நான் பார்த்த குறும்படம்

இணையத்தில் நிறைய தமிழ்க் குறும்படங்கள் இருக்கின்றன. உங்கள் ஆசிரியர்களும் அவற்றை பார்க்கச் சொல்லி ஊக்கமூட்டுகிறார்கள். அப்படி நீங்கள் பார்த்து ரசித்த தமிழ்க் குறும்படம் ஒன்றைப்பற்றிய கட்டுரையை எழுதி இங்கே பகிருங்கள். குறும்படத்தில் எது உங்களைக் கவர்ந்தது – கதையா, கருவா, இயக்கமா, நடிப்பா, ஒளிப்பதிவா? படத்தில் நீங்கள் கண்ட குறைகள் என்ன? – இப்படி, உங்கள் கட்டுரை உங்களுக்குத் தோன்றிய எந்தக் கருத்தைப் பற்றியும் இருக்கலாம். அதை இங்கே பகிருங்கள்.
கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கட்டுரைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
தரமான கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கட்டுரைகளை பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 19 ஆகஸ்ட் 2016. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!

6 கருத்துரை

 1. நான் பார்த்த குறும்படம்
  நான் பார்த்த குறும்படத்தின் பெயர் ”மக்கு”. இந்தக் குறும்படத்தின் முக்கிய கதாபாத்திரம், மாணிக்கம்.அவன் ஆசிரியர் கேட்கும் எந்தக் கேள்விக்கும் பதில் கூறாமல்,எப்போதும் வரைந்தக்கொண்டே இருப்பான்.அவனை எப்போதும் மக்கு என்று ஆசிரியர் சொல்லிக்கொண்டே இருப்பார்.ஒரு நாள்,பாட வேளையில் மாணிக்கம் வரைந்துக்கொண்டிருந்ததைப் பார்த்த ஆசிரியர்,அவனை வகுப்பின் வெளியே சென்று நிற்க சொன்னார்.பிறகு,ஆசிரியர் தேசிய அளவில் நடக்கவிருந்த வரையும் போட்டியைப் பற்றி கூறினார்.அதில் கலந்துக்கொள்ள விருப்பப்பட்ட மாணவர்களில் மாணிக்கமும் ஒருவன்.ஆனால்,அவனின் ஆசிரியர்,”படிப்பே வராத உனக்கெல்லாம் போட்டி தேவையா?”,என்ற் சொல்லி அவனை போட்டிக்கு செல்ல விடவில்லை.ஆனால்,சில நாட்களுக்கு பிறகு,தலைமையாசிரியர்,வகுப்பு ஆசிரியரிடம்,மாணிக்கம் தேசிய அளவில் நடைப்பெற்ற வரையும் போட்டியில் முதலிடம் வாங்கி,பள்ளிக்கு பெருமை தேடி தந்ததாக கூறினார்.இதைக் கேட்ட ஆசிரியர்,வகுப்பிற்கு முன் சென்று மாணிக்கத்தைப் பாராட்டினார்.
  இந்தக் குறும்படத்திலிருந்து,ஒருவருக்கு படிப்பு வரவில்லை என்றால்,இவர் மக்கு அல்ல.ஒவ்வொரு மனிதனுக்கும் தனித் திறமை ஒன்று இருக்கும்.அது என்ன என்று அறிந்துக்கொண்டு அவரை ஊக்குவித்தால்,அவர் நிச்சயம் பெருமை தேடி தருவார் என்பதை அறிந்துக்கொண்டேன்.
  மித்ரா பாலமுருகன்
  யூனிட்டி உயர்நிலைப் பள்ளி

 2. நான் பார்த்த குறும் படம் – Meals Ready (மீல்ஸ் ரேடி)
  சக வகுப்பு மாணவர்களுடன் சேர்ந்து பார்த்தேன்.
  இந்தக் குறும் படம் எனக்கு பிடித்ததற்கான காரணம்- இதில் முக்கிய கதாபாத்திரம் முதியவர் தனக்கு பசியாக இருந்தாலும் தனக்குக் கிடைத்த மிட்டாயைச் சாப்பிடாமல் அதை தன் மனைவிக்காகப் பாதுகாத்து வைக்கிறார். நாள் முழுவதும் கடினமாக உழைத்து பெற்ற உணவை தன் மனைவியுடனும் பூனையுடனும் பகிர்ந்து கொள்கிறார்.
  இந்த தள்ளாத வயதிலும் கடினமாக உழைக்கிறார். உச்சி வெயில் மண்டையைப் பிளந்த போதிலும் காலில் காலணி இல்லாமல் தார் சாலையில் இங்கே உணவு கிடைக்கும் என்னும் அட்டையை ஏந்தி நிற்கிறார். அது அவரின் தன்மானத்தைக் காட்டுகிறது. நாக்கு வறண்ட நிலையிலும் தன் முதலாளியிடம் ஒரு குவளை தண்ணீர் கேட்க தயங்குகிறார்.
  எஸ்.ஹரீஸ்
  கான் எங் செங் பள்ளி

 3. நான் பார்த்த குறும்படம்
  எனது தமிழாசிரியை வகுப்பில் காண்பித்த குறும்படம் ‘ஆசை’. இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது ஏஞ்சல் என்ற சிறுமியின் மற்றவர்களுக்கு உதவும் குணம்.
  அவள் ஒரு ஏழை. அவளது அப்பா ஒரு குடிகாரர். அம்மா வீட்டு வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வருவாள்.
  ஏஞ்சல் பக்கத்து வீடுகளுக்குத் தேவையான பொருள்களை கடைகளுக்கு சென்று வாங்கி வருவாள். அவர்கள் அவளுக்கு காசு கொடுப்பார்கள்.
  அவளுக்கு மதிவண்டி வாங்க வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை. அதனால் கிடைக்கும் பணத்தை செலவு செய்யாமல் ஒரு உண்டியலில் சிறுகச் சிறுக சேமித்து வைத்தாள்.
  சுனாமியால் கடற்கரையோரத்து மக்களின் வாழ்க்கை தலைகீழாகியது. இதைக் கேள்விப்பட்ட அவள் தனது உண்டியலை உதவும் அமைப்பிற்குக் கொடுத்தாள். இதைப் பார்த்த அவள் தந்தை மனம் திருந்தி தனது குடிப்பழக்கத்தைக் கைவிட்டார்.
  இந்தப் படம் எனது மனத்தை நெகிழ வைத்தது.
  பெயர்: தேஜல்
  பள்ளி: சுவா சு காங் உயர்நிலைப்பள்ளி

 4. நான் பார்த்த ஒரு குறும்படம் உணவை வீணாக்க கூடாது; என்ற தலைப்பில் அமைந்த ஒரு படம். அந்தப் படத்தை விஐய வர்மன் என்பவர் இயக்கி இருகிறார்.
  இந்த கதையின் முக்கிய கதாபாத்திரம் லஷ்மி என்ற ஒரு சிறுமி ஆவாள். பெயரில் தான் லஷ்மி, வீட்டிலோ வறுமை. தன் உடல்நிலை சரியில்லாத தாயையும், கஷ்டம் புரியாத ஒரு தம்பியையும் கவனிக்கும் நிலையில் உள்ள சிறுமியாக இருக்கிறாள். சிறுமி என்பதை தாண்டி ஒரு தாயாக அந்த குடும்பத்தை தாங்குகிறாள்.
  அவள் ஒரு பணக்கார பெண்மணி வீட்டில் வேலை செய்கிறாள். அன்று, அவள் வேலை செய்யும் வீட்டில் தடபுடலாக பிரியாணி விருந்து நடக்கிறது. வந்திருந்த விருந்தினர்களை அவளுடைய எஐமானியம்மாள் விழுந்து விழுந்து உபசரிக்கிறார். லட்சுமியும் ஓடியாடி விளையாட வேண்டிய வயதில், ஓடியாடி வேலை செய்கிறாள். முதல் நாள் இரவு தன் உணவை தம்பிக்கு கொடுத்து விட்டு, மறுநாள் எஐமானி வீட்டில் உணவு உண்ணலாம் எனக் காத்துக் கொண்டிருந்த அவளுக்கு கடைசி வரை உணவே கிடைக்கவில்லை.மிகவும் ஆர்வமாக எஐமானியம்மாள் சாப்பிட தட்டை எடுத்து வர சொல்லும் போது, அரக்க பரக்க தட்டை எடுத்துக் கொண்டு ஓடி வருகிறாள்.
  ஆனால், மீதமிருந்த அடிப்பிடித்த பிரியாணி கூட அவளுக்கு வழங்கப்பவில்லை. அது, எஐமானியம்மாள் வீட்டில் இருக்கும் நாய்க்குட்டிக்கு கொடுக்கச் சொல்லிவிட்டார். ஒரு நாய்க்கு கிடைக்கும் மரியாதை கூட தனக்குக் கிடைக்காததை எண்ணி மனம் உடைந்து அழுகிறாள்.
  இந்த குறும்படத்தை பார்ப்பவர்களுக்கு மனதில் பல கேள்விகள் எழுகிறது. விருந்திற்கு வந்த ஒரு மருத்துவரிடம் பசி எடுக்காமல் இருக்க மருந்து தரச் சொல்லி கேட்கும் போது நமக்கு இதயமே கனக்கிறது. இயற்கையாக பசி எடுக்கும் உணர்வை அடக்கிக் கொள்ளும் ஏழைகளுக்கு மத்தியில் பசி எடுக்க செயற்கையாக பணக்காரர்கள் மருந்து உட்கொள்கிறார்கள். சமுதாயத்தின் ஏற்றத் தாழ்வுகளை மீறி பசி அனைவருக்கும் பொதுவான ஒன்று.
  susmitha 2E2
  yuan ching secondary school

 5. நான் பார்த்த குறும்படத்தின் தலைப்பு “பசி”.இப்படம் மாணவர்கள் அனைவர் மனதையும் உலுக்கும் படம்.இப்படத்தின் கதாநாயகன் ராமு.அவனுடைய குடும்பம் மிகவும் ஏழ்மையானது.ஒரு வேளை சாப்பாட்டிற்க்கே வழி இல்லை.
  அன்று ராமு வாய்க்காலில் நின்று பல் துலக்கி,அந்த வாய்க்காலிலேயே குளித்து விட்டு பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தான்.பசி அவன் வயிற்றை கிள்ளியது.சமையல் அறையில் சென்று பாத்திரத்தை பார்த்தான்.அதில் ஒன்றும் இல்லை.உடனே அருகில் இருந்த குடத்திலிருந்து 4 டம்ளர் தண்ணீரை குடித்துவிட்டு பள்ளிக்கு சென்றான்.பள்ளியில் அன்று தேர்வு.அவனால் பசியின் மயக்கத்தால் எழுதமுடியவில்லை.வயிற்றை பிடித்துக் கொண்டே முடிந்தவரை எழுதிக்கொண்டிருந்தான்.அப்போது ஆசிரியர் அருகில் இருந்த அவருடைய சாப்பாட்டு டப்பா ராமுவின் கண்ணில் பட்டது.நாக்கில் எச்சில் ஊறி,பசி மேலும் வயிற்றை கிள்ளியது.
  அப்போது திடீரென்று குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டு,அனைவரும் திகைத்தனர்.ஆசிரியர் மாணவர்களை “ஓடுங்கள்!ஓடுங்கள்!”என்று கதறினார்.அவரும் ஓடி மறைந்து விட்டார்.மாணவர்களும் தப்பித்தோம்,பிழைத்தோம் என்று நாலாபக்கம் சிதறி ஓடி ஒளிந்தனர்.ஆனால் ராமுவோ,ஆசிரியருடைய மேஜையில் இருந்த அவருடைய சாப்பாட்டை எடுத்து சாப்பிட ஆரம்பித்தான்.
  இச்செயல் என் மனதை மிகவும் உலுக்கியது. ராமுவிற்க்கு உயிரை விட மேலானதாக பசி தோன்றியது.இப்படியும் பசியால் வருந்துபவர்கள் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.இப்படத்தை பார்த்த பிறகு தான் சாப்பாட்டின் அருமை எனக்கு புரிந்தது.
  நிவேதிதா
  ஜூரோங் உயர்நிலைப் பள்ளி

 6. ஓர் அப்பா மகளின் உறவைப்பற்றிய உணர்வு பூர்வமான குறும்படம் இது. அம்மா இறந்து தாய் பாசத்துக்கு ஏங்கும் ஏழு வயது சிறுமி மீனா. பணம் பணம் என்று ஓடிக்கொண்டே இருக்கும் அப்பா. தினமும் காலையில் அப்பா மீனாவை எழுப்பி குளிக்க வைத்து, உடைபோட்டுவிட்டு, சாப்பாடு கொடுத்து கையில் 5 வெள்ளி பணமும் கொடுத்து பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைப்பார். பின் அவரும் அலுவலகத்திற்குச் சென்று விடுவார்.
  சாயுங்காலம் மீனா பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் வீட்டில் யாரும் இல்லாததால், வெறுமை அவளை வாட்டியது. இதில் பத்து நாட்கள் விடுமுறை வேறு. மீனா தூங்கிக்கொண்டு இருக்கும்பொழுது எப்பவும் போல அப்பா மீனாவுக்கு தேவையான அனைத்தையும் மேசையில் எடுத்து வைத்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிடுவார். மீனா தூங்கி எழுந்ததும், வீட்டில் அவளுக்கு தேவையான அனைத்தும் இருக்கும் பாசத்தைத்தவிர!!
  இப்படியே விடுமுறை நாள் 2,3,4 என்று போய்க்கொண்டே இருந்தது. ஒரு நாள் சிறுமி அப்பாவை அழைத்து ‘அப்பா ஒரு நாள் கூட என்னுடன் சேர்ந்து விளையாட உங்களுக்கு நேரமில்லையா?’ என்று கேட்டாள்.
  தினமும் வேலைக்குப் போனால்தானே நமக்குத் தேவையான பணம் கிடைக்கும் என்று சொன்னார். பின்பு மீனா, ” ஒரு நாள் வேலைக்குப் போனால், எவ்வளவு கிடைக்கும்?” என்று கேட்டாள். அதற்கு அப்பா,”100 வெள்ளி” என்றார். உடனே மீனா தன் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்து வந்து, அப்பாவிடம் கொடுத்து,” இதில் 100 வெள்ளிக்கும் மேல் பணம் இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு என்னுடன் இன்று ஒரு நாளாவது சேர்ந்து இருக்க முடியுமா?” என்று கண்களில் கண்ணீர் மல்கக் கெஞ்சினாள். உடனே, அப்பாவின் தொண்டைக் குழியில் இருந்து வார்த்தைகள் வெளியே வரமுடியாமல் கண்ணீர் தாரை தாரையாய் வழிய, மகளை கட்டி அனைத்துக் கொண்டார். இந்தக் கதையின் கரு என் மனதை கலங்க வைத்தது. இந்தக் குறும்படம் ஓர் உண்மையான வாழ்கைக் கதையை சித்தரித்தது போல் இருந்தது.
  முருகன் சிநேகா
  தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளி

Your email address will not be published.


*