை வைத்து விளையாடலாம் என்று நினைத்தனர்.ஆனால் யாருக்கு தெரியும் சில வினாடிகளில் ஒரு விபரீதம் நடக்கும் என்று?

  திடீரென்று,அந்த தேங்காய் சூடு தாங்காமல் வெடித்து அதன் கூர்மையான பாகங்கள் என் தந்தையைத் தாக்கின.எதிர்பாராத விதமாக என் தந்தையின் மூக்கில் ஒரு பகுதி வெட்டப்பட்டிருந்தது.அவர் மூக்கிலிருந்து இரத்தம் கொட்டியது.அவருடைய நண்பர்கள் அதை பார்த்து அவரை ஊர் வைத்தியரிடம் கொண்டு சென்றனர்.ஊர் வைத்தியர் என் தந்தையுடைய மூக்கில் மூன்று தையல்கள் போட்டார்.அந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவரமுடியாமல் தவித்த என் தந்தைக்கு அன்று இரவு முழுக்க பயங்கரமான காய்ச்சல் வந்து படக்கூடாத துன்பத்தையும் அவர் பட்டு இன்று ஒரு நல்ல முன்னுதாரணமாக உள்ளார்.
  என்னுடைய முன்னுதாரணம் என் தந்தைதான்.இந்த கதையை படித்து சிலர் மாறுவர் என்று நான் நம்புகிறேன்.

  ரெத்தினம் ரெபேக்கா
  சுவா சூ காங் உயர்நிலை பள்ளி

 7. “நண்பனில்லா வாழ்க்கை வண்ணமில்லா வானவில் போலாகும்”.அதுபோல நண்பர்கள் நம் வாழ்க்கையில் ஒரு முக்கிய அம்சமாக அமைந்துள்ளனர்.நண்பர்களே நம் வாழ்வினை ஒளியூட்டும் விளக்காகவும் விளங்குகின்றனர்.ஆதலால் நண்பர்களோடு பொழுதைக் கழிக்க பலருக்கும் பிடித்தமானவை ஒன்றாகும்.நண்பர்களுடன் படிப்பது, உணவங்காடிகளுக்குச் செல்வது ,பிறந்தநாள் கொண்டாடுவது என்று நண்பர்களோடு கழிக்கும் பொழுதுகள் மறக்கயிலாதவை. அதில் ஒன்றை நான் இக்கதையில் எழுதப்போகிறேன்.

  நான் என் நண்பர்களுடன் ஒரு புதிர் போட்டிக்குச் சென்றோம். அப்போட்டி ராபில்ஸ் பள்ளியில் நடைப்பெறவிருந்ததால் நாங்கள் அனைவரும் எங்கள் ஆசிரியருடன் அவ்விடத்திற்குச் சென்றோம். இடத்தை அடைந்தவுடன் நாங்கள் எங்களுடைய பெயர்களை பதிவு செய்துவிட்டு போட்டிக்குச் சென்றோம். புதிர்ப்போட்டி தொடங்கியது. நாங்கள் அனைவரும் குழுவுணர்வோடு இணைந்து செயல்பட்டோம். சில கேள்விகளுக்கு தீவர சிந்தனை தேவைப்பட்டது.தமிழ் வரலாறு மற்றும் தமிழ் இலக்கியங்கள் பற்றியும் பல கடினமான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.ஆனால்,நாங்கள் அனைவரும் துவண்டுவிடாமல் விடாமுயற்ச்சியுடன் செயல்பட்டோம்.

  அதற்கு ஏற்ப நாங்கள் அப்போட்டியில் இரண்டாம் பரிசைப் பெற்றோம். அதுவே எங்களுக்கு பெரிய சாதனையாகயிருந்தது. நாங்கள் அனைவரும் உல்லாச வானில் சிறகடித்துப் பறந்தோம். புன்னகை பூத்த முகங்களோடு நாங்கள் ஒருவருக்கொருவரை கட்டி அணைத்துக்கொண்டோம். ஒற்றுமையின் பலன் எனக்கு அப்பொழுதுதான் தெளிவாக தெரிந்தது. அன்று எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்ததுமட்டுமில்லாமல் நண்பர்களோடு பொழுதுப் போனதே தெரியவில்லை.

  சமிக்ஹா
  காமன்வெல்த் உயர்நிலைப்பள்ளி

 8. வரம் பெற்றேன்…..

  நிலவின் ஒளி என் சன்னலிலிருந்து மின்னியது. அந்த ஒளி என் முகத்தில் பட்டதால் நான் திடீரென்று ஆழமான தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்டேன். மீண்டும் உறங்க முயன்ற எனக்கு தூக்கம் வரவேயில்லை. இதனால் நான் என் அறையிலிருந்த தொலைக்காட்சியைத் திறந்து சில படங்களை பார்த்தேன். அப்போது, என் தொலைக்காட்சி மின்னியது.
  திடீரென ஒரு ஆடவர் என் தொலைக்காட்சிநிலிருந்து வெளியேறினார். பயந்த நான் இது கனவு என்று நினைத்து என் கண்களை விழித்தேன். ஆனால் அந்த ஆடவர் அங்கேயே இருந்தார். “நீங்கள் யார்? “என்று கேட்டேன். அவர் “ நான் கடவுள் “ என்று கூறினார். அந்த ஆடவர் பொய் கூறினார் என்று நினைத்து உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டேன். அவர் என்னிடம் பல கேள்விகளைக் கேட்டு பேசிக்கொண்டிருந்தார். பிறகு உனக்கு ஒரு வரம் தருகிறேன் நீ எதை வேண்டுமானாலும் கேள் அதை உண்மை ஆக்கிவிடுகிறேன்’’ என்று கூறினார். நான் சில நிமிடங்கள் யோசித்தேன். நான் கேட்கும் வரம் என் வாழ்க்கையையே மாற்றிவிடக்கூடியதாக இருக்கவேண்டும் என்று சிந்தித்துப் பிறகு கேட்க முயன்றேன்….
  என் பெற்றோர் இருவரும் வாரம் முழுவதும் வேலைக்குச் சென்று விடியர் காலையில் தான் வருவார்கள். அவர்கள் என்னுடன் நேரத்தை செலவழிக்க முடியாததால் விலையுயர்ந்த பொருட்களை வாங்கிக் கொடுப்பார்கள். ஆனால் அது எனக்கு மகிழ்ச்சிக் கொடுக்காது. ஆகவே என் பெற்றோர் என்னுடன் நீண்ட நேரத்தை செலவழிக்க வேண்டும் என்பதையே என் வரமாக கேட்கிறேன். என்றேன் இதுவா உன் வரம் அப்படியே ஆகட்டும் என்று கூறி மறைந்தார். எல்லாம் ஒரு கனவு என்று நினைத்து தொலைக்காட்சியை அடைத்துவிட்டு படுக்கச் சென்றேன்.

  மறுநாள் காலையில் என் அப்பா என்னிடம் வந்து” வா நான் உன்னைப் பள்ளிக்கு அழைத்துச் செல்கிறேன். என்று கூறினார். அப்போது தான் இரவில் நடந்தது கனவல்ல உண்மை என்று புரிந்தது.

  Suriya prashan uthayasuriyan
  Jurong Secondary School.

 9. நான் சொன்னா நீங்க நம்பவே மாட்டீங்க. ஒரு நாள் நான்…

  மறுபடியும் ஒரு கோலை தவறவிட்ட சோகத்திலும் களைப்பிலும் பூங்காவிலிருக்கும் நாற்காலியில் கண்மூடி அமர்ந்திருந்தபோது, ஒரு மாதிரியான வதங்கிய மலரோடு புளித்த பால் கலந்த வாசம் நாசியை அறுத்தது. வாசம் வந்த திசை நோக்கி கண் திறந்த போது எனக்கு மிக அருகிலேயே ஒருவர் அமர்ந்திருந்தார்.
  “யார் நீங்கள்?” என்று நான் அவரிடம் கேட்டேன். புன்னகைத்துக்கொண்டே அவர், “நான் தான் கடவுள்,” என்றார். நகை பட்டு கடை விளம்பரத்தில் வருகிற அத்தை மாதிரியில்ல எல்லா கடவுளும் இருப்பாங்க ?! நீங்க என்ன டான்னா கழுத்துல உத்திராட்ச கொட்டையும் அழுக்கு வேட்டியுமா இருக்கீங்க” அப்டின்னு கேட்டேன் அதுக்கு அவரு என்ன சொன்னாருன்னு தெரியுமா ” சில சில பிரசனைகளால் இப்போ நான் தலைமறைவா இருக்கேன்” – அட கவுளே!
  என்னால் நம்பவே முடியவில்லை. வழக்கம் எல்லா அதிசயங்களையும்.
  நீங்க கடவுளா?! “என்ன நக்கலா?” என்று கேட்டேன்.
  “முடிஞ்சா சோதிச்சுப் பாரு…” என்றார். “கேள்விகளை நீ கேக்கிறியா, இல்லை நான் கேட்கவா?” என்றதும் நான்
  “இல்ல, இல்ல. நானே கேக்குறேன் ஏன்னா எனக்குக் கேட்க மட்டும்தான் தெரியும்,” என்று கூறினேன். பின் நான் கேள்வி கணைகளை தொடுத்தேன்…
  “பிரிக்க முடியாதது என்னவோ?”
  “தமிழும் சுவையும்.”
  “பிரிக்கக்கூடாதது?”
  “எதுகையும் மோனையும்.”
  “சேர்ந்தே இருப்பது?”
  “வறுமையும் புலமையும்.”
  நான் கேட்ட மற்ற எல்லா கேள்விகளுக்கும் சரியாகவே பதிலளித்தார் .
  “ஐயா! நீர் கடவுள்! நீர் கடவுள்!” என்று கூறினேன்.
  “இவ்வளவு பெரிய ஆள் நீங்க. என் தொலைபேசி எண்ணைக் கண்டுபுடிச்சு ‘வாட்ஸ்ஆப்’ல ஒரு செய்தி அனுப்பியிருக்கலாமே ?”
  “எங்க இடத்துல ‘வாட்ஸ்ஆப்’ தடை செஞ்சுட்டாங்க,” என்றார் அவர். மிகவும் இயல்பாக அவர் பேசத் தொடங்கினர்.
  (ஐயோ பவாமுன்னு நெனைச்சிகிட்டேன்)
  “உன்னைப் பத்தி சொல்லு. நீ யாரு, எங்க படிக்கிற,” என்று என்னிடம் கேட்டார்.
  “என் தாத்தா விவசாயியாக வாழ்ந்தவர். ஆனா, என் அப்பா ஒரு பன்னாட்டு நிறுவனத்துல வேலை பாக்குறார். அம்மா ஒரு இல்லத்தரசி, சுட்டியாய் ஒரு தம்பி. நான் யூனிட்டி உயர்நிலைப் பள்ளியில படிக்கிறேன். நமக்கு படிப்புல எல்லாம் ஒன்னும் பெரிய ஆர்வமில்லே. ஆனா, இசை, இலக்கியமுன்னு நமக்கு இன்னுமொரு வழியிருக்கு. ஆனாலும் எங்க பள்ளிக்கூடத்துல அதுக்கான இடம் ஓரளவுக்கு இருக்குன்னே சொல்லலாம்.”
  “இவ்வளவு பேசுறீங்களே, உங்கள பத்தி சொல்லுங்க.” என்றேன்.
  “என்ன பத்தி சொல்லறத்துக்கு ஒன்னுமேயில்லை, ஆனா எல்லாமே நான்தான்னு வைச்சுக்கோயேன்.” (“நம்மளவிட மோசமானவரா இருப்பாரோ,” ன்னு நெனைச்சுகிட்டேன்)
  “வந்து நேரமாச்சு, அப்ப நான் கிளம்புறேன் வேலையிருக்கு. சரி, அடுத்து நம்ம எப்ப சந்திக்கலாம்?” என்றார்.
  “ஐயோ மறுபடியுமா?!” என்றேன்.
  “சரி, சரி…நான் கெளம்புறதுக்கு முன்னாடி உனக்கு ஏதாவது வரம் வேணுமுன்னா கேள். தந்துட்டு கிளம்புறேன்,” என்றார் (நான் எனக்குளேயே சிரித்துக்கொண்டேன் அவரே தலை மறைவா இருக்காறாம் இதுலே நமக்கு வரம் கொடுக்கோப்போறாராம்).
  நான், “ஓ, அப்படியா!. உங்களால் முடிந்தால், இந்த உலகத்துல விவசாயத்தையும், விவசாயிகளையும் பிரச்சனைகள் இல்லாமல் காப்பாத்த முடியுமா?”
  கடவுள் பதிலேதும் சொல்லாது என் கண்பார்வையிலிருந்து மறைத்தார்…
  (‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’ என்று புதுமைப்பித்தன் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார்.)

  சூரியநிலவன்
  யூனிட்டி உயர்நிலைப் பள்ளி

 10. கடவுளிடம் பேசிய கதை

  இறைவனிடம் இறந்தவர்கள் மட்டுமே பேசமுடியும் என்று மக்கள் நினைப்பது உண்மை இல்லை!! யாராக இருந்தாலும் சரி, ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமின்றி கடவுளிடம் பேசமுடியும். சிலர் கடவுளிடம் பேசுவதற்கு வாய்பில்லை, ஆனால் அந்த வாய்ப்பு எனக்கு ஒரு முறைக் கிடைத்தது. ஆனால் கடவுளிடம் பேசுவதற்கு முன்பாக நானாக நான் இல்லை தாயே.. நல்வாக்கு சொல்வாயே நீயே… என்ற நிலையில் என் மனம் எண்ணமில்லாமல் நெருப்பிலிட்ட உப்பு போல உள்ளம் வெடித்தும், வெல்லம் போல உருகியும் வேதனையில் வாடிக்கொண்டிருந்தேன். இந்நிலையில் நான் கடவுளை நேரில் கண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் என் இதயமும் மனமும் தெளிந்த பிறகு என் மனதின் உள்ளுணர்வு இழந்து உளறிக்கொண்டிருந்தேன். அப்போது இறைவன் நான் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டிப் பேசியது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நான் என்னை அன்புடன் கவனித்துக் கொள்ளும் பாட்டியையும் தாத்தாவையும் படுத்தும் பாட்டை விவரித்தார்.. என் வீட்டில் பொருட்களை ஒளித்து வைத்து பாட்டியைத் அழவைத்தக் காட்சி.. பள்ளியில் செய்த தவற்றைச் சுட்டிக்காட்டியது போன்றவைகள் எல்லாம் நினைவிற்கு வந்து என்னை மிகவும் நல்லவனாக இருக்க அறிவுரை கூறியபோது.. நான் இனித் தவறுகள் செய்ய மாட்டேன் என்று மன்னிப்புக் கேட்டு போது என் கண்ணீர் துளிகள் என் நெஞ்சில் பட்டதும்…. திடீரென்று கண் விழித்தேன் … அப்போது என் பாட்டி பள்ளிக்கு நேரமாச்சு!!! என்று என் மீது தண்ணீர் தெளித்து விட்டார்… கிளவியை …. பார்…. உ……

  சமிரா பேகம்
  உயர்நிலை 3 (தொழில்நுட்பம்)
  யுவான்சிங் உயர்நிலைப் பள்ளி

 11. நான் தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் தேர்வானது என்னை மகிழ்ச்சியின் எல்லையில் நிறுத்தியது. இம்மகிழ்ச்சியை என் குடும்பத்தாரிடமும் ,உறவினர்களிடமும் ,நண்பர்களிடமும் தெரிவித்தபோது அவர்கள் என்னை பாராட்டியதுடன் எனக்கு ஊக்கத்தையும், தன்னம்பிக்கையும் ஊட்டினர் .அடுத்து வருகின்ற அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் நன்றாக விளையாடி நாட்டிற்கு பதக்கத்தை பெற்றுதர வேண்டும் என்ற எண்ணத்தை என்னில் விதைத்தார்கள்.என் குழுவில் உள்ள அனைவரின் முகபாவங்களையும் அவர்களுடைய நடவடிக்கைகளையும் நாங்கள் ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்து கொண்டோம்.எங்களின் பயிற்சியாளர் வாயிலாக எங்களுக்டையே விட்டுக்கொடுத்தல் ,விளையாட்டின் சூட்சமத்தையும் நன்றாக தெரிந்து கொண்டோம். ஒவ்வொரு நாளும் எங்கள் அணியின் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிக்காக அதிகாலை 4 .30 மணிக்கெல்லாம் எழுந்து எனது உடற்பயிற்சி முடித்துவிட்டு கைப்பந்திற்கானபயிற்சியை தொடங்கினோம் . நாங்கள் பல்வேறு அணியினருடன் பலச்சுற்றுகளில் விளையாடி ஒவ்வொரு முறையும் வெற்றியையே தழுவி இறுதி போட்டியில் நுழைந்தோம் . மறுநாள் என் மனதில் இனம் புரியாத பயம் தொற்றிக்கொண்டது.எதிர் அணியின் குழு தலைவி என்னுடைய சிறு வயது தோழி . அவளும் நானும் சமமாக விளையாடுவோம்.என் தந்தையின் பணி மாறுதலினால் நான் சிங்கப்பூர் வந்து விட்டேன். அவள் அடிக்கும் ஒவ்வெரு பந்தையும் திருப்பி அனுப்பும் வலிமை என்னிடம் உள்ளதா? என்ற சந்தேகத்துடன் கண் அயர்ந்தேன்.மறுநாள் காலை நாங்கள் அனைவரும் சேர்ந்து வெற்றிக்கான உறுதிமொழியை எடுத்துக்கொண்டு களத்தில் இறங்கினோம் .இறுதி சுற்றின் ஆரம்பம் நன்றாக சென்றது.ஆனால் நடுவில் ஆட்டம் 10-15 என்று இருந்தபோது எங்கள் அணியில் ஒருவருக்கு கையில் பலத்த அடி.ஆனாலும் நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை . பிறகு ஆட்டம் 24-24 இருந்தபோது பார்வையாளர்கள் அனைவரும் ‘சிங்கப்பூர் ‘ என்று ஆரவாரமாக கத்தினார் . கடைசி ஸ்பைக் என்னுடையது . போட்டி எங்களுக்கு சாதகமாக அமைந்தது.இந்த நாள் என் வாழிவில் மறக்க முடியாத நாளாக அமைந்தது .

  லுபிஃனா ஜோஹார் ரபீக் முகமது
  செயின்ட் ஹில்டா உயர்நிலை பள்ளி

 12. இசையில்லா வாழ்வை என்னால் நினைத்துக் கூட பார்க்கக் கூட முடியவில்லை. நான் எப்போதும் இருண்ட உலகத்தை மட்டுமே பார்க்கிறேன். காரணம் நான் கண் பார்வை பெறாத அதிர்ஷ்டசாலி. சிறுவயதிலிருந்தே எனக்குத் தாயின் அன்பும் கிடைத்ததில்லை. எனக்கு உயிரைக் கொடுத்து விட்டு தன் உயிரை விட்டவர் என் தாய் இருப்பினும், தாய் இல்லாத குறையை நிவர்த்தி செய்தவர் என் தந்தை. கல்விக்குப் பின் என் தந்தையைப்போல் நானும் சம்பாதிக்க வேண்டும் எனத் தீர்மானித்தேன். இசையின் மீது நான் கொண்ட ஆர்வத்தினாலும், திறமையினாலும் பல கச்சேரிகள், போட்டிகளுக்குச் சென்றாலும் என்னால் அதிகப் பணம் ஈட்ட முடியவில்லை. இதை எண்ணி நான் வருந்தாத நாட்களே இல்லை. என்னிடம் உள்ள குறையினால் எங்கே நான் வாழ்க்கையில் தோற்று விடுவேனோ என்ற பயம் எனக்குள் வர ஆரம்பித்தது. என்னிடம் இருக்கும் திறமையை மேம்படுத்திக் கொள்ள பல வழிகளை மேற்கொண்டேன். பலநாள் முயற்சிக்குப் பின் ஒரு பிரமாண்டமான நிகழ்ச்சியில் பாடுவதற்கான வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. மேலும், அந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இந்த வாய்ப்பினை நான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக நான் இராபகலாக உழைத்தேன் நடிகர் தனுஷ் வருவதாக இருந்தது. நிகழ்ச்சி நாள் வந்தது. என்னால் நடிகர் தனுஷைப் பார்க்க முடியவில்லை. என் நெஞ்சம் படபடத்தது. ஆனாலும் ஆரவாரத்தின் அளவை வைத்து என்னால் கூட்டத்தின் அளவைக் கணிக்க முடிந்தது. கிலி என் மனதைக் கௌவியது. எனக்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு என்னால் முடிந்த மட்டும் சிறப்பாகப் பாடினேன். அதுவரை யாருக்கும் கிடைக்காத கைதட்டலும் ஆரவாரமும் காதைப் பிளக்கும் வண்ணம் கேட்டது.
  முடிவுகளை அறிவிக்கும் நேரம்……… என் வயிற்றில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்தன. முதல் பரிசு ……….. என் பெயர் அறிவிக்கப்பட்டது. என் கண்களில் கண்ணீர் அருவியாய் கொட்டியது. பின் தொகுப்பாளர், நடிகர் தனுஷ் என்னை நோக்கி வருவதாகக் கூறினார். தனுஷ் ஒலிபெருக்கியில் என்னைப் பற்றியும் நான் பாடிய “ ஒவ்வொரு பூக்களுமே…………… “ என்ற பாடலைப் பற்றியும் பெருமையாகப் பேசினார். அவர் அடுத்து எடுக்கவிருக்கும் திரைப்படத்தில் எனக்குப் பாடுவதற்கு ஒரு வாய்புப்க் கொடுப்பதாகவும் வாக்களித்தார். அத்தருணத்தில் நான் வானத்தில் பறப்பதைப் போல் உணர்ந்தேன். இம்மகிழ்ச்சியான தருணத்தில் என்னைப் பெற்ற தாய் என்னுடன் இல்லையே என வருந்துகிறேன். ஆனால் அவர் வானால் ஏதோ ஓர் இடத்தில் நட்சத்திரமாய் இருந்து என்னை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

  SANKARAMANI KEERTHANA
  Riverside Secondary School

 13. “இசைக்கலைஞர் மாலாவை மேடைக்கு அழைக்கிறோம்” என இசை நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அறிவித்தார். நான் உற்சாகத்துடன் எழுந்து மேடையை நோக்கி நடந்தேன். பார்வையாளர்களின் கரவோசை என்னை மேலும் ஊக்கப்படுத்தியது. இது என் முதல் மேடை அனுபவம். பதற்றமும் மகிழ்ச்சியும் கலந்த நிலையில் நான் முன்னோக்கிச் செல்கையில் என் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.

  தொலைக்காட்சியில் இசை நிகழ்ச்சி என்றாலே எல்லா வேலைகளையும் அப்படியே போட்டுவிட்டு மெய்ம்மறந்து இரசிப்பேன். பல நாட்களாக இதைக் கவனித்துக் கொண்டிருந்த என் அம்மா இசை வகுப்பில் சேரும்படி என்னை ஊக்கப்படுத்தினார். ஒரு பக்கம் ஆர்வமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் என்னால் முடியுமா? என்ற சிந்தனை என்னைத் தயங்க வைத்தது. ஆனால் அம்மா தந்த தைரியத்தால் அந்த எண்ணத்தைத் தூக்கி எறிந்துவிட்டு ஒருகை பார்த்துவிடலாம் என எண்ணி இசை வகுப்பில் சேர்ந்தேன். ஆனால் நான் நினைத்தது போல இசையைக் கற்பது அவ்வளவு எளிதாக இல்லை. நிறைய சவால்களைச் சந்தித்தேன். மனம் தளர்ந்த போதெல்லாம் அம்மா பின்வாங்கக் கூடாது என்று என்னை ஊக்கப்படுத்தினார்.

  என் பலநாள் உழைப்பு வீண்போகவில்லை. இதோ இன்று இந்தப் பிரம்மாண்டமான மேடையில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. “சிறப்பாகச் செய்ய வாழ்த்துகள் மாலா!” என்ற தொகுப்பாளரின் குரல் என்னை நினைவிற்குக் கொண்டு வந்தது. இறைவனை வேண்டி என் திறனை வெளிப்படுத்தினேன். பாடி முடித்ததும் எழுந்த கரவொலி அரங்கத்தையே அதிர வைத்தது. அது என் செவிகளில் தேனாகப் பாய்ந்தது. மற்ற பாடகர்கள் என்னைக் கைகுலுக்கி பாராட்டினர். கனவோ நனவோ என பிரம்மிப்பில் மெய்ம்மறந்து நின்றேன். விடா முயற்சியும், கடின உழைப்பும், தடை வந்தாலும் தளராத உள்ளமும் இருந்தால் கனவுகள் கைகூடும் என்பதை உணர்ந்தேன். ஆனந்த கண்ணீருடன் நின்ற அம்மாவின் முகம் என் கண்களில் தெரிந்தது.

  ஷமீரா
  செம்பவாங் உயர்நிலைப் பள்ளி

 14. இரயில் பெட்டியில் பூனைக்குட்டி

  ஒருநாள் நான் எப்போதும்போல் இரயிலில் ஏறி வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தேன். அப்போது எனக்குக் களைப்பு ஏற்பட்டதால், இரயிலில் சோர்வாக அமர்ந்திருந்தேன். எனக்கு முன் நேராக இருந்த இருக்கையில் கருப்பு உடை அணிந்த ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் இருக்கைக்குக் கீழ் ஒரு கருப்புப் பெட்டி ஒன்று இருந்து. அவர் என்னையும் மற்றவர்களையும் திரும்பத் திரும்ப பார்த்தார். அவருடைய பார்வை எல்லோரையும் முறைத்துப் பார்த்துக்கொண்டிருப்பது போல் இருந்தது. நானும் அந்தக் களைப்பிலும் அவ்வப்போது அந்த ஆடவரையும் அவர் இருக்கைக்குக் கீழே உள்ள கருப்புப் பெட்டியையும் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு சில நிறுத்தங்களுக்குப் பிறகு அவர் எழுந்து இரயிலைவிட்டு இறங்கப் போனார். ஆனால், அவர் அந்தக் கருப்புப் பெட்டியை எடுக்கவில்லை. நான் உடனே அந்தப் பெட்டியை எடுத்து அவர் வெளியேறுவதற்கு முன்பு அவரிடம் நீட்டினேன். ஆனால், என்ன ஆச்சரியம் அவர் ‘இந்தப் பெட்டி என்னுடையது இல்லை’ என்று கூறிவிட்டு விறுவிறுவென வெளியேறினார். குழப்பமாக இருந்த நான் அந்தப் பெட்டியைத் திறக்க முயன்றேன். அப்போது அந்தப் பெட்டியிலிருந்து சத்தம் வந்தது. நான் அதிர்ச்சியில் சிலையாய் நின்றேன். என் மனம் ‘படக் படக்’ என்று தாளம் போட்டது. என்னுடன் இருந்த மற்ற பயணிகளோ திறக்காதே இரயில் ஊழியர்களிடம் சொல்லிவிடலாம் என்று தடுத்தார்கள். இருப்பினும், கைகள் நடுங்க நான் அந்தப் பெட்டியைத் திறந்தேன். அந்தப் பெட்டியில் நான்கு பூனைக் குட்டிகள் ஒன்றின் மேல் ஒன்று ஏறிக்கொண்டு வெளியேற முயற்சித்தன.

  மஸ்வின் சுமையா
  உயர்தமிழ் இரண்டு
  சி ஹெச் ஐ ஜே காத்தோங் கான்வெண்ட் (UPTLC)

 15. தொலைபேசித் திருடன்

  அன்று திங்கட்கிழமை. நான் மிகவும் சோர்வாக நடந்தேன். வாரத்தின் முதல்நாள் காலை நேரம் என்பதால், எல்லாப் பேருந்துகளிலும் மிகவும் கூட்டமாக இருந்தது. நான் ஒரு பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள விரைவு போக்குவரத்து நிலையத்திற்குச் சென்று இரயில் வண்டியில் முண்டியடித்து ஏறினேன். அங்கு உட்காருவதற்கு இடமில்லை. என்னைப் போலப் பள்ளிக்குச் செல்லும் நிறைய மாணவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். இன்று காலையிலேயே இப்படி ஒரு தண்டனையா? எனப் பெருமூச்சு விட்டுவிட்டு நான் இரயில் வண்டியின் கதவு எப்போது திறக்கும் என்று வைத்த கண் வைத்தபடிப் பார்த்தேன். அங்கு நகைப்பூட்டும் முகமூடி போல் ஒன்றை அணிந்துகொண்டு ஒருவர் ஏறினார். அவர் பின்னாலேயே மற்றொரு ஆடவரும் ஏறினார். இரண்டு பேர் கைகளிலும் ஒவ்வொரு பெட்டி இருந்தது. நான் அவர்களை ஏதோ குழந்தைகளை மகிழ்ச்சியூட்டும் ‘மேஸிக் ஷோ’ மனிதர்கள் என்று எண்ணினேன். ஆனால், அவர்களுள் ஒருவர் அங்கிருந்த பயணி ஒருவரின் பையிலிருந்து ஒரு தொலைபேசியை எடுத்துக்கொண்டு அப்பாவி போல நின்றுகொண்டிருந்தார். நான் இதனைக் கவனித்துக்கொன்டிருந்தேன். உடனே, நான் என் தொலைபேசியின் வழி காவலைரைத் தொடர்பு கொண்டு பேசினேன். சிறிது நேரத்தில் பக்கத்தில் உள்ள நிலையத்தில் இரயில் வண்டி நின்றது. அப்போது கவலர்கள் இரயில் வண்டிக்குள் விரைந்து வந்து அந்தத் திருடர்களைக் கைது செய்தார்கள். நான் துணிச்சலான செயல் செய்தாலும் அன்று பயந்துகொண்டே பள்ளிக்குச் சென்றேன்.

  ஜன்னத்துல்
  உயர்தமிழ் இரண்டு
  சி ஹெச் ஐ ஜே காத்தோங் கான்வெண்ட் (UPTLC)

 16. அவர்களை பார்க்க பார்க்க எனக்கு சந்தேகம் கூடிக் கொண்டே இருந்தது அச்சமயத்தில், திடீரென்று “படார்!” என்ற சத்தம் கேட்டது. நானும் திரும்பி பார்த்தேன், அப்போது ஓர் ஆடவர் அவரின் நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே கிடந்தார். அதை பார்த்த எல்லாரும் வாயடைந்து நின்றார்கள். யாவருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்த நேரத்தில் நான் கவனித்து கொண்டிருந்த அந்த இரண்டு ஆடவர்கள் ஓடி வந்தார்கள். அதை பார்த்த நான் அவர்கள் எதாவது தவறு செய்ய போகிறார்கள் என்று நினைத்து அவர்களை நான் பலமாக கீழே தள்ளினேன். அவர்கள் உடனடியாக எழுந்து அங்கு மயங்கி கிடக்கும் ஆடாவரிடம் சென்றார்கள். நானும் அவர் பின் சென்றேன். நான் அவர்களை சந்தேகத்துடன் பார்பதே கண்ட அவர்கள், அவர்களின் மருத்துவ ஆதார அட்டையே என்னிடம் காட்டினார்கள். அப்போதுத்தான் அவர்கள் மருத்துவர்கள் என்று எனக்கு தெரிய வந்தது, எனக்கு மிகவும் அவமானம் ஆனது. உடனே அவர்களின் கருப்பு பெட்டியிலிருந்து மருத்துவ பொருட்களை எடுத்து அந்த ஆடவரை காப்பாற்றினார்கள். எனக்கு மிகவும் அவமானம் ஆனது. நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்டேன்.

  Raisha Thahsin
  Greenridge Secondary School

 17. கற்பனை சிறகடித்த நாடு

  சிறு வயதில் இருந்தே லண்டனை சுற்றிப்பார்க்க எனக்கு விருப்பம். நான் என் தந்தையிடம் பலமுறை கெஞ்சினேன். ஆனால், பணப்பற்றாக்குறை காரணமாக அவர் என்னை போக விடவில்லை. நான் லண்டனைப் பற்றி நினைத்துக்கொண்டே தூங்கச் சென்றேன்….

  என்ன ஆச்சரியம்…என் குடும்பம் லண்டன் அய் அருகே நின்றகொண்டிருந்தோம். லண்டன்அய் ஒரு பிரபல மாபெரும் சக்கரம். அதில் பல கூண்டுகள் இருந்தன. ஒவ்வொரு கூண்டிலும் இருபத்திஐந்து பேர் அமரலாம். அது மிக மெதுவாக சுற்றியது. எங்கள் கூண்டு உயரத்திற்க்கு என்றது. ஆஹா! லண்டன் நகரம் வண்ணமயமாக காட்சி அளித்தது. பிறகு நாங்கள் லண்டன் வெள்ளை கோபுரத்திற்க்கு சென்று இங்லாந்து அரசர்களின் ஆடைஅணிகலன்கள், ஆயுதங்கள் போன்றவற்றை ஆர்வத்துடன் பார்த்தோம். பிறகு ஆல்பர்ட் நினைவு ஆலயத்திற்க்கு சென்றோம் .இதை விக்டோரியா ராணி தம் கணவர் ஆல்பர்ட்டுக்காக கட்டினார். பிறகு நாங்கள் பக்கிங்காம் அரண்மனையை அடைந்தோம். அங்கே படை வீர்ர்கள் பணிமாற்றம் நிகழ்ச்சியை பார்த்தோம். மிகவும் பிரமிப்பாக இருந்த்து. பிறகு நாங்கள் நாடளுமன்றத்தை காணச்சென்றோம். கடைசியாக கோபுர பாலத்தை அடைந்தோம். என்ன ஆச்சரியம் இரண்டு கோபுரங்களுக்கு இடையில் பாலம் கட்டப்பட்டிருந்த்து .நான் மிகவும் உற்சாகமாக அடிமேல் அடிவைத்து கோபுர பாலத்தில் நடந்துக்கொண்டிருந்தபோது…

  பலத்த சத்தம் கேட்டு திடீரென்று கண்விழித்த எனக்கு ஒன்றும் புரியவில்லை. இரவில் குடித்த பால் குவளை காற்றில் கீழே விழுந்து உருண்டோடியது. நான் கண்டது கனவு என்று தெரிந்த்து. இருந்தாலும் லண்டன் ஆசை கனவிலாவது நிறைவேறியதை எண்ணி மனதிற்குள் சிரித்துக்கொண்டேன்.

  ஆத்திப்
  புக்கிட் பாத்தோக் உயர்நிலைப்பள்ளி (UPTLC)

 18. ‘ஆஸ்திரேலியா’ என்ற நாட்டிற்கு நான் செல்ல விருப்பப்பட்டேன். ஆனால், என் பெற்றோர்கள் இருவரும் அதை மறுத்துவிட்டார்கள். இதை நினைத்துக்கொண்டே நான் என் அறைக்குள் சென்று உறங்கினேன்.

  கடிகாரத்தின் ஓலி காதில் ரீங்காரமிட்டது, கதிரவனின் ஒளி கண்களில் பிரகாசித்தத, கண்களை மெல்லத்திறந்தேன். என்னுடைய அறை புதுமையாக காட்சியளித்தது ‘நான் எங்க இருக்கிறேன் என்னை யாராவது இங்கே கடத்திட்டு வந்துவிட்டார்களா’ என்று நான் எனக்கே கேட்டுக்கொண்டேன். திடிரென்று என் அம்மா என்னை காலை கடன்களை முடித்துவிட்டு வரச்சொன்னார் அவர் என் அம்மாவா என்பது சந்தேகமாகத்தான் இருந்தது. இருபினும் நான் எங்கே இறுக்கிரோம் என கேட்டேன். இதுஉனக்கு பிடித்த ‘ஆஸ்திரேலியா’. உனக்கு புரியும்படி கூறவேணுமென்றால் இதுதான் உலகிலுள்ள சொர்க்கம். நான் வாயை பிளந்தபடி நின்றேன். என்னக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. என் காலை கங்களை முடித்தவுடன் வெளியே சென்றோம். அந்த இடம் பெயர் சிட்னி. அங்கு உணவுகளின் வாசனையே மூக்கை பறித்ததால் நான் என் பெற்றோருடன் சாப்பிட சென்றேன். பிறகு நாங்கள் ‘கான்பரா’ என்ற இடத்திற்கு சென்று பலோனில் பறந்தோம் . அது தீயின் உதவியால் பறந்தது. நன் தனி பலோனிலும் என் பெற்றோர்கள் தனி பலோனிலும் பறந்தோம். திடிரென்று என் பெற்றோருடைய பல்லோனில் தீ பற்றியது. என் அம்மா வலிதாங்க முடியாமல்’துரை துரை’என்று கத்தினார் . நானும்’அம்மா அப்பா’என்று கத்திவிட்டு நின்றேன்.அதிர்ச்சியில் என் கண்கள் மிக விரைவாக திறந்தன.என்ன அம்மா’துரை எழுந்திரு’என்று கத்தினார்.நன் பதறியடித்து என் அம்மாவிடம் சென்று அவரை தொட்டு பார்த்தேன்.என்னடா திரும்பியும் கனவா என்று சொல்லி என்னை கேலி செய்தார்.

  Duraikumaran
  Bendemeer secondary school

 19. கற்பனை சிறகடித்த நாடு

  எனக்கு மிகவும் பிடித்த நாடு பிரான்ஸ். பிரஞ்ச் கலாச்சாரம் மிகவும் பழமையான கலாச்சாரங்களில் ஒன்று என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பார்த்ததில்லை. மேலும் பிரஞ்சு மக்கள் ஒற்றுமையாகவும் அன்பாகவும் இருப்பார்கள் என்றும் கேள்விப்பட்டுள்ளேன். மேலும் அங்குள்ள ஏழு அதிசயங்களில் ஒன்றான ஈஃபில் டவரும், மிகப் பிரபலமடைந்த டாவின்சியின் ஓவியமான மோனாலிசா ஓவியமும் எனக்குள் அந்த நாட்டிற்கு செல்லும் ஆவலைத் தூண்டியது. அதனால் நான் பிரான்ஸ் செல்ல ஆசைப்பட்டேன். என் பெற்றோர் இவ்வாண்டு டிசம்பர் விடுமுறையில் பிரான்ஸுக்குச் செல்லலாம் என்று கூறியிருந்தார்கள். ஆனால் கடைசி நேரத்தில் என் குடும்ப சூழ்நிலையின் காரணமாக அடுத்த வருடம் அங்கு செல்லலாம் என்று கூறிவிட்டனர்.

  அதைக் கேட்டவுடன் எதையோ இழந்துவிட்டது போன்ற வருத்தம் எனக்குள் என்னை அறியாமல் ஏற்பட்டது. அதனால் என்னையறியாமல் என் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது. அதைக் கண்ட என் அம்மா அருகில் வந்து என்னை அணைத்துக்கொண்டு ‘இதற்கெல்லாம் அழலாமா? இந்த வருடம் போகமுடியவில்லை என்றால் என்ன? அடுத்த ஜூன் விடுமுறையில் கட்டாயம் போவோம்’ என்று உறுதியாகக் கூறினார். அதைக் கேட்ட என் மனம் கொஞ்சம் ஆறுதல் அடைந்தது. நம்பிக்கையோடு படுக்கைக்குச் சென்றேன்.

  காலையில் கண்கள் திறக்கும் போது என்ன ஆச்சரியம்! நான் பிரான்சில் இருந்தேன். அதுவும் ஈஃபில் கோபுர வாசலில் நின்றுகொண்டிருந்தேன். எப்படி அங்கு சென்றேன் என்று தெரியவில்லை மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தேன்..….………! .இங்கும் அங்கும் ஓடினேன்! என் மனம் பட்டாம்பூச்சியைப் போல் பறந்தது.எனக்கு பிடித்த ஈஃபில் டவரை நேரில் பார்த்தேன். அது மிகவும் உயரமாக இருந்தது. ஏழு அதிசயங்களில் ஒன்றான ஈஃபில் டவரை ஜீன்ஸ் படத்தின் பாடல் காட்சியில் பார்த்திருக்கிறேன். ஆனால், இப்போது நான் அதை நேரில் பார்க்கிறேன் என்று நினைக்கும்போது என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. ஈஃபில் டவரைச் சுற்றி பார்த்தேன் அப்பொழுது ஆங்காங்கே சில இயந்திர மனிதர்கள் மக்களுக்கு வழிகாட்டிக்கொண்டிருந்ததைக் கண்டு ஆச்சரியப் பட்டேன். அக்கோபுரத்தைச் சுற்றிப் பார்க்க முடிந்ததே தவிர என்னால் அதனுடயை உச்சியை எவ்வளவு அண்ணார்ந்து பார்த்தாலும் பார்க்க முடியவில்லையே என்று கவலையுடன் நின்றுகுண்டிருந்த எனக்கு அப்போது ஒரு யோசனை தோன்றியது. உடனே ஒரு இயந்திர மனிதனுக்கு அருகில் சென்று என்னை இந்த கோபுர உச்சிக்கு அழைத்துச் செல்ல முடியுமா என்று கேட்டேன். உடனே அவன் என்னைக் கோபுர உச்சிக்கு அழைத்துச் சென்றான். அங்கிருந்து நகரத்தைப் பார்த்தபோது பூமியிலிருந்து வானத்தைப் பார்க்கும்போது எப்படியிருக்குமோ அதுபோல் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்களை பூமியில் பார்ப்பது போல் இருந்தது.
  பிறகு எனக்கு பசியாக இருப்பதை அவரிடம் சொன்னேன். இயந்திர மனிதன் உடனே சற்றே அருகில் இருந்த உணவு விடுதிக்கு என்னை அழைத்து சென்றார்.பிரான்சின் பாரம்பரிய உணவைச் சாப்பிடுகிறாயா என்று கேட்ட அவர் என்னிடம் ‘நீ சாப்பாடு வாங்கும்போது உன்னால் எவ்வளவு சாப்பிட முடியுமோ அந்த அளவு சாப்பாட்டை மட்டுமே வாங்கு. அவ்வாறின்றி வாங்கிவிட்டு சாப்பிட முடியாமல் குப்பைத்தொட்டியில் கொட்டினால் இந்நாட்டில் அது பெரிய தவறாகக் கருதப்படும். நீ தண்டனைப் பணம் செலுத்தவேண்டி இருக்கும். கவனத்தில் கொள்’ என்றார். அதைக் கேட்டவுடன் பள்ளி உணவகத்தில் மாணவர்கள் வீணாக்கும் உணவுகளை எண்ணிப் பார்த்தேன். பள்ளிகளில் இது போன்ற விதிமுறைகளைக் கொண்டு வந்தால் உணவுப் பொருட்களின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணருவர் என்று அப்போது என் மனம் எண்ணியது. பிறகு அவரிடம் ஆலோசனை கேட்டு எனக்குப் பிடித்த சுவைக்கேற்ற சாப்பாட்டை வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தேன். நான் சாப்பிட ஆரம்பித்ததும் ‘எனக்கு நேரமாகிறது. நான் வருகிறேன். உனக்கு ஏதேனும் உதவி தேவை என்றால் கூச்சப்படாமல் இங்குள்ள யாரிடமும் நீ கேட்கலாம். எல்லோரும் இங்கே உதவி செய்வார்கள்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். அவரது அன்பான உதவிகளை நினைத்து மகிழ்ச்சி அடைந்த நான் அவரைப் போலவே அந்நாட்டு மக்களும் அன்புடையவர்கள் என்பதை அறிந்து ஆனந்தம் அடைந்தேன். அதில் நூறு விழுக்காடு உண்மை உள்ளது என்பதை அந்த உணவு விடுதியின் பணி புரிவோர் சிரித்த முகத்துடன் ஆற்றிய சேவையிலிருந்து உணர்ந்தேன்.

  உணவு விடுதியில் இருந்து வெளியே வந்தேன் உர்ர் உர்ர் என்று சத்தம் மேலிருந்து கேட்டது. எனவே மேலே பார்த்தேன் பறக்கும் கார் சற்றிக் கொண்டிருந்தது.உடனே பக்கத்திலிருந்த மனிதரிடம் ‘பறக்கும் காரில் இந்த நகரம் முழுவதையும் சுற்றிப் பார்க்க வேண்டும். என்ன செய்வது என்று கேட்டேன். உடனே அவர் பறக்கும் கார் ஒன்றை வரவழைக்க உதவினார். காரில் ஏறிச் சுற்றியபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அப்படிப்பட்ட சந்தோஷத்தில் நான் மிதந்துகொண்டிருந்தபோது தருண்! தருண்! என்ற என் அம்மாவின் குரல் கேட்டது. நான் திரு திருவென்று விழித்தேன். ‘தருண்! பள்ளிக்கு நேரமாகிறது. சீக்கிரம் எழும்பு’ என்று அம்மா என்னை எழுப்பும் குரல் மறுபடியும் கேட்டது. பிறகுதான் நான் கன்டதெல்லாம் கனவு என்று தெரிந்தது. ‘என்னம்மா நல்ல கனவிலிருந்து என்னை எழுப்பி விட்டீர்களே’ என்று சிணுங்கிக்கொண்டே எழுந்தேன். அதற்கு என் அம்மா ‘அப்படி என்ன கனவு கண்டாய்? பிரான்ஸ் நாட்டைச் சுற்றிப் பார்த்தாயா என்றார் உடனே ஆச்சரியத்தோடு ‘எப்படி நான் கண்ட கனவை நேரில் பார்த்தது போல் கூறுகிறீர்களே’ என்றேன். ‘எனக்குத் தெரியாதா? உனக்குள் ஆழமாகப் பதிந்துவிட்ட ஆசை அது. அதுதானே கனவாக வரும் . இதிலென்ன ஆச்சரியம்’ என்று என் அம்மா கூறியபோதுதான் ஆசைகள்தாம் முதலில் கனவாக வரும். பிறகு அதுவே நனவாகும் என்பதை உணர்ந்தேன். அவ்வுணர்வே இனிமையாக இருந்தது. மெல்ல சிரித்த படி நிச்சயம் ஒரு நாள் பிரான்ஸ் செல்வேன் என்ற நம்பிக்கையுடன் நான் எனது இணைப்பாட நடவடிக்கைக்குச் செல்ல தயாரானேன்.

  தருண்
  உயர்நிலை முதலாம் ஆண்டு
  பொங்கல் உயர்நிலைப்பள்ளி

 20. வீட்டுக்கு ஒரே பிள்ளையாக இருந்ததால், என் அப்பா என்னை கடைக்குப் போக சொன்னார். ஆனால் எனக்கு அதில் துளியும் விருப்பம் இல்லை. தேர்வுகள் முடிந்து விட்டதால் சாக்கு போக்கு சொல்ல முடியாமல் வேறு வழியின்றி சென்றேன். அங்கே உள்ள ஊழியர்கள் சுறுசுறுப்பாகவும் சிரித்தமுகத்துடனும் திறமையாகவும் வேலை செய்தனர். அதைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

  நான் எப்போதும் என் வேலைகளை சிறிது அலட்சியத்துடன் செய்வதாக என் பெற்றோர் எண்ணுவதுண்டு. என் தந்தை இல்லாவிட்டாலும் கூட ஊழியர்கள் சுறுசுறுப்பாக தங்கள் வேலையைச் செய்ததை பார்க்கும்போது எனக்கும் உற்சாகமாக இருந்தது. நானும் அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்தேன். என் தந்தையின் நிர்வாக திறமையை நினைத்து மெய் சிலிர்த்து போனேன்.

  தீடீரென்று, தொலைக்காட்சி நிலையத்திலிருந்து சிலர் உள்ளே நுழைந்தனர். அவர்களுடன் எனக்கு மிகவும் பிடித்த ஒரு தொலைக்காட்சி நடிகர் வந்தார். உணவு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க அவர்கள் வந்தனர். என் தந்தையின் கடையில் தயாரிக்கும் உணவுகளின் தரமும் சுவையும் சிறப்பாக இருந்ததால் அவர்கள் வந்தனர். என்னை பேட்டி எடுத்தனர். எங்கள் கடையை அவர்கள் தேர்ந்தெடுத்ததை நினைத்து பெருமையாக இருந்தது. நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
  இரவு வீட்டிற்குச் சென்றதும் என் தந்தையிடம் நடந்ததை கூறினேன். அன்றிலிருந்து எல்லா வேலைகளையும் சுறுசுறுப்பாக செய்ய ஆரம்பித்தேன். இனிமேல் நேரம் கிடைக்கும்போதெல்லாம் கடைக்குச் சென்று தந்தைக்கு உதவலாம் என்று மனதில் உறுதி பூண்டேன். என்னுடைய இந்த மாற்றத்தை என் அப்பா பாராட்டினார்.

  Heba Janet
  St.Hilda’s Secondary School

 21. அன்று என் அப்பாவுக்கு உடல் நலமில்லை. என் தந்தையார் ஒரு உணவகத்தை நடத்தி வந்தார். அன்று அவர் உடல் நலம் குன்றியிருந்ததால், என்னை கடையை பார்த்துக்கொள்ள கூறினார். நான் தயங்கி ஏற்றுக்கொள்வதைக் கவனித்த என் தந்தை, “மாறன், நீ ஒரு தலைசிறந்த மாணவன். உன்னால் எளிதாக கடையைக் கவனிக்க முடியும்,” என்று கூறினார்.
  நான் உணவகத்திற்கு உற்சாகமாகச் சென்றேன். மதியம்வரை உணவகம் நன்றாக செயல்பட்டது. அப்போது, திடீரென ஓர் ஆடவர் அவரது மேசையில் அடித்து கூச்சலிட்டார். என்ன செய்வது என்று அறியாது உணவக உதவியாளருடன் அவர் அருகில் சென்றேன். அவர் உணவின் சுவை சரியில்லை என்று குறை கூறி புகார் செய்யப் போவதாக மிரட்டினார். உடனே, நான்,”ஐயா, உங்கள் வருத்தத்தை உணர்கிறேன். இன்று நீங்கள் சாப்பிட்ட உணவிற்கு பணம் செலுத்த வேண்டாம். உங்களது குறைகளை இந்தப் படிவத்தில் பூர்த்தி செய்து கொடுங்கள். மேலும் எங்கள் உணவக பற்றுச்சீட்டுக்களை இலவசமாகக் கொடுக்கிறேன். நாளை வந்து சாப்பிட்டு உங்களது கருத்தைக் கூறுங்கள்,” என்றேன். எனது செயல் கண்டு அந்த ஆடவர் கூனிக் குறுகி நின்றார். மற்ற வாடிக்கையாளர்கள் இதைக் கண்டு வாழ்த்தினர். என் தந்தைக்கு பிறகு தொலைபேசியில் அழைத்து கூறியபோது அவர் பாராட்டினார். இந்த அனுபவம் என் மனதில் பசுமரத்தாணிப் போல ஆழமாகப் பதிந்தது.
  ரஞ்சித் குமார்

  RANJITH KUMAR, 2A1
  கிளமெண்டி டவுன் உயர்நிலைப் பள்ளி
  CLEMENTI TOWN SECONDARY SCHOOL

 22. அன்று பள்ளி விடுமுறை . என் தந்தை என்னை அழைத்து” நரேன், இன்று உனக்குப் பள்ளி விடுமுறைதானே, எனக்கு உடல்நலம் சரியில்லை . இன்று எனக்காக நீ கடைக்குச்சென்று பார்த்துக் கொள்கிறாயா? என்று கேட்டார். நான் அவர் பேச்சைத் தட்டாமல் உடனே, “சரியப்பா” என்று கூறி விட்டு க் கடைக்குக் கிளம்பினேன்.
  கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பல வாடிக்கையாளர்கள் பரோட்டாவையும் எங்கள் கடையின் பிரபலமான கோழிக்கறியையும் வாங்கி ருசித்து உண்டார்கள். சனிக்கிழமை என்பதால் கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. குழந்தைகள் தாய்மார்கள் இடம்பிடித்து உட்கார வரிசையில் நின்றனர். வரிசையில் ஒரு பதின்ம வயது மாணவன் தனியாக நின்று கொண்டிருந்தான். அவனுக்கு இரண்டி ஆள் தள்ளி ஒரு கரப்பிணிப் பெண் தனது இரண்டு வயது மகளுடன் நின்று கொண்டிருந்தார். அந்த சிறுமி எனக்குப் பசிக்கிறது என அழுது கொண்டிருந்தாள். வரிசையில் நின்று இருபது நிமிடங்கள் கழித்து அந்த பதின்ம வயது மாணவனின் முறை வந்தது. அவன் சற்றும் யோசிக்காமல் தனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த அந்தக் கர்பிபணிப் பெண்ணை அழைத்து தன் இருக்கையில் அமரச்சொன்னான். இந்நிகழ்ச்சியைக் கண்ட என் கண்கள் கலங்கின. அம்மாணவனுக்கும் பசிதான் ஆனாலும் மனித நேயத்தின் காரணமாக அவன் செய்த இந்த சிறிய செயல் என்னை ஆச்சரியப்பட் வைத்தது. வளர்ந்து வரும் தலைமுறையினரிடையே நான் கண்ட இச்செயல் என் மனதில் நீங்கா இடம் பிடித்தது.

  நரேன்குமார்
  ரிவர்சைடு உயர்நிலைப்பள்ளி

Your email address will not be published.


*