2017ம் ஆண்டில் பரிசு பெற்ற கட்டுரைகள்

இளமைத்தமிழ்.காம் போட்டிகளில் பங்கேற்று, பரிசு பெற்ற 2017ம் ஆண்டின் கட்டுரைகள் இவை.

23 கருத்துரை

 1. என் விடுமுறையை எப்படி கழித்தேன்?

  என் பள்ளி விடுமுறையில் என் குடும்பத்துடன் நிறைய இடங்களுக்குச் சென்றேன். முதலில் நான் செந்தோசாவில் இருக்கும் சிலோசா கடற்கரைக்குச் சென்றேன். அன்று வானிலை இதமாக இருந்தது. என் மனதில் ஆனந்தம் தாண்டவமாடியது. நானும் என் தங்கையும் அழகான மணல் வீடு கட்டினோம். நாங்கள் கடல்நீரில் விளையாடினோம்.
  அங்கு நானும் என் குடும்பத்தினரும் நிறைய புகைப்படங்களை எடுத்தோம். அடுத்த நாள், நாங்கள் குடும்பத்துடன் கடைத்தொகுதிக்குச் சென்று துணிமணிகளும் வீட்டுக்குத் தேவையான பொருட்களையும் வாங்கச் சென்றோம். கடைத்தொகுதிகளில் துணிமணிகள் எல்லாம் தள்ளுபடி என்று கேட்டதும் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தேன். எனக்கு தூணிமணிகள் என்றால் கொள்ளை ஆசை. எனக்கும் என் தங்கைக்கும் என் அம்மா, துணிகள் வாங்கிக் கொடுத்தார். பின்னர், சந்தைக்குச் சென்று வீட்டுக்குத் தேவையான பொருள்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்கினோம். பைகள் மிகவும் கனமாக இருந்தது. நாங்கள் மூவரும் பைகளைச் சமமாகப் பிரித்து கொண்டோம். வீட்டிற்குச் சென்று என் தாய்க்குச் சில உதவிகள் செய்தேன்.
  எனக்கு நிறைய வீட்டுப்பாடங்கள் இருந்ததால், அதைச் செய்ய தொடங்கினேன். மேலும் என் மற்ற நாட்களை பயனுள்ளதாக ஆக்கிக்கொண்டு நன்றாகப் படித்தேன்., தேர்வுக்கும் தயாரானேன். என் பள்ளி விடுமுறையை மிகவும் மகிழ்ச்சியாகவும் பயனாகவும் செலவழித்ததே எனக்கு பெருமையாக இருந்தது. தேர்விலும் நான் நல்ல மதிப்பெண்கள் வாங்கினேன்.

  Deepika Raviprasad
  Bukit Merah Secondary School

 2. சிலர் தனது விடுமுறையைப் பயனுள்ள வகையில் கழித்திருப்பார்கள். மற்று சிலருக்கோ, விடுமுறயைப் பயனுள்ள வகையில் கழிக்காததற்கான குற்றுணர்சி, அவர்களை உறுத்திக்கொண்டே இருக்கும். ஆனால், எனக்கு அக்குற்றுணர்சியே இல்லை. என்னைப் பொறுத்தவரை, நான் என் பள்ளி விடுமுறையை மிகப் பயனுள்ள வகையில் கழித்தேன்.
  உதாரணத்திற்கு, நான் ‘டான் டாக் செங்’ மருத்துவமனைக்கு, என் இணைப்பாட வகுப்புத் தொடர்பாகச் சென்றிருந்தேன்.அன்று அங்கு வந்திருந்த முதியோர்களுக்கும் நோயாளிகளுக்கும் நான் வழிகாட்டியாக அமைந்தேன். அவர்களுக்கு உதவி செய்ததில், எனக்கு மிக்க மகிழ்ச்சி. ‘அறம் செய விரும்பு’ என்ற ஆத்திசூடிக்கு ஏற்ப, நம்மால் முடிந்த உதவிகளை நாம் பிறருக்குச் செய்ய வேண்டும்.அதை மனதில் கொண்டு தான், சிறு உதவியாக இருந்தாலும், அவர்களுக்கு நான் வழிகாட்டியாக இருந்தேன். ஒருவருக்கு உதவி செய்வதில் நமக்கு மணநிம்மதிக் கிடைக்கும்.
  என் விடுமுறையில் நான் இன்னொறு பயனுள்ள செயலில் ஈடுபட்டேன். நான் நூலகத்திற்குச் சென்றேன். அங்கே சென்று நிறைய புத்தகங்களை இரவல் வாங்கிப் படித்ததால், என் மொழி மற்றும் சொல் வளம் அதிகரித்தது. இவ்வாறே நான் என் விடுமுறையைக் கழித்தேன்

  வைஷ்ணவி
  சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி

 3. என்ன செய்தோம் என்ன கற்றோம்

  சென்ற ஆண்டு விடுமுறையில் எப்பொழும் போல நாங்கள் இந்தியாவிற்கு எங்கள் தாத்தா பாட்டி வீட்டிற்குச் சென்றோம். வயதான அவர்களைப் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்ளவில்லையே என்ற குற்ற உணர்வு என் அம்மாவுக்கும் , அப்பாவுக்கும் எப்போதுமே இருக்கும். அதனால் நாங்கள் இந்தியாவிற்கு சென்றால் சுற்றுலா எங்கும் செல்லமாட்டோம்.
  இந்த முறை எனது பெற்றோர் ஒரு வாரம் அதிகமாக அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்திருந்தார்கள். அதனால் நாங்களும், எனது மூன்று அத்தை குடும்பத்தினரும் நான்கு நாட்கள் சுற்றுலா செல்ல ஏற்பாடுகள் செய்திருந்தோம். எனக்கு இந்தியாவில் பல இடங்களைப் பார்க்கவேண்டும் என்ற கனவு எப்போதுமே உண்டு. எனது கனவு நனவாகப் போகிறது என்பதை நினைத்து என் மனம் வானில் சிறகடித்துப் பறந்தது.

  மொத்தம் பதினொன்று பேர் இரயில் வண்டியில் பயணத்தைத் தொடங்கினோம். நீண்ட தூரம் இரயிலில் பயணம் செய்வது எனக்குப் புது அனுபவமாக இருந்தது. சில்லென்ற காற்று, கரிய மேகம், கூடவே வரும் நிலவு எனப் பயணம் இனிதாக இருந்தது. அதிகாலையில் நாங்கள் மைசூரை அடைந்தோம். குளித்து ஆயத்தமாகி , பிறகு நாங்கள் வாடகைக்கு எடுத்திருந்த வாகனத்தில் ஏறி காவிரி ஆறு உற்பத்தியாகும் தலைக்காவிரியை அடைந்தோம்.

  ஒரு நாட்டின் உண்மையான ஆதாரம் நீர்வளம் என்பதும், அதன் முக்கியத்துவத்தையும் நான் காவிரிக்காகக் கட்டியிருந்த கோயிலைக் கண்டவுடன் உணர்ந்தேன்.

  பிறகு பக்கத்திலிருந்த விலங்கியல் பூங்கா, யானை சவாரி மற்றும் குதிரை சவாரி ஆகியவைகளை நானும் எனது தம்பியும் கண்டு களித்தோம்.

  அடுத்த நாள் அதிகாலையில் ஒரு மலையுச்சிக்கு பயணம் செய்து , பொன்னிறமான சூரிய உதயத்தைக் கண்டு களிப்புற்றோம். மறுபுறம் அதல பாதாளம், அதை வெண்ணிற மேகங்கள் மூடியிருந்தன. பார்ப்பதற்கு சொர்க்கலோகம் போல மனதைக் கொள்ளை கொண்டது.

  ஆபத்தான வளைவுகளைக் கடந்து கீழே வந்தடைந்தோம். அடுத்த நாள் மைசூர் அரண்மனையை சுற்றிப் பார்த்தோம். இறுதியாக ஊர் வந்து சேர்ந்தோம்.

  இந்த பயணத்திலிருந்து இயற்கையின் உண்மையான எழிலையும், அதன் முக்கியத்துவத்தையும், உறவினர்களோடு இருக்கும்போது ஏற்படும் பிணைப்பையும் நான் கற்றுக் கொண்டேன்.

  தேஜல்
  சுவா சு காங் உயர்நிலைப்பள்ளி

 4. “தமிழுக்கும் அமுதென்று பேர், அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.” என்ற பாரதிதாசரின் கவிதைக்கு ஏற்ப இந்த வருட தமிழ் மொழி மாதம் முழுவதும் சீரும் சிறப்புமாக நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. அவை அனைத்தும் மாணவர்களிடம் தமிழ் மொழியின் ஆர்வத்தை அதிகரிக்கவும் மாணவர்களின் தமிழ் திறனை வள்ர்ப்பதற்கும் ஏற்ப்பாட்டு செய்யப்பட்டன.

  ‘கல் தோன்றி மண் தோண்றா காலத்தே முன் தோண்றிய மூத்த மொழி தமிழ் மொழி என்பதே தமிழின் சிறப்பாகும்.’ இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் தோண்றிய நமது தாய்மொழியை இன்றும் வாழவைப்பதற்கு இந்நிகழ்ச்சிகள் உதவுகின்றன. இந்நிகழ்ச்சிகளால் எனக்கு தமிழ் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், அம்மாதிரியான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தூண்டுகளாக இருந்தது.

  ஒருசில நிகழ்ச்சிகளை நேரில் கண்டு, உண்ர்வில் கலந்து மனதில் தங்கும் வண்ணம் அமைந்தது. எப்போதும் பேச்சில் நாட்டம் கொண்ட எனக்கு விவாதப் போட்டிகளே மிகவும் ஈர்த்த நிகழ்ச்சிகளாகும். சொற்சிலம்பம் போன்ற விவாதப் போட்டி சுவாரஸ்யமாகவும் அறிவூட்டும் வகையிலும் அமைந்தது. இரு பள்ளிகளுக்கும் அனல் பறக்கும் விவாதம் மும்முரமாக நடைப்பெற்றது. மாணவர்கள் தமிழில் சரலமாகவும் தன்னம்பிக்கையுடனும் பேசினார்கள். தங்களின் கருத்துகளை சுவாரஸ்யமான வகையில் விவாதித்தார்கள். அவை என்னை மிகவும் கவர்ந்தன. மாணவர்கள் இரவும் பகலும் உழைத்தனர் என்பது அவர்களின் அற்புதமான பேச்சிலிருந்தே அறியலாம். இரு பள்ளிகளுமே சிறப்பாக பேசினர். அந்த விருவிருப்பான போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்கள் தாயை கண்ட சேயைப் போல் மகிழ்ந்தனர். மற்றொரு பள்ளியும் மனம் தளராமல் அடுத்த முறை இன்னும் சிறப்பாக செய்வோம் அன்று உறுதியளித்தனர். அவர்களின் தன்னம்பிக்கை அரங்கத்திலிருந்த அனைவரையும் கவர்ந்தது.

  ஆக மொத்தத்தில், தமிழ்மொழியையும் பாரம்பரியத்தையும் வளர்க்கவில்லை என்றால் அது மண்ணோடு மண்ணாக புதைந்து விடும். அதனால், இதற்கான முதற்படி தமிழ்மொழி விழாக்களை நடத்துவதே ஆகும். தமிழில் பேசுவோம் , தமிழையே நேசிப்போம்.

  சேவா மாணிக்கம்
  கான் எங் செங் பள்ளி

 5. தமிழ்மொழி விழா 2017-ன் ஓர் அங்கமாக ” தமிழ் உணவுக்கும் அமுதென்று பேர் ” நிகழ்ச்சி, கடந்த 15 ஏப்ரல் அன்று, உமறுப்புலவர் நிலையத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.
  தமிழர் பாரம்பரிய உணவும், ஆரோக்கியமும் என்ற தலைப்பில் மாணவர்கள் எள்ளு , மஞ்சள் , சிறு தானிய ங்கள் மற்றும் இடியாப்பம் பற்றி இறுதிச்சுற்றில் தங்கள் படைப்பினை முன்வைத்தனர் . இதில் பங்கு கொண்டு, சிறப்பு உரையாற்றிய சித்த மருத்துவர் திரு. சிவராமன் அவர்களின், ஒரு செய்தி எனது மனதில் ஆழப்பதிந்து, துயரத்தையும் ஏற்படுத்தியது .
  புற்று நோய் கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் அறிந்த ஒரு செய்திதான் அது.

  “இந்த ஒரு தலைமுறை தான், தன் அடுத்த தலைமுறையின் மரணத்தை அருகிலிருந்து தங்கள் கண்களால் பார்க்கப்போகும் துரதிஷ்டமான தலைமுறை ” எனக் கூறி, இந்தியாவில் புற்று நோய் அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம் என்றும், குழந்தைகள் புற்று நோய் பாதிப்பில் தமிழகம் முதலிடம் என்று கூறினார், இதற்கு காரணம் துரித உணவு என்றும் அடுப்படியில் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் செலவழித்தால், ஐந்து ,பத்து வருடங்கள் ஆயுள் நீடிக்கும் என்று கூறியது எனது மனதில் பதிந்தது .

  புற்று நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் சின்ன வெங்காய தயிர் பச்சிடிக்கும் , நாவல் பழத்திற்கும் உண்டு என்று விளக்கினார்.

  உலகில் மிகச் சிறந்த காலை உணவு, இட்லி தான் என்று சான்றுடன் எடுத்துரைத்தார். “உணவு தாளிப்பு ” என்பது நமது பாரம்பரிய உணவு முறையில் மட்டும் தான் உள்ளது என்றும் கூறினார், தாளிப்பது மணத்திற்காக மட்டும் அல்ல, மருத்துவ குணத்திற்காகவே!! . இது ஐந்தாயிரம் ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ளது. ஆகவேதான் தமிழ் உணவுக்கு அமுதென்று பேர் என்று கூறி முடித்தார்.

  இறுதியாக தமிழ் உணவே அமுது என்ற எண்ணத்துடன், மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினேன்.

  வைஷ்ணவி ஹரிஹர வெங்கடேசன்

 6. உலகத்தில் ஏழு அதிசயங்கள் உள்ளன.எனக்கு உலகத்தில் உள்ள முதல் அதிசயமே என் தமிழ் மொழி தான்.தமிழ் மொழி ஓர் அதிசயம் என்பதால் தமிழ் அன்னையை புகழ தமிழ் மொழி விழா கொண்டாடப்படுகிறது.சிங்கப்பூர் நாடும் தமிழ் மொழி விழாவை கொண்டாட பல நிகழ்ச்சிகளையும் போட்டிகளையும் நடத்தியுள்ளது.அவற்றில் கலந்துகொண்ட என் அனுபவத்தை பற்றி நான் பகிர்ந்துகொள்ள போகிறேன்.

  முதலில்,இளமைத்தமிழ் மற்றும் வளர்தமிழ் சேர்ந்து நடத்தும் தமிழ் விக்கிப்பீடியா போட்டியில் கலந்துகொள்ளுமாறு என் தமிழ் ஆசிரியர் திருமதி கங்கா கூறினார்.”சரி,முயற்சி செய்துதான் பார்த்து விடுவோம்” என்ற துணிவும் “நான் வெல்லவும் வாய்ப்புகள் நிறைய உண்டு” என்ற நம்பிக்கையும் எனக்கு வந்தது.பிறகு,எனக்கு கொடுக்கப்பட்ட செனோடப் என்ற இடத்தைப்பற்றி தமிழில் நிறைய ஆராய்ச்சி செய்து,அதைப்பற்றி ஒரு விக்கிப்பீடியா பக்கத்தை உருவாக்கினேன்.அதற்கு,நான் அந்த இடத்திற்கு சென்று அங்கிருந்த சிலரிடம்,செனோடப் பற்றி எனக்கு தெரியாத பல தகவல்களை கேட்டு,என் கட்டுரையில் சேர்த்து கொண்டேன்.ஆனால் நான் அதில் வெற்றி பெறவில்லை.

  மனம் தளர்ந்த எனக்கு,வேறு ஏதாவது ஒரு போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற வைராக்கியம் வந்தது.இளமைத்தமிழ் பக்கத்தில் எல்லா போட்டிகளிலும் கலந்துகொண்டு,என் பதில்களை அனுப்பியிருக்கிறேன்.அதை பார்த்து,என் நண்பர்கள் எல்லோரும் என்னை வாழ்த்தி நான்தான் வெற்றி பெறுவேன் என்று உறுதியாக சொன்னார்கள்.அவர்கள் சொன்ன வாக்கு பலிக்கும் என்று நான் நம்புகிறேன்.இந்த அனுபவங்களில்மூலம் நான் பல வாழ்க்கை திறன்களை பெற்றுக்கொண்டேன். நம்பிக்கையே வாழ்க்கை என்ற தாரக மந்திரத்தை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.அதுமட்டுமல்லாமல்,நான் தமிழில் என் மொழியை மேம்படுத்தவும் கற்றுக்கொண்டேன்.தமிழின்மேல் எனக்கு இருக்கும் பற்றும் அதிகரித்தது.தமிழ் மொழியே நீ வாழியவே!

  ரெத்தினம் ரெபேக்கா
  சூவா சூ காங் உயர்நிலைப்பள்ளி

 7. மாணவர்களை ஈர்க்க என்ன செய்யவேண்டும்….

  அறிவியல் முன்னேற்றத்தில் தொலைந்த பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மறந்த மனங்கள் தாம் இக்காலத்தில் அதிகம் இருக்கின்றன. திருக்குறள் போன்ற நீதி நூல்கள் இருந்தாலும் கலாச்சாரத்திற்கும் பண்பாடுகளுக்கும் கொடுக்கப்படும் முக்கிநத்துவமும் மரியாதையும் குறைந்து வருகிறது. ஆனால், மாணவர்களைக் கவரும் நடவடிக்கைகள் இதை மாற்றுவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம்.

  நான் முதலில் பகிர்ந்து கொள்ள விரும்பும் நடவடிக்கை, முன்னோர்கள் இலக்கிய வடிவத்தில் பகிர்ந்து கொண்ட செய்தியின் உள் அர்த்தங்களை நடவடிக்கையின் வாயிலாகப் பகிர்ந்துகொள்வதே ஆகும். இது போன்ற நடவடிக்கை மொழியையும் அறிவியலையும் ஒன்று சேர்ப்பதால் நிறைய இளைஞர்களை ஈர்க்கும் என்பது என் நம்பிக்கை.

  அடுத்த நடவடிக்கை
  தமிழ் கற்றுக்கொள்வதை மகிழ்ச்சியான அனுபவமாக்கும் நாடகப் பாடங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரையும் ஈர்க்கும். இதனால் மாணவர்களின் மொழித்திறனும் கூடும். அவர்களுக்கு மறுபடியும் இது போன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மேம்படும்.

  பார்க்கவி
  ஜூரோங் உயர்நிலைப்பள்ளி

 8. தமிழின்பால் எங்களை ஈர்க்க என்ன செய்ய வேண்டும்

  தமிழ்மொழி விழா நம் சிங்கப்பூரில் தமிழ் மொழியை வளர்க்கவே கொண்டாடப்படுகிறது. இது மூலம், சிங்கப்பூரில் வருடம் முழுவதும் பல தமிழ் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆனால், அவற்றில் மாணவர்களின் பங்கேற்பு குறைவாக இருக்கிறது. இதற்குக் காரணம் என்ன? எப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் மாணவர்களை ஈர்க்கின்றன?தமிழ் இலக்கியங்களை தொழில்நுட்பம் மூலம் சொல்லிக் கொடுக்கலாம்.இன்றைய இளையர்கள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தையே வாழ்ந்து வருகின்றனர். அதனால்,மகாபாரதம்,ராமாயணம் போன்ற அற்புத நூல்களை புத்தகம் மூலம் அல்லாமல் கணினிகளில்,கைத்தொலைப்பேசிகளில் கற்றுக்கொடுக்கலாம்.இது அவர்களின் தமிழின் மீது உள்ள ஆர்வத்தை தூண்டும்.அது மட்டுமல்லமால் நடைப்பெறும் தமிழ் நிகழ்ச்சிகளை மாணவர்களின் கருத்துகளை கொண்டு அவர்களுக்கு பிடித்த்துபோல மேம்படுத்தலாம்.புதிய விளையாட்டுகளை அறிமுகப்படுத்தலாம்,பேசும் உரைகளில் உற்சாகத்தை கொண்டுவரலாம்.இது போல நிறைய வழிகளில் மாணவர்களின் ஈர்க்கும்.

  தமிழை மாணவர்களிடையே வளர்க்க நிறையவே வழிகள் உண்டு. அவை இப்போது அடைபட்டு நிற்கின்றன. ஒரு இரவில், ஒரு நாளில் மாற்றம் நிகழ்ந்து விடாதுதான். நாம் சிறிய அளவில் முயற்சியெடுத்தால் போதும். ஒவ்வொருவரின் பங்களிப்பால்தான் இது சாத்தியமாகும். இங்கே நிறைய பழமைவாதிகள் உண்டுதான். அவர்களை மீறிக்கொண்டுதான் இதையெல்லாம் செய்ய வேண்டியிருக்கும். பள்ளிகள் தமிழைப் பேசவும், எழுதவும், வாசிக்கவும் பழக்கும் இடமாக இருப்பின் நல்ல மாற்றங்கள் கண்டிப்பாக நடக்கும். பள்ளிப்படிப்பை முடிக்கிறவர்கள் துளியும் தமிழ் தெரியாமல் வெளிவருகிற நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தால் இப்போதைக்கு போதுமானது.’தமிழை நேசிப்போம் தமிழில் பேசுவோம்’ என்பதை மாணவர்கள் அறிய வேணடும்.

  ஹேமந்த்
  உயர்நிலை மூன்று விரைவுநிலை

 9. நம் வாழ்வியலில் இணையத்தளம் இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. இணையத்தளம் இல்லாத வாழ்க்கை துடுப்பில்லாத படகு போன்று ஆயிற்று. சிலர் இப்போதெல்லாம் வீடு இல்லாமல் கூட வாழலாம். ஆனால் இணையம் இல்லாத வாழ்க்கை நரகம் போன்றது என்கிறார்கள். இந்த அத்தியாவசியத் தேவை நமக்கு நன்மைகளையும் தீமைகளையும் அளிக்கிறது. பல ஆராய்ச்சிகளைப் பற்றியி தகவல்களை நாம் ஒரு கிளிக் மூலம் அறிந்து கொள்ளலாம். இணையம் இல்லா விட்டால் நாம் புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடிக்கவே நமக்குப் பல நாட்கள் எடுக்கும். ஆனால் ஒரு மணி நேரத்திலேயே நம்மால் ஆராய்ச்சியையே முடித்து விட முடியும். அது மட்டுமா ஜி.பி.எஸ் மூலம் எவ்வாறு ஒரு இடத்திற்குப் போக முடியும் என்பதை அறியலாம்.

  பலர் பலவிதமான பொருட்களையும் இணையத்தின் மூலம் வாங்கலாம். சந்தையில் கிடைக்கும் பொருட்களை வீட்டில் இருந்து கொண்டே வாங்கலாம். உலகளாவிய செய்திகளை அடுத்து கொண்டு நம் மதிநுட்பத்தை வளர்த்துக் கொள்ளலாம். நாம் விரும்பிய இசை கேட்டு மனதை இலேசாக மாற்றிக் கொள்ள முடியும். ஆக்கப்பூர்வமான பல சிந்தனைகளையும் புத்தாக்க சிந்தனைகளையும் கணினி விளையாட்டுகளின் மூலம் பெற முடியும். பக்கத்து வீட்டில இருப்பவர்களுடன் பேசுவதே சிரமமாக இருக்கும் காலத்தில் பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஒருவருக்கு மின்னஞ்சல் கடிதம் செய்தி அனுப்பலாம். இது ஒரு பக்கம் இருக்க, மையோப்பியா, கண் பார்வை நோய்கள், உடல் பருமன் எனப்பல தீமைகளும் விளைகின்றன. “ஓடி விளையாடு பாப்பா” என்ற பாரதியாரின் வாக்கிற்கேற்ப மாணவர்கள் உடல் பயிற்சியுடன் அளவோடு கணினையைப் பயன்படுத்திப் பலன் பெறலாம். குடும்பத்தின் அன்பு, அரவணைப்பு, பண்பு, கலாசாரம் ஆகிய இவை எதையும் பறி கொடுக்காமல் கட்டிக் காப்பாற்றி மகிழ்ச்சியாக மன உளைச்சலின்றி வாழ்வோம். “அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு”

  கிறிஸ்மிதா
  Riverside Secondary School

 10. இன்றைய உலகில் இளமை முதல் முதுமை வரை அனைவரும் இணையத்திற்கு அடிமையாகிவிட்டோம். இணையத்தால் தேவையான தகவல்களை ஒரு விநாடிலேயே காட்ட கூடிய தன்மை உடையது. நான் இணையத்தை என் வீட்டுப்பாடம் செய்வதற்கு முக்கியமாக பயன்படுத்துவேன். எனக்கு தெரியாத ஒரு வார்த்தை இருந்தால் புத்தக அகராதியில் இரண்டு நிமிடங்களுக்கு கண்டுபிடிப்பதர்க்கு பதிலாக சில வினாடியில் இணையத்தில் கண்டுபிடிப்பது எவ்வளவு சுலபம்! ”சிறு துளி பெரு வெள்ளம்” என்பதற்க்கேற்ப ஒரு வார்த்தையின் பொருளை தேடுவதற்கு இரண்டு நிமிடங்களை சில வினாடிகளுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்கு சிறிது நேரமாக தெரிந்தாலும், அதுவே பத்து வார்த்தைகளாக இருந்தால் இருப்பது நிமிடங்கள் ஆகுமே! ஆகவே , என் நேரத்தைச் சேமிக்க இணையம் எனக்கு பெரும் துணை கொடுக்கிறது. மேலும் ,நான் எதாவது ஆராய்ச்சி செய்ய வேண்டுமென்றால் நான் இணையத்தைத்தான் பெரும்பாலான நேரங்களில் பயன்படுத்துவேன். இதற்கான காரணம் என்னவென்றால், இணையத்தில் நிறைய இணையதளங்கள் இருப்பதால் என்னால் தேவையான தகவல்களை பல விதமான தளங்களிலிருந்து தேர்ந்தெடுக்கலாம். இது என் வாழ்க்கையை மிகவும் சுலபமாகிறது. மேலும், நான் ஓய்வெடுக்க யூட்யூபில் நான் காணொளிகளை கண்டு என் நேரத்தை கழிப்பேன். ஆனால், தேவையற்ற தகவல்களை வழங்கும் காணொளிகளை பார்க்காமல் எனக்கு தெரியாத, புதிய விஷயங்களை அறியமுடியும் காணொளிகளையே காண்பேன். இவ்வாறு என்னால் என் அறிவு வளத்தை வளர்த்துக்கொள்ள முடிகிறது. ‘கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு’ என்பதின் பழமொழிக்கேற்ப நாம் கற்பதை நிறுத்தாமல் நம்மால் முடிந்தவரை கற்க வேண்டும்!

  தீக்‌ஷிதா

 11. இன்றைய காலத்து இளைஞர்களின் வாழ்க்கையில் இணையம் என்பது ஒரு முக்கிய அம்சமாக அமைகிறது.இணையம் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே இல்லை என்றுக்கூட சொல்லலாம். இணையம் நமக்கு எந்நேரமும் ஒரு துடுப்புப் போன்றதாகும். அதனால்தான் நாம் அதை நம் தேவைகளுக்கு ஏற்ப பயனுள்ள முறையில் பயன்படுத்த வேண்டும். நம் தேவைகளை ஒரே ஒரு நொடியில் நிறைவேற்றக்கூடிய இணயத்திற்கு பலரும் அடிமையாகியுள்ளோம் என்பது உண்மையாகும். மேலும், இணையத்தை அடிக்கடி பயன்படுத்துவோர்களில் நானும் ஒருவளாகும். நான் பெரும்பாலும் இணையத்தில் பார்க்கக் கூடியவை யூட்டியூப்,கூகல் போன்ற பல்வேறு தளங்களாகும்.

  நான் அடிக்கடி, ஆங்கில மற்றும் அறிவியல் பாடங்களுக்கு கூகலில் ஆராய்ச்சி செய்து, எனக்கு போதுமான குறிப்புகளை நோட்டமிட்டுக்கொள்வேன். பிறகு, பள்ளியில் கொடுக்கும் கணினி வீட்டுப்பாட்களை செய்ய இணையத்தை பயன்படுத்துவேன். பிறகு, படைப்பு மற்றும் தேர்வுகளுக்கு முன்னதாகவே தயார் செய்ய இணையத் தளங்கள் எனுக்கு உருதுணையாக இருக்கின்றன. மேலும் என்னுடைய பொது அறிவையும் மதிநுட்பத்தையும் வளர்க்க இணையம் ஒரு சிறந்த வழி என்று நான் கருதுகிறேன். என்னை சுற்றி நடக்கும் நாட்டு நடப்பை பற்றி அறிந்துக்கொள்ளவும் என்னுடைய திறன்களை வளர்க்கவும் இணையத் தளங்கள் எனக்கு உதவுகின்றது. உதாரணத்திற்கு, எனக்கு மனித உருவங்களை வரைவதென்றால் கொள்ளை ஆசையாகும். அதனால் நான் யாருடைய உதவியுமின்றி இணையத் தளங்களில் மனித உருவங்களை சுலபமாக வரையக் கற்றுக்கொண்டேன்.

  பின்னர், நான் அளவில்லா மன உளைச்சளுடன் இருக்கின்ற போது, அச்சோர்வை போக்க இணையத் தளங்களில் பாட்டு கேட்பதுண்டு. மேலும், இளைப்பாறும் நேரத்தின் போது நான் ‘இன்ஸ்டகிராம்’ போன்ற தளங்களில் என் நண்பர்களுடன் கலந்துரையாடுவேன். அதுமட்டுமல்லாமல், யூட்டியூப் என்கிற தளத்தில் நான் என் அறிவை வலுப்படுத்தவும் என் ஓய்வு நேரத்தை களிக்கவும் பயன்படுத்துவேன். எனக்கு என்னென்ன தேவையோ அவற்றையெல்லையாம் நான் ஒரே ஒரு கிளிக்கில் மின்னல் வேகத்தில் நான் தேடிட முடியும். நம்முடைய தேவைகளை நிறைவேற்றி, நமக்கு நன்மை விளைவிக்கும் இணையத் தளங்களை நம் கண்ணும் கருத்துமாகவும் பொறுப்புடனும் கையாள வேண்டும். மற்றும் நாம் இணையத்தை எதற்காக பயன்படுத்துகின்றோம் என்பதை எப்பொழுதுமே கவனத்திற்குள் கொள்ள வேண்டும். நாம் எல்லாவற்றையும் ஒரு அளவோடு மற்றும் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்தபின்னரே செயல்பட வேண்டும். ”அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு” என்பதை நாம் மனதில் கொண்டு நடந்துக்கொண்டாலே அது நம் எல்லாருக்கும் நன்மையை விளைவிக்கும்.

  M.Samiksha
  Commonwealth secondary

 12. தனிமை தேவையில்லை…

  காலை 6.00 மணி. வழக்கம் போல் என் காலை பணிகளை பம்பரம் போல் சுழன்று முடித்தேன். பிறகு என் அம்மாவிற்கு அன்பு முத்தம் கொடுத்துவிட்டு பள்ளிக்கு கிளம்பினேன். பள்ளியில் என் இருக்கைக்கு எதிரில் அமர்ந்திருந்தாள் ராணி. அவள் யாரிடமும் பேசமாட்டாள், எப்போதும் தனியாகவே தன் வேலைகளை செய்வாள். நான் அனைவரிடமும் கலகலப்பாக பழகும் குணமுடையவள். எனக்கு அவளுடைய பழக்கம் விசித்திரமாக இருந்தது.

  எப்படியாவது ராணியை தோழியாக என்னிடம் பழக வைக்க வேண்டும் என்று எண்ணினேன். நானாகவே சென்று அவளிடம் பேசினேன். அவள் நன்றாக என்னிடம் பேசினாள். அவள் தன்னை எல்லோரும் ஒதுக்குவதாகவும், தான் தனிமையில் கஷ்டப்படுவதாகவும் தன் உள்ள குமுறலை என்னிடம் கொட்டினாள். அதை கேட்ட எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அன்றிலிருந்து நான் முடிந்த வரை அவளுடனேயே இருக்க முடிவு செய்தேன். அவளை தனிமையில் இருக்க விடாமல் தவிர்த்தேன். எங்கு சென்றாலும் நானும் அவளுடனேயே சென்றேன். அவளுடன் பேசிக் கொண்டே இருந்தேன்.

  என் வகுப்பில் இருக்கும் மற்றவர்களையும் அவளுடன் பேச செய்தேன். ஆசிரியரிடம் சொல்லி என் அருகிலேயே அவளை அமர செய்தேன். சாப்பிடும் போதும் அவளுடன் பகிர்ந்து கொண்டேன். விடுமுறை நாட்களில் நாங்கள் இருவரும் சேர்ந்து
  விளையாடினோம். ஒன்றாகவே படித்தோம். அவள் தனிமை நிலையிலிருந்து விடுபட்டு, கலகலப்புடன் எல்லோரிடமும் பழக செய்தேன். அவள் இப்போது தனிமையை வெறுத்து, கலகலப்பாக பேசும் தன்மையுடயவளாகிவிட்டாள்.

  சுபத்ரா
  Jurong West secondary school

 13. தொடக்கநிலை ஒன்றாம் வகுப்பிளுருந்து இப்போ வரையும் நானும் மேரியும் ஒரே வகுப்பில் தான் படிக்கிறோம். ஏன் நாங்கள் நாங்கள் அண்டை வீட்டுனரும்கூட. இதை எல்லாம் படித்தவுடன் நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்ற எண்ணம் உங்களுக்கு வருமே? நீங்கள் நினைப்பது தவறு. என் வீட்டில் அருகில் குடி வந்த நாள் முதல் நான் மேரியுடன் பேச எவ்வளவோ முயன்றேன் ஆனால் நான் வெற்றி அடைய வில்லை.என் பெற்றோரும் அவள் பெற்றோரும் நெருங்கிய தோழர் தோழியாகி விட்டனர். அனால் இவள் மட்டும் யாருடனும் பேசாமல் அமைதியாக தன் கதை புத்தகத்தை மட்டும் படிப்பாள். அதனால் அவள் ஏன் அமைதியாக இருக்கிறாள், எல்லாத்தையும் யாருடன்வது பகிர்ந்துகொள் என்று கூறி ஒரு மின்னஞ்சலை எழுதினேன்.
  அன்புள்ள மேரி,

  நாம் இருவரும் பேசியதே இல்லை. நீ அமைதியாகவே இருந்தால் உனக்கு பிரச்சனைகள் வரும்போது பேசுவதற்கு ஆள் தேடுவை. யாரை நம்புவது என்று தெரியாமல் திக்கு முக்கடி போய் நிற்பாய். உன்னை எப்பொழுதும் நான் என் தோழியாக தன நினைத்து இருக்கிறேன். ஆனால் நீயோ யாருவுடனும் பேசாமல் இருக்கிறாய். இது போல் இருக்காதே தோழி!!! தீயவர்கள் எல்லாம் உன்னை கேலி செய்து ரசிப்பார்கள். உன்னுடன் தோழியாக வேண்டும் என்ற நான் நீண்ட நாட்களாக ஆசை பட்டு கொண்டிருக்கிறேன். நீ அமைதியாக இருப்பதால் அனைவரும் உன்னை தள்ளி வைத்துவிடுவார்கள். எதிர்த்து நில்! எல்லோருடனும் பேச தொங்கினாள் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் தோழி! இதை படித்தவுடன் மனம் மாறி அனைவருடனும் பேச தொங்குவாய் என்று நான் நம்புகிறேன்.
  இப்படிக்கு,
  ரேகா.

  Noorin Ayisha
  St Hildas’ secondary school

 14. தீரன், எப்போதும் தனியாகவே இருக்கும் ஒரு மாணவன். அவன் எனது வகுப்பில் தான் படிக்கிறான். என்றைக்கும் அவன் அமைதியாகவும் தனியாகவும் இருப்பான். குழு வேலைகளின்போது அவன் ஈடுபடுவதில்லை. எவ்வளவு தான் ஆசிரியரும் பள்ளி ஆலோசகரும் கூறினாலும் அவன் கல்லுலி மங்கன் போல் இருந்தான். அவனைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. அவனக்கு உதவ வேண்டும் என்று நான் எண்ணி அவனிடம் பேச சென்றேன்.

  அவன் தன்னை எல்லோரும் ஏளனமாக பேசுவார்கள் என பயந்து தான் யாருடன் பழகுவதில்லை என்று கூறினான். ‘ தனி மரம் தோப்பாகாது’ என அவனுக்கு கூறினேன். அவனிடம் எல்லோரும் அப்படியில்லை, நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று எடுத்துக்கூறி எல்லோருடன் பழகவேண்டியதின் அவசியத்தையும் கூறினேன். ‘இப்போதே எல்லோருடன் பழக்கம் கொண்டால் தான் எதிர்காலத்தில் நாம் வேலை பார்க்க செல்லும்போது பிரச்சனைகள் ஏற்படாது. ஏனென்றால், பல வேலைகளில் வேலைப்பார்ப்பவர்கள் தனது சக ஊழியர்களோடு வேலைப் பார்க்க வேண்டிய நிலை ஏற்படும்.’ என்று அவனிடம் உரைத்தேன்.

  அவனை முதலில் கோஞ்சம் கோஞ்சமாக குழு வேலைகளில் ஈடுபட கூறினேன். பிறகு எல்லோருடனும் உரையாட ஆரம்பிக்க கூறினேன். இந்த வழிகளை அவன் மேற்கொண்டால் விரைவில் அவன் எல்லோருடைய நண்பனாகிவிடுவான். அவன் எனக்கு நன்றி கூறி என்னிடமிருந்து விடைப்பெற்றான். கூடிய விரைவில் தீரன் பலரின் நண்பனாகிவிடுவான் என நான் நம்பினேன்.

  சுப்பிரமணியன் கார்த்திகேயன்
  பெண்டமியர் உயர்நிலைப் பள்ளி

 15. படம் : நண்பன்

  இந்த படம் என் மனதை கவர்ந்த படத்தில் ஒன்றாகும். நட்பை பற்றியும் கல்வியில் வரும் சில மனஉலைச்சலையும் பற்றி இப்படம் விளக்குகிறது.

  அதிகமான மதிப்பெண்கள் வாங்கினால்,பெரிய வேலைக்குச் சென்று சம்பாதித்தால் மட்டும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவார்கள் என்பது கிடையாது. பிடித்த வேலைக்குச் சென்று திறமையாக செய்து திகழ்பவன்தான் வாழ்வில் முன்னேறுவான். இவ்வாறு பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பிடித்த படிப்பும் தொழிலும் செய்ய ஊக்கம் தர வேண்டும் என்பதுக்கு இந்த படம் ஒரு எடுத்துக்காட்டு.

  இந்தப் படத்தில் விஐய் ‘எல்லாம் நலம்’ என்று சொல்லிக் கொண்டிருப்பார். அது எனக்கு மிகவும் பிடித்த வசனமாகும்.

  Sanjana
  Woodlands secondary school

 16. நான் பார்த்து ரசித்த படம்

  இந்த வாரம் நானும் என் குடும்பமும் தீபாவளியைக் கொண்டாடினோம். நாங்கள் தீபாவளிக்கு என்ன செய்தோம் தெரியுமா? நாங்கள் தீபாவளியன்று காலையில் எழுந்து நல்லெண்ணெயைத் தலையில் தடவிக்கொண்ட பிறகு குளித்தோம். நாங்கள் பிறகு புதிய தீபாவளி ஆடைகளை அணிந்துகொண்டு சாமியைக் கும்பிட்டோம். என் அம்மா பல வகையான பலகாரங்களைச் செய்திருந்தார். நானும் என் தம்பியும் சாமியைக் கும்பிட்டபின் பலகாரங்களைச் சாப்பிட்டோம். ஒவ்வொரு ஆண்டும் நானும் என் குடுப்பமும் சேர்ந்து ஒரு திரைப்படத்தைப் பார்ப்போம். இந்த முறையும் நான் என் குடும்பத்துடன் சேர்ந்து வீட்டில் உள்ள தொலைக்காட்சியில் பாகுபலி1, பாகுபலி 2 என்ற திரைப்படங்களைப் பார்த்தோம். குறிப்பாக, நானும் என் தம்பியும் இந்தப் படங்களை உற்சாகம் குறையாமல் மிகவும் ஆவலுடன் பார்த்தோம். காரணம் அந்தப் படங்களில் வரும் ஒவ்வொரு காட்சியும் மிகவும் அற்புதமாகவும் பிரமாண்டமாகவும் இருந்தன. அந்தப் படங்களில் கண்ணக் கவரும் இயற்கைக் காட்சிகளும் இருந்தன. அந்தப் படத்தில் உள்ள கட்டடங்கள் பெரிது பெரிதாக இருந்தன. அவற்றில் நடித்த அனைத்து நடிகர்களும் மிக அழகாக நடித்திருந்தனர். அந்த இரண்டு படங்களில் வரும் கதைகள் ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருந்தன. இவற்றில் வேடிக்கை என்னவென்றால் மகனைப் பற்றிய கதையை முதல் பாகமாகவும் அப்பாவைப் பற்றிய கதையை இரண்டாவது பாகமாகவும் படம் பிடித்திருந்தனர். இந்தப் படங்கள் உலக அளவில் பேசப்பட்ட படம் என்றும் அதிக வசுல் பெற்ற படம் என்றும் என் அப்பா கூறினார்.

  சம்ப்ரிதி இராமநாதன்
  உயர்தமிழ் இரண்டு
  ஃபேர் ஃபீல்டு மெத்தடிஸ்ட் உயர்நிலைப்பள்ளி (UPTLC)

 17. படம் : BEFORE I FALL எனும் ஆங்கில திரைப்படம்.

  என்னை அதிகம் பாதித்த திரைப்படம் இது.

  முதலில் இதன் கதைசுருக்கத்தை கூறிவிடுகிறேன்.திரைப்படம் அன்பர்கள் தினத்தன்று நடைபெறும் நிகழ்வுகளை சொல்வதாக தொடங்குகிறது.படத்தின் கதாநாயகி தன் நண்பர்களுடன் ஒரு கார்விபத்தில் சிக்கிக்கொள்கிறாள்.சரியாக கார் மோதும் சமயத்தில் அவள் நினைவுகள் கரும்திரையாக மாறுகிறது.அடுத்த காட்சியில் அவள் காலையில் எழுவதுபோல் இருக்கும்.

  கதாநாயகி அடுத்த நாள் என்று நினைத்தால்,விபத்து நடந்த அன்றைய தினமே மீண்டும் தொடங்கும்.முந்திய நாள் நிகழ்வுகளே மீண்டும் நடந்து விபத்தில் சென்று முடிகிறது.

  ஒரு கால வலையில் சிக்கிக் கொண்ட கதாநாயகி மிகுந்த குழப்பத்திற்கு உள்ளாகி,அதிலிருந்து மீள வழி தெரியாமல் ஒவ்வொரு நாளும் அவளது நடவடிக்கைகளை மாற்றி செய்து பார்க்கிறாள்.

  அப்போதும் தனது இயல்பு நிலைக்கு மாற முடியாமல் , விரக்தியில் எல்லா தீய செயல்களையும் செய்கிறாள்.அப்போதும் தீர்வு கிடைக்காமல் போகவே,நல்ல விஷயங்களை செய்கிறாள்.

  ஆனால் ஆபத்திலிருந்து எப்படி தப்புவது என்று தெரிந்து கொண்டு அவளது தோழி ஒருத்தியை உயிரை விபத்திலிருந்து காப்பாற்றி, அக்கால வலையை உடைத்து வெளிவருகிறாள்.

  என்னை பல வழிகளில் யோசிக்க வைத்த திரைப்படம் இது.ஒரு விஷயத்தை பல மாற்று வழிகளில் எப்படி சிந்திப்பது என்பதை இப்படம் எனக்கு சொல்லியது.எனது கண்ணோட்டத்தையும் மாற்றியதோடு, மாற்று சிந்தனையையும் கொண்டு வந்தது.ஒரு நாளில் நடக்கும் சாதாரண நிகழ்வுகளே பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.அவ்வகையில் என் மனதை விட்டு அகலாத திரைப்படம் இப்படம்.

  SWETHA SENTHILKUMAR
  CEDAR GIRLS SECONDARY SCHOOL

 18. என் வீட்டிற்கு அருகிலுள்ள விளையாட்டு மைதானம் எனர மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. நான் எனது சிறு வயதில் விளையாட்டு மைதானத்திற்கு ஒவ்வோரு வாரமும் தவறவிடாமல் சென்றுவிடுவேன். நானும் என் நண்பர்களும் அந்த விளையாட்டு மைதானத்தில் சந்தித்து முழு மகிழ்ச்சியுடன் விளையாடுவேன். அந்த இனிய நிகழ்வுகளை மறக்கத்தான் முடியுமா? சில முறை நான், , என் நன்பர்கள், நமது அன்னைகள் எல்லோரும் ஒன்று சேர்த்து நமது பொழுதை மகிழ்ச்சியாக கழிப்போம். நமது தாயார்களும் வீட்டில் சமைத்த உணவுகளை அங்கே கொண்டுவருவார்கள். எல்லோரும் உட்கார்ந்து உணவை ருசிப்போம். அந்த நாளே குதூகலமாக திகழும். நாம் அனைவரும் சேர்ந்து “செந்தோசா”, “ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா” போன்ற இடங்களுக்கும் சென்று மகிழ்வோம்.

  இப்போதெல்லாம் எனக்கு அதே நாளில் துணைப்பாட வகுப்பு இருப்பதால் என்னால் அங்கே செல்ல முடிவதில்லை. ஆனால் அந்த விளையாட்டு மைதானத்தில் நடந்த அனைத்து நிகழ்வுகளும் எனது இதயத்தில் பசுமரத்தாணியைப் போல இன்னும் பதிந்திருக்கிறது. நான் அதை எவ்வேளையிலும் மறக்கவேமாட்டேன். நேரத்தை பின்னோக்கி அனுப்பினால் எவ்வளவு நன்றாக இருக்கும்…

  யாஷிகா ராதாகிருஷ்ணன்
  ரிவர்சைட் உயர்நிலைப்பள்ளி

 19. எனக்கு பிடித்த இடம் புக்கிட் பாத்தோக் பூங்கா ஆகும் .நான் சிறு வயதில் இருந்தே அங்கே சென்று விளையாடுவேன். சிறுவர்கள் வளையாட ஏற்றஇறக்கம், சறுக்கு விளைளையாட்டு போன்றவை உள்ளன. அதற்கு அருகில் பூப்பந்து திடல் இருக்கிறது. எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். நாங்கள் எப்போதும் உற்சாகத்துடன் விளையாடுவோம்.தினமும்.காலையில் நானும் என் அப்பாவும திடலைச் சுற்றி மெதுவோட்டம் ஓடுவோம். உடற்பயிற்சி செய்வதற்கு புதிதாக நிறைய சாதனங்கள் அமைத்துள்ளார்கள். அது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நான் தினமும் 40 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்வேன். மிதிவண்டி ஓட்டுவதற்கு பாதை அமைத்துள்ளார்கள். என் நண்பர்களுடன் நான் மிதிவண்டி ஓட்டுவேன். பள்ளி விடுமுறை நாட்களில் நானும் என் நண்பர்களும் பூங்காவிற்குச் சென்று பல விளையாட்டுகள் விளையாடுவோம். முதியவர்கள் உடற்பயிற்சி செய்வதற்க்கு அவர்களுக்கு ஏற்ற சாதனங்களும் திடலில் அமைத்துள்ளார்கள்..சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் புக்கிட் பாத்தோக் பூங்கா மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

  ஆத்திப்
  புக்கித் பாத்தோக் உயர்நிலைப்பள்ளி (UPTLC)

 20. செங்காங் மிதக்கும் நிலப்பகுதி

  எனக்குப் பிடித்த இடம் எதுவென்றால் என் குடியிருப்புப் பேட்டைக்கு அருகில் உள்ள செங்காங் மிதக்கும் நிலப்பகுதி. அங்கு அழகான மற்றும் சுத்தமான நீர் திறந்தவெளி உள்ளது. அதில் நீர் மட்டுமே இயல்பான தன்மை கொண்டது.

  பொங்கோல் மற்றும் செங்காங் பகுதியில் வசிக்கும் மக்கள் சிங்கப்பூரில் மிகப்பெரிய மனிதனால் உருவாக்கப்பட்ட மிதமான நிலப்பரப்பை அனுபவிக்க முடியும். மக்கள் பயன்பாட்டு குழு இச்செயலை, அழகாக நீர் திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டது, செங்காங் நீர்த்தேக்கத்தில் உட்கார்ந்திருக்கும் நிலப்பகுதி கிட்டத்தட்ட அரை கால்பந்து மைதானத்தின் அளவு ஆகும், இது தற்போது பிரதம மந்திரி திரு லீ ஹெசியன் லோங் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.இந்நிகழ்வு தேசிய நீர்ப்பாசன நிறுவனமான மக்கள் பயன்பாட்டு குழு மற்றும் செங்காங் மேற்கு அடித்தளங்கள் ஏற்பாடு செய்திருந்தது.
  செங்காங் மிதக்கும் நிலப்பகுதியில் வெறும் அழகியல் விட அதிகமாக உள்ளது, நிலப்பரப்புகளை அழகுபடுத்துதல் மற்றும் ஓய்வு நேரங்களுக்கு புதிய இடைவெளிகளை உருவாக்கும் போது. நீர்த்தேக்கத்தின் முக்கிய செயல்பாடு நீர்த்தேக்கத்தில் நீரை சுத்தப்படுத்துவதாகும். இது உயிர் வேதியியல் மிகவும் மாறுபட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகும். மேலும் பறவைகள் மற்றும் விலங்குகளின் ஒரு வெற்றிகரமான சமூகத்தை ஆதரிக்கிறது.வரவிருக்கும் காலப்பகுதியில் செங்காங் மிதக்கும் நிலப்பரப்பில் உள்ள பறவைகள் மற்றும் பிற வனப்பகுதிகளை இனம் காணமுடியாது.

  ஸ்ரீமன் ஸ்ரீதர்
  உயர்நிலை இரண்டு உயர்தமிழ்
  செங்காங் உயர்நிலைப்பள்ளி (UPTLC)

 21. நூலகத் தேடல்

  நூலகம்:
  ‘ஒரு நூலகம் பத்து சிறைச்சாலைகளை மூடவல்லது’ என்றால் அது அறிவின் ஒளியை பாய்ச்சக் கூடியது ஆகும். அறிவு பாய்ச்சும் போது அதர்மங்கள் அழிந்து போகும். ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ – என்கிறது கொன்றை வேந்தன். நூலகம் செல்வது அதைவிட நன்று என்று நாம் மாற்றி யோசிப்போம்.

  என் தாயார் அறிவுத் தேடலில் ஆர்வம் உள்ளவர். இறை தேடும் பறவைகள் அதைத் தேடிச் செல்வது போல், என் தாயார் அறிவைத் தேடி நூலகம் நோக்கிச் செல்வார். நாங்கள் வசிக்கும் ஜூரோங் மேற்குப் பகுதியில் நூலகம் உள்ளது. அங்குச் சென்று நல்ல நூல்களைத் தேர்வு செய்து படிப்பார். அவரைப் பின் பற்றி நானும் சென்று படிக்கத் தொடங்கினேன்.
  நூலகத்தின் சிறப்புகள்

  ஜூரோங் நூலகம் குளிர்சாதன வசதியுடையது. வசதியான சொகுசான இருக்கைகள். நிசப்தமோ நிசப்தம் அங்கேதான். அந்தச் சூழ்நிலையில் படிப்பது அப்படியே மனதிற்குள் பதியும். கணினி மயமாக்கப்பட்ட நூலகம் என்பதால் நூல்களைத் தேர்வு செய்வது எளிது. தாகம் எடுத்தால் குடிப்பதற்கு தண்ணீர் வழங்கும் பெட்டி இருக்கிறது.

  நான் படித்த நூல் – அக்னிச் சிறகுகள்

  நான் தேர்வு செய்த நூல்களில் ஒன்று அக்னிச் சிறகுகள். அது திரு அப்துல் கலாமின் சுயசரிதை ஆகும். அவர் எத்துணை துன்பங்கள் பெற்று படிக்கலானார். அவரது ஆசிரியர் தூண்டிய அறிவியல் ஆர்வத்தால் அறிவியலில் வானியல் துறையைத் தேர்வு செய்து படிக்கலானார். வானியலில் உலகளவில் வரலாறு படைத்தார். பற்பல தோல்விகளைச் சந்தித்தாலும், துவளாது இறுதியில் வெற்றி கண்டார். எனவே, தோல்வியும், வெற்றியும் நிரந்தரமில்லை. தோல்விகளே வெற்றியின் படிக்கட்டுகள் என்பதை இந்நூல் வாயிலாக உணர்ந்தேன்.

  அஃப்ரின் பாத்திமா (1E4)
  யுவான் சிங் உயர்நிலைப் பள்ளி

 22. நம் மனித வாழ்க்கையில் நடைப்பெற்ற அல்லது நடைபெற இயலாத நிகழ்வுகளை நூல்களிலிருந்து நம்மால் பெற முடிகிறது. கற்பனை திறனையும் நம் அறிவு சார்ந்த திறனையும் வளர உதவி செய்யக் கூடியவை நம் படிக்கும் நூல்களே. ‘ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும்’ என்று கூறினார் விவேகானந்தர். இவ்வரிகளுக்கு ஏற்ப, சிங்கப்பூரில் பல பொது நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. அவ்வாறு என் வீட்டருகில் உள்ள ஜூரோங் பொது நூலகத்தில் நான் சிறிது நாள்கள் கழித்த என் அனுபவத்தைப் பற்றி இக்கட்டுரையின் மூலம் மேலும் விளக்க இருக்கிறேன்.

  ‘இந்த வாழ்வின் ஆகச் சிறந்த கேளிக்கை கொண்டாட்டம் ஓசையின்றி நடக்கிறது. அதுதான் புத்தக வாசிப்பு’ என்றார் எமர்சன். அப்படிப்பட்ட சிறந்த நாவல்கள் அல்லது வாழ்க்கையை மையமாக கொண்ட புத்தகங்களை படிக்க நான் விருப்பப்படுவேன். அதில் நான் குறிப்பாக கூறவிரும்புவது ‘யோகாவை’ பற்றி தொரிந்துகொள்ளும் புத்தகமாகும். யோகா என்று கூறும்போது பலவிதமான கருத்துகள் அனைவருடைய மனதில் உருவாக்கும். நானும் இப்புத்தகத்தை படிப்பதற்கு முன்பு யோகாவை பற்றி பல தவறான கருத்துகளையும் செய்திகளையும் பின்பற்றினேன்.

  ஆனால், இப்புத்தகத்தின் மூலம் யோகாவின் உண்மையான பலன்கள். அதை எதனால் எதற்காக செய்கின்றனர், யாரால் உருவாக்கப்பட்டது என்று அனைத்தையும் தெரிந்துகொண்டேன். 500 ஆண்டுகள் பழமையான இக்கலையை ஆயிரக்கணக்கான சித்தர்கள், ஞானிகள் போன்றோர் வாழ்நாள் முழுவதும் பயிற்சி பெற்று கண்டுபித்துள்ளனர்.

  இந்நூலின் மூலம், நான் என் வாழ்க்கையிலும் யோகா கலையை என்னால் முடிந்த அளவிற்குக் கடைப்பிடிக்கின்றேன். சிறிது கடினமான யோகாசானம் வகைகளை முதலில் செய்து பிறகு கடினமான யோகாசனம் வகைகளை செய்யமுயற்சிக்கிறேன். முழுமையாக, இந்த நூலின் மூலம் என் வாழ்க்கையை பயனுள்ளதாய் மாற்ற கற்றுக்கொண்டேன்.

  JANAKESWARRI
  JURONG SECONDARY SCHOOL

 23. நூலகத் தேடல்

  நூலகங்கள், அனைவரும் புத்தகங்கள் இரவல் பெறச் செல்லும் ஓர் இடமாகும்.

  சிங்கப்பூரில், ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு நூலகம் இருக்கும். நான் வசிக்கும் வட்டாரத்தில் உள்ள
  நூலகத்தின் பெயர் சுவா சூகாங் பொது நூலகம். அங்கு நான் பாலர் பள்ளியில் இருக்கும் நேரத்திலிருந்து சென்றுகொண்டிருக்கிறேன்.அங்கு வெவ்வேறு வயதானவர்களுக்குப் பல புத்தகங்கள் உள்ளன. அங்குள்ள தமிழ், சீன, மலாய் மற்றும் ஆங்கில புத்தக தொகுப்புகளை கண்டு நான் வியந்திருக்கின்றேன்.

  அமர்ந்து வசதியான முறையில் படிப்பதற்கும், வேலை செய்வதற்கும் இடம் உள்ளன. மாத சஞ்சிகைகள், தினசரி செய்தித்தாள் தொகுப்புகளை பலர் அமர்ந்து படிப்பதற்கு சொகுசான நாற்காலிகள் இருக்கின்றன. அந்த அமைதியான சூழ்நிலை படிப்பதற்கு மிக பொருத்தமானதாக இருக்கும்.

  விடுமுறைகளின்போது நான் இந்திய எழுத்தாசிரியர் படைத்திருந்த சிறுகதைகள் பல படித்திருக்கின்றேன். அது மட்டுமில்லாமல் தெனாலிராமன் கதைகளும் நான் படித்தேன். அந்த நூல்களினன் மூலம் நான் நீதி, நேர்மை பற்றி அறிந்துக்கொண்டேன். ஒரு சில குறும்புச் செயல்கள் செய்த கதாப்பாத்திரங்கள் பற்றியும் சிறுகதைகளில் படித்தேன். இதை போன்ற நிறைய சுவாரசியமான புத்தகங்களை நான் தொடர்ந்து படிக்க விரும்புகிறேன். வீட்டிற்கு அருகில் அமைந்திருக்கும் நூலகங்களை அனைவரும் பயன்படுத்திக்கொண்டால் அது அவர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

  வசுமதி
  MANIMARAN VASUMATHI, 2A1
  கிளமெண்டி டவுன் உயர்நிலைப் பள்ளி
  CLEMENTI TOWN SECONDARY SCHOOL

Your email address will not be published.


*