பேய்க் கதைகள் கேட்டிருக்கிறீர்களா?

 
பேய்க் கதைகள் என்றால் நமக்குப் பிடிக்கும். நம் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரும் நம்மிடம் பல பேய் கதைகளைச் சொல்லி
இருப்பார்கள். நாமும் புத்தகங்களில் படித்திருப்போம். அப்படி, நீங்கள் கேட்ட, படித்த பேய்க் கதைகளில் உங்களுக்குப் பிடித்த கதையை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, இந்தக் கதைக்கான பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய
(Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும். அவற்றுள் சிறந்த மூன்று கதைகள்
தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள் – 31 மார்ச் 2015,
திங்கள்கிழமை. வாழ்த்துகள்!

5 கருத்துரை

 1. எனக்குப் பிடித்த பேய்க் கதை, ‘ஆ’ சிங்கப்பூர் அமானுஷ்யக் கதைகள் என்ற புத்தகத்தில் வெளிவந்தக் கதையாகும். இந்தக் கதை, எழுத்தாளர் சூர்ய ரத்னாவால் எழுதப்பட்டது. இந்தத் தொகுப்பில் ‘கட்டுவிரியன்’ என்ற கதை என்னை மிகவும் கவர்ந்துள்ளது.
  இந்தக் கதையின் முக்கியக் கதாப்பாத்திரங்கள், கிரண் மற்றும் சமந்தா. பதினேழு வயது கிரண், சமந்தாவின் அண்ணன் மகள்.
  அவள் படிக்கும் பள்ளியில் தான் சமந்தா நூலகராக பணி புரிகிறார். அப்பள்ளி மாணவர்களுக்கு சமந்தா என்றால் உயிர்.
  ஓர் ஓஜா விளையாட்டிற்கு சமந்தாவை அழைத்துச் சென்றாள் கிரண். அவ்விளையாட்டை கிரணுடைய தோழி, அம்பிகாவுடைய பெரியம்மா விளையாடினார். தனக்கும் தனது காதலனான சிவாவுக்கும் விவாகம் நடக்குமா என்று ஆவியிடம் வினவினாள் கிரண். இல்லை என்றும், அதற்கான காரணம் துரோகம் என்றும் ஆவி கூறிவிடும். அந்தக் கூட்டத்திற்கு பிறகு கிரண், சிவாவை சந்தேகத்தோடு பார்க்க ஆரம்பித்தாள். சிவா தனது தோழி அம்பிகாவை பாராட்டிய பிறகு, அவள்தான் தன்னை ஏமாற்றிவிட்டாள் என முழுமையாக நம்பினாள் கிரண். சமந்தாவிற்கு சிவாவை தெரியும் என்பதால், அவரே பேசி இருவரையும் சேர்த்து வைக்கவேண்டும் என்று கெஞ்சினாள் கிரண். சமந்தா ‘மாட்டேன்’ என்று கூறியதும், முழுக்க முழுக்க சிவப்பு உடைகளை அணிந்து, தனது பள்ளியின் நான்காவது மாடியிலிருந்து குடித்துத் தற்கொலை செய்துகொண்டாள் அவள்.
  நூலகத்தில் சமந்தா தனியாக இருக்கும்போது, கிரணுடைய ஆவி அவரை பழி வாங்கும். கொடூரமான முறைகளை கையாளும். ஆம், கிரணை ஏமாற்றியது, அம்பிகா இல்லை, சமந்தா. சிவாவை தன் வசப்படுத்தியது அம்பிகா இல்லை, சமந்தா. இதையெல்லாம் மறைவாக இருந்து பார்த்த பிறகே, கிரண் தற்கொலை செய்துகொண்டாள்.
  ‘உன்னை எவ்வளவு நம்பியிருந்தேன் அத்தை… ஏமாற்றிவிட்டாயே? உன்னை மன்னிக்கவே மாட்டேன்’ என்று கிரணுடைய ஆவி, சமந்தா மரணவாயிலில் இருக்கும்போது கிசுகிசுக்கும்.
  *சிவப்பு நிற ஆடை அணிந்து ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும்போது, அவர் மீண்டும் ஒருவரை பழி வாங்க ஆவியாக வருவார் என்பது, சீனர்களின் நம்பிக்கையாகும்.
  அபிராமி குணசேகரன்
  செயிண்ட் ஹில்டாஸ் உயர்நிலைப்பள்ளி

 2. மரப்பொம்மை
  நான் என் நெருங்கிய நண்பர்களுடன் என் கட்டடத்தின் கீழ்தளத்தில் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் காற்பந்து விளையாடிக்கொண்டிருந்தேன். இரவு நேரம் ஆகிவிட்டதால், நான் என் மிதிவண்டியை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டேன். என் நண்பர்களும் தங்களுடைய வீட்டிற்குச் செல்லப் புறப்பட்டார்கள்.
  அப்போது எங்களுக்குத் திடீரென்று ஒரு அதிர்ச்சி, எங்கள் அதிர்ச்சிக்குக் காரணம் ஒரு கட்டையில் உருவாக்கப்பட்ட பொம்மையை நாங்கள் பார்த்ததேயாகும். அது ரொம்ப பயங்கரமாக இருந்தது. அது புகைபிடித்த மாதிரி இருந்தது. நானும் என் நண்பர்களும் பதறிப் போய் வீட்டுக்கு ஓட ஆரம்பித்தோம். நான் மின்னல் வேகத்தில் என் மிதிவண்டியை ஓட்டி வீட்டுக்குச் சென்றேன். என் இரு நண்பர்களும் மின்னல் வேகத்திலும் வீட்டுக்கு ஓட்டினார்கள். நான் வீட்டுக்குச் சென்றதும், நடந்ததை என் பெற்றோர்களிடமும் தங்கையிடமும் கூறினேன்.
  அவர்கள் அதிர்ச்சியுடன் இருந்தார்கள். நான் அடுத்த நாள் அந்த இடத்தைப் பார்த்தப்போது, அந்தப் பொம்மை அந்த இடத்தில் இல்லை. நான் இந்தச் சம்பவத்திலிருந்து மர்ம சம்பவங்கள் உண்மை என்று தெரிந்துகொண்டேன். இந்தச் சம்பவம் பசுமரத்தாணி போல் என் மனத்தில் நீங்கா இடத்தை பிடித்தது.
  ஹரேஷ்
  உயர்நிலை ஒன்று விரைவுநிலை
  யுவான் சிங் உயர்நிலைப் பள்ளி.

 3. பயமான நாள்
  எனக்குப் பேயென்றால் பயமாக இருக்கும். பேய்கள் பற்றிய செய்திகளைச் செய்திதாளில் படித்தேன். அதில் ஒருவர் தன் வீட்டில் ஒரு உருவம் பார்த்தாகக் கூறியிருந்தார். அதைப் படித்ததும் எனக்கு மிகவும் பயமாக இருந்தது. சில சமயத்தில் நான் தொலைக்காட்சியில் பேய்ப்படங்கள் பார்பேன். அதைப் பார்க்கும்போது மிகவும் திகிலாக இருக்கும்.
  ஒரு சமயம் என் பெற்றேர்கள் பொருட்கள் வாங்க கடைக்குச் சென்றார்கள். நான் வீட்டில் என் பள்ளி பாடங்களைச் செய்து கொண்டிருந்தேன் அப்போது வீட்டிற்கு வெளிய ஒரு சத்தம் கேட்டது. நான் என் பெற்றோர்கள் வருகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால், யாருமே கதவைத் தட்டவில்லை. எனக்கு நடுக்கமாக இருந்தது. நான் சன்னல் திறந்து பார்க்கும்போது வாசலில் ஒரு பெண் அவளது முடி பறக்க நின்று கொண்டிருந்தார். அவரது உருவம் சரியாகத் தெரியவில்லை. நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். நான் படித்த பேய்க்கதைகள் ஞாபகம் வந்தது. என் மனம் ”படக் படக்” என்று அடித்துக் கொண்டது. நான் பக்கத்து வீட்டு நண்பருக்கு தொலைபேசியில் தகவல் கூறினேன்.
  பக்கத்து வீட்டு நண்பர் எனக்குக் கதவை திறக்காதே என்று கூறினார். அவர் என் வீட்டுக்கு வருவதாகக் கூறினார். எனக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது. அவர் வந்து அந்த உருவம் யார் என்று பார்த்தார்.
  அந்த நேரத்தில் என் பெற்றோர்கள் வந்தார்கள். அவர்கள் வந்த பெண்ணுடன் பேசினார்கள். அவர் ஒரு விற்பனையாளர் என்று தெரிய வந்தது. பிறகு அந்தப் பெண் சென்றதும் நான் நடந்ததைக் கூறினேன். அவர்கள் வயிறு வலிக்க சிரித்தார்கள். பிறகு பயப்படக்கூடாது என்று அறிவுரை கூறினார்கள். நாங்கள் பக்கத்து வீட்டுக்கார நண்பருக்கு நன்றி கூறினோம். எனக்கு வெட்கமாக இருந்தது. இனிமேல் பயப்படக்கூடாது என்று முடிவெடுத்தேன்.
  மகாதேவன்
  உயர்நிலை ஒன்று வழக்கநிலை
  யுவான் சிங் உயர்நிலைப் பள்ளி.

 4. ஒரு திகிலான இரவு நேரம்
  அன்று இரவு மணி 9.00. நான் தனியாக வீட்டில் தொலைக்காட்சிப் பார்த்துக்கொண்டிருந்தேன். என் பெற்றோர்களும் என் தங்கையும் என் அப்பாவின் நண்பனின் மூன்றாவது மகன் திருமணத்திற்குச் சென்றிருந்தனர். எனக்கு உடல் நலமில்லாததால் நான் வீட்டிலேயே தொலைக்காட்சிப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
  திடீரென்று, தொலைக்காட்சிக்குப் பின்னால் இருந்த சன்னல் வழியாக ஒரு மனிதனின் கருப்பு உருவம் என் கண்களில் தென்பட்டது. சிறிது நேரம் கழித்து ஒரு சலங்கையின் சத்தமும் கேட்கத் தொடங்கியது. சலங்கையின் சத்தம் கேட்டால் அது பேய் என்று நான் ஒரு திரைப்படத்தில் பார்த்திருக்கிறேன். அது என் நினைவிற்கு வந்தபோது பயம் என்னைக் கௌவிக்கொண்டது. நான் பயத்தில் தொலைக்காட்சியின் ஒலியை அதிகரித்தேன். ஆனால், அது வேலை செய்யவில்லை. அதனால், நான் என் அப்பாவிற்குத் தொலைபேசிமூலம் தொடர்புகொண்டேன். ஆனால், அவர் தனது கைத்தொலைபேசியை எடுத்துப் பேசவில்லை. நானும் நிறைய தடவைத் தொடர்புகொண்டேன். ஆனால், என் அப்பா கைத்தொலைபேசியை எடுத்து பேசவேயில்லை.
  பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் எனக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. சலங்கையின் சத்தம் மேலும் அதிகரித்தது. எனக்கு மிகப் பயமாக இருந்தது. நான் உடனே தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு ஒரு அறைக்குள் சென்று ஒளிந்துகொண்டேன். அப்போது இரவு மணி 10.00 ஆகிவிட்டது. யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. நான் பயத்துடன் சென்று கதவைத் திறந்தேன். நல்ல வேளை! அது என்னுடைய பெற்றொர்கள்தான். மறுகணமே, நான் வீட்டிற்க்கு வெளியே பேயைப் பார்க்க சென்றேன். ஆனால், அங்குப் பேய் இல்லை.
  அங்கு என் வீட்டின் அருகில் உள்ள பூனை தன் கழுத்துப் பட்டை மணியை ஆட்டிக்கொண்டே இருந்தது. மேலும், அங்கு ஒரு மனிதன் தன் நண்பன் முகவரியை வைத்துக்கொண்டு வீட்டைத் தேடி அலைந்துக்கொண்டிருந்தார். இதையெல்லாம் கண்ட நான் வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கினேன்.
  ஹேமந்த்
  உயர்நிலை ஒன்று விரைவுநிலை
  யுவான் சிங் உயர்நிலைப் பள்ளி.

 5. தலைதெறிக்க ஓடிய பேய்
  ஒருவனின் மனைவி மிகவும் உடல் நிலை சரியில்லாமல் படுக்கையில் இருக்கிறாள். சாகும் தருவாயில் அவள் அவனிடம், “நான் உன்னை உயிருக்குயிராக நேசிக்கிறேன், அதனால் உன்னைவிட்டுப் பிரிய எனக்கு விருப்பமே இல்லை. நான் இறந்தபின், நீ யாரையும் கல்யாணம் செய்துக்கொள்ள மாட்டேன் என்று எனக்கு ஒரு சத்தியம் செய்து கொடு. அப்படி மீறி நீ யாரையாவது கல்யாணம் செய்துகொண்டால், தினமும் நான் உன் கனவில் வந்து உன்னை தொந்தரவு செய்துகொண்டே இருப்பேன்”, என்று சொல்லிவிட்டு இறந்து விடுகிறாள். அவள் இறந்து பல மாதங்களாகியும், அவன் எந்தவொரு பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காமல் இருக்கிறான். ஆனால், திடீரென்று ஒரு பெண்ணைப் பார்த்துக் காதல் வயப்படுகிறான். காதலும் நிச்சயதார்த்தம் வரைச் செல்கிறது. ஆனால், அன்று இரவு திடீரென்று இறந்துபோன அவன் மனைவி பேயாக வருகிறாள். அவன் தான் செய்து கொடுத்த சத்தியத்தை மீறியதாகக் குற்றம் சாட்டுகிறாள். அன்று முதல் ஒவ்வொரு இரவிலும் பேயாக வந்து அவனை இம்சிக்கிறாள். அதுமட்டுமல்லாமல், அவனுடைய காதலியும் அவனும் பேசிகொண்டதை, ஒரு வார்த்தைகூட விடாமல் அப்படியே ஒப்பிக்கிறாள். இதனால், ஓவ்வொரு இரவிலும் அவன் தூங்கமுடியாமல் தவிக்கிறான். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவன் ஒரு நாள், இந்த பேய்க்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டுமென்று அந்த ஊரில் உள்ள ஒரு ஜென் துறவியிடம் சென்று தன் கஷ்டத்தைச் சொல்லி அறிவுரை கேட்கிறான். கதையைக் கேட்ட ஜென் துறவி, “இந்தப் பேய் மிகவும் புத்திசாலியான பேய்தான்” என்கிறார். ஆமாம் என்று சொல்லிய அவன், நான் சொல்கிற, செய்கிற அனைத்தையும் எப்படியோ தெரிந்து கொள்கிறது அந்தப் பேய் என்கிறான். அத்துறவியோ புன்னகைத்தபடி, “அப்படிப்பட்ட ஒரு பேயைக் கண்டு நீ பெருமைப்பட வேண்டும்” என்கிறார். பின்னர் அவரே, சரி அடுத்தமுறை அந்தப் பேயைப் பார்க்கும்போது நான் சொல்கிறபடி செய் என்று சொல்லி அவனை அனுப்பி வைக்கிறார்! அன்று இரவு திரும்பவும் அந்தப் பேய் வருகிறது. அவனும் அதன் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தவனாய், “உன்னைப் போல் ஒரு புத்திசாலியான ஒரு பேயை நான் இதுவரைப் பார்த்ததேயில்லை, அதுமட்டுமில்லாமல் உன்னிடமிருந்து என்னால் எதையுமே மறைக்க முடியவில்லை. ஆனால், நான் கேட்கும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் நீ விடை சொல்லிவிட்டால், நான் இந்த திருமணத்தையே நிறுத்திவிடுகிறேன், அதன் பின்னர் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாகவே இருந்துவிடுகிறேன்” என்கிறான். சரி, என்ன உன் கேள்வி? என்கிறது பேய். உடனே அவன் ஒரு பையிலிருந்து கடலையைக் கை நிறைய அள்ளி, “என் கையில் எத்தனை கடலை மணிகள் இருக்கிறது என்று சரியாகச் சொல் பார்க்கலாம்” என்கிறான். அவ்வளவுதான், அந்தக் கேள்வியைக் கேட்டுத் தலைதெறிக்க ஓடிய பேய், அதன் பின்னர் அவன் வாழ்க்கையில் திரும்ப வரவே இல்லை!
  ஜஸ்மின்
  உயர்நிலை ஒன்று வழக்கநிலை
  யுவான் சிங் உயர்நிலைப் பள்ளி.

Your email address will not be published.


*