பார்த்து ரசித்த திரைப்படம்

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி
திரைப்படம் பார்க்க விரும்பாதவர்கள் இருக்க முடியுமா? அப்பா, அம்மா, குடும்பத்தினரோடு நல்ல படங்களைப் பார்த்த ரசித்த அனுபவம் உங்களுக்கு நிச்சயம் இருக்கும். அப்படி நீங்கள் பார்த்து ரசித்த படத்தைப் பற்றிய உங்கள் கருத்துகளை, அதன் குறை, நிறைகளை ஒரு கட்டுரையாக  இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கட்டுரைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும். தரமான கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்கள் கட்டுரைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள்,  12 மார்ச்  2016.  பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

14 கருத்துரை

 1. எனக்கு பிடித்த திரைப்படம் எதிர்நீச்சல்
  இப்படத்தில் வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் குஞ்சிதபாதமாக நகைச்சுவையாக நடித்துள்ளார் .நடிகை பிரியா கீதாவாக நடித்துள்ளார்.
  முதல் அரைமணிநேரம் நடிகர் சிவா தன் பெயரால் அவமானபடுவதும் பின் கீதாவை காதலில் மூழ்கவைக்க நகைச்சுவையாக பல திட்டங்களை தீட்டுகிறார், பின் பாதியில் தன் வாழ்கையில் முன்னேற பாடுபடுவதும் கதையின் கரு.
  இசைஅமைப்பாளர் அனிருத் பாடல்களை சிறப்பாக இசை அமைத்துள்ளார் எனக்கு பிடித்த பாடல் எதிர் நீச்சலடி,இதில் வரும் நாளை என்றும் நம் கையில் இல்லை என்ற வரி காலத்தின் உண்மையை எடுத்துக் காட்டுகிறது.
  பெயரால் என்ன என்று நாம் நினைக்க குஞ்சிதபாதம் என்ற தன் பெயரால் நடிகர் சிவா சிறு வயதில் இருந்தே அவமானபடுகிறார் . வளர்ந்த பின் தன பெயரால் வேலை கூட கிடைக்காமல் கஷ்டபடுகிறார் .நண்பனின் உந்துதலால் தன பெயரை ஹரிஷ் என்று மாற்றிக்கொண்டு முன்னேற்ற பாதையில் செல்கிறார் .காதலும் கை கூடுகிறது ஆனால் ஒரு கட்டத்தில் அவருடைய உண்மையான பெயர் கீதாவிற்கு தெரிய வர அவரை விட்டு பிரிந்து செல்கிறார்.
  தன் இயற்பெயரை வைத்தே வாழ்கையில் சாதிக்க வேண்டும் என்று நினைத்து நெடுந்தூர ஓட்டத்தில் கலந்து வெற்றி பெற்று தன கடின உழைப்பால் வெற்றி பெறுகிறார்.
  உழைப்பே வெற்றி தரும் மற்ற எவையும் கடின உழைப்பின் முன் தூசுக்கு சமானம் என்ற கருத்தை இந்த திரைப்படம் கூறுவதால் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
  இந்த திரைபடத்தில் எனக்கு பிடிக்காத ஒன்று காதலி பெயரால் சிவாவை விட்டுசெல்வதே ஆகும் .அதை விடுத்தது கீதா சிவாவிற்கு ஒரு உந்துகோலாக இருந்து இருந்தால் படத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்து இருக்கும்.
  தருண்
  DPS International School

  .

 2. பார்த்து ரசித்த திரைப்படம் ’ஐ’
  நான் அண்மையில் என் குடும்பத்துடன் பார்த்து ரசித்த திரைப்படம் ’ஐ’. இப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். இப்படத்தில் விக்ரம், ஏமிஜாக்சன், சுரேஷ் கோபி, சந்தானம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளனர். பாடல்காட்சிகள் அனைத்தும் வெளிநாட்டில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. பாடல்காட்சிகள் அனைத்தும் கண்ணுக்கு விருந்தாகவும், குளிர்ச்சியாகவும் அமைந்திருந்தது.
  ஒரு திரைப்படம் எப்படி இருக்க வேண்டும்? அப்படத்தை பார்க்கும் மூன்று மணி நேரமும் நாம் கவலையில்லாமல் மெய்மறந்து ரசிக்கும்படி இருக்க வேண்டும். அப்படி இந்தப்படம் அமைந்துள்ளது. இப்படம் ஒரு மாறுபட்ட கதைகளத்தில் அமைந்துள்ளது. இப்படம் பார்க்கும் பொழுது பெரும்பாலான காட்சிகள் சீனாவை நம் கண்முன் கொண்டு வருகிறது. பெரும்பாலும் திரைப்படங்கள் வெளிநாட்டில் எடுக்கும் பொழுது நாம் புதுபுதுஇடங்களை கண்டுமகிழலாம். நாங்கள் இதுவரை, சீனா செல்லவேண்டும் என மிக ஆவலாக உள்ளோம். இப்படத்தில் நகைச்சுவை காட்சிகள் தனியாக வராமல் கதை அமைப்போடு சேர்ந்து வந்துள்ளது.
  இப்படத்தில் எங்களுக்கு பிடிக்காத விஷயம் என்றால் அது ஏமிஜாக்சனின் ஆடை ஆலங்காரம் தான், அது மிக சிறிதாக பார்ப்பவர்களின் கண்களை உறுத்தும்படியாக இருந்தது. அதுகூட கதையோட ஒத்து இருந்ததாக தான் நான் கருதுகிறேன். ஏனென்றால் கதையின் படி கதாநாயகி விளம்பரம் படத்தில் நடிக்கிறார். விளம்பரங்களுக்கு தகுந்தவாறு உடையணிந்து இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.
  மொத்தத்தில் குடும்பத்துடன் பார்க்ககூடிய பிரமாண்டமான மிக வித்தியாசமான கதையுடன் கூடிய பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த திரைப்படம் ஆகும்.
  ‘கேட்டார்ப் பிணிக்குத் தகையவாய்க் கேளாரும்வேட்ப மொழிவதாஞ் சொல்’ என்னும் பொய்யாமொழி புலவரின் கூற்றுப் போல் பார்த்தவரையும் கவர்ந்து, பார்க்காதவரையும் பார்க்கத்தூண்டுவதெ இத்திரைப்படமாகும்.
  அரவிந்தன்
  உனிட்டி உயர்நிலை பள்ளி

 3. பார்த்து ரசித்த திரைப்படம் `அந்நியன்’
  நான் அண்மையில் `வசந்தம்` தொலைக்காட்சியில் குடும்பத்துடன் பார்த்து ரசித்த திரைப்படம் `அந்நியன்`. இத்திரைப்படம் இயக்குனர் `ஷங்கர்` சமூக விழிப்புணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இயக்கி இருக்கிறார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியானது. இத்திரைப்படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், விவேக் மற்றும் சதா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
  அந்நியன் திரைக்கதையானது ஓர் அப்பாவி வக்கீலான `அம்பி` பிளவாலுமை குறைபாட்டுப் பிரச்சினையால் வருந்துகின்றார். இவரது தொடர்ச்சியான நேர்மை, நியாயம் போன்ற கொள்கைகள் `அந்நியன்` என்ற குணாதிசயத்தை ஏற்படுத்துகிறது. அந்த `அந்நியன்` பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிய ஒரு இணையத்தலத்தை உருவாக்கி பின் சட்டங்களை மீறும் பொதுமக்களை அவர் தண்டிக்கின்றார்.
  ஒவ்வொரு மனிதனும் பல்வேறு துறைகளுடன் பல்வேறு மனிதர்களுடனும் தொடர்பு கொண்டு செயலாற்றுகிறான். இச்செயல்களை ஒழுங்குபடுத்திச் செம்மையாக நிறைவேற்ற சட்டதிட்டங்கள் அவசியமாகிறது. இந்த சட்டமானது சரியாக செயல்படவில்லை என்றால் மனிதனின் அன்றாட வாழ்க்கையானது சரிவர இயங்காது என்பதுடன் எல்லோர் வாழ்விலும் குழப்ப நிலை மட்டுமே நிலவும். இதுவே இந்த திரைப்படம் சொல்ல விளைகிறது.
  முடிவுரையில், எனக்கும் என் குடும்பத்தினற்கும் இத்திரைப்படம் நல்ல கருத்து சொல்லும் நன்றாக எடுக்கப்பட்ட ஒரு திரைப்படமாகும்.
  ரோஹித்
  புக்கிட் பத்தொக் உயர்நிலைப் பள்ளி

 4. நான் பார்த்து ரசித்த திரைப்படம்
  Stanley Ka Dabba (ஸ்டான்லி கா டப்பா)

  நான் அடிகடி பார்த்து ரசிக்கும் படம் “ஸ்டான்லி கா டப்பா” (Stanley Ka Dabba) என்னும் ஹிந்தி மொழி படமாகும். இந்தப் படம் 2014ஆம் ஆண்டு வெளிவந்தது. களங்கம் இல்லாத குழந்தை பருவம் ஆர்வத்தோடு காத்துகொண்டிருக்கும் பள்ளி இடைவேளையை பற்றியது.
  இந்த படத்தின் நாயகன் ஸ்டான்லி இளம் வயதிலேயே தாய் தந்தையாரை பறிகொடுத்து, மாமாவோடு அவருடைய உணவகத்தில் தங்கி இரவில் வேலை செய்து பகலில் பள்ளி செல்லும் 9 வயது சிறுவனைப் பற்றியது. பள்ளி இடைவேளை இந்த அளவிற்கு சுவையும் சுவாரஸ்யமும் நிறைந்ததா என்று படம் பார்க்கும் நேயர்களை அவர்களுடைய சிறு வயதிற்கு அழைத்துச் சென்று சிந்திக்க தூண்டுகிறது.
  பாடம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் இடைவேளைக்காகவே காத்திருந்து மாணவர்களின் சாப்பாட்டில் ஒரு பகுதியை தினமும் சுவைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆதரவற்ற ஸ்டான்லி தினமும் இடைவேளை உணவு எடுத்துக்கொண்டு வராமல் பள்ளிக்கு வருவதும்,அவனுடைய நண்பர்கள் அவனோடு உணவை பகிந்துகொள்ளும் காட்சி பகிர்தல் என்னும் பண்பை கற்றுக்கொடுகிறது. உணவுக்காக மாணவர்களை துரத்தும் ஆசிரியர், ஸ்டான்லியோடு உணவை பகிர்ந்து கொள்வதற்காக ஆசிரியரோடு கண்ணாம் மூச்சி ஆட்டம் ஆடும் மாணவர்கள் என்று படம் பார்க்கும் நேயர்களை சோர்வு தட்டாமல் ஒரு மாறுபட்ட பயணத்திற்கு அழைத்து செல்கிறது “ஸ்டான்லி கா டப்பா” திரைப்படம்.
  படத்தின் மற்ற கதாபாத்திரம் ரோசி டீச்சர். இவர் மாணவர்களின் திறமையை பாராட்டும் விதமாக அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் இனிப்பு வழங்குவது ஆசிரியர் மாணவர் இடையே நிலவும் அழகான உறவை பற்றி கூறுகிறது.
  ஒரு மாணவனின் தனித் திறமையை ஊக்கப்படுத்தும் ஆசிரியர், தன் தவறை உணர்ந்து பிராயச்சித்தம் தேடும் ஆசிரியர், கணக்கு பாடத்தை சோர்வு தட்டாமல் நடத்தும் ஆசிரியர் என்று குறைவான கதா பாத்திரங்களோடு நிறைவாக முடிவடைகிறது ஸ்டான்லி கா டப்பா திரைப்படம்.
  மாணவர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒரு பொக்கிஷம் ஸ்டான்லி கா டப்பா.
  அம்பரீஷ் கார்த்திகேயன்
  ஆங்கிலோ சீன உயர்நிலை பள்ளி (பார்கர் ரோடு) & உமறு புலவர் தமிழ் மொழி நிலையம்
  3S1, 3HT1

 5. என் பெயர் குருராம். நான் குடும்பத்தோடு கண்டு கழித்த படத்தின் பெயர் மிருதன் ஆகும். அந்த படம் ஒரு நாய் நச்சு புகைகளை முகர்ந்து ஒரு பாதுகாவளனை கடிக்கும் .பாதுகாப்பு காவலர் சிறிது நேரத்தில் ஒரு சோம்பை ஆகின்ரான்.மற்றவர்களைக் கடிப்பதாள் மனித நோய் ஒரு சங்கிலி தொடங்குகிறது.கார்த்திக் ஊட்டியில் ஒரு போக்குவரத்து அதிகாரியாக வேலை செய்கின்றார். தனது 7 வயது இளைய சகோதரி பார்த்துக்கொள்ள வேண்டும் .
  அவர் ஒரு டாக்டர் ரேணுகா காதல் செய்கின்றார். ரேணுகாவிற்கு ஏற்கனவே திருமணம் செய்ய நிச்சயம் உள்ளது என்றும் சிக்கலாக்கும் என முன்மொழிகிறது. சோம்பை தொற்று நகரம் முழுவதும் பரவுகையில், கார்த்திக் மற்றும் ரேணுகா ஒரு சில மற்றவர்கள் பாதிப்புக்கான தடுப்பூசி கண்டுபிடிக்க பக்கத்து மெட்ரோ நகரத்திற்குச் செல்ல. ஆனால் தங்கள் பயணத்தை பக்கத்து மெட்ரோ உட்பட நகரம் முழுவதும் பரவியது.கார்த்திக் மற்றும் அவரது அணி எப்படியோ மெட்ரோ அடைய நிர்வகிக்க.
  ஆனால் ஒரு கார்த்திக் மற்றும் அவரது அணி எப்படியோ மெட்ரோ அடைய நிர்வகிக்க. ஆனால் ஒரு மால் எதிர் மருத்துவமனையில் தங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மால்லில் நின்ற போது, கார்த்திக் சகோதரி ஒரு ஜாம்பி கடித்த மற்றும் காயமடைந்த உள்ளது.உயிரோடு இருக்க அவள் வைரஸ் நோய் எதிர்ப்பு மற்றும் நோய் குணமாவதற்கு உதவியாக இருக்க முடியும் என்று நம்புகின்றனர்.
  கார்த்திக் மருத்துவமனையில் பாதுகாப்பாக அனைவருக்கும் செல்வதற்கு ஒரு வழி கண்டுபிடித்து ஆனால் ஒரு சோம்பை கடித்திருக்கின்றன. அவர் மெதுவாக ஒரு சோம்பை மாறும் என, ரேணுகா அவர் தனது காதல் இருந்தது மற்றும் அவரது உணர்வுகளை கைம்மாறு செய்ய தொடங்குகிறது என்று உணர்கிறான். கார்த்திக் கடிக்க அவள் மீது விழிப்பூட்டுதல்கள் பேசியதால், அவர் இவரை தளிர்கள் மற்றும் திரை வெற்று செல்கிறது. இரண்டு நாட்கள் கழித்து, ஒரு பஸ், சென்னை மற்றும் மற்றொரு கார்த்திக், முற்றிலும் ஒரு சோம்பை மெட்ரோ இருந்து பயணம் பஸ் மேல் ஏறினார். இந்த நோய்த்தொற்று பரவியுள்ள குறிக்கிறது மற்றும் படம்.
  இந்த படத்தைதான் நானும் எனது குடும்பத்தினரும் கண்டு மகிழ்ந்தோம்.
  குருராம்

 6. நான் பார்த்து ரசித்த படம், “தாரே ஸமின் பர்” என்ற ஹிந்தி திரைப்படம் ஆகும். இப்படம் ஒரு எட்டு வயது சிறுவனை பற்றியது. இந்த படம் ஈராயரத்தி ஏழாம் ஆண்டு வெளியானது. அப்பொழுது எனக்கு ஆறு வயது. அந்த வயதிலும் என்னை கண்ணீருக்கு ஆளாக்கியது.
  இதில் இஷான் என்ற சிறுவனுக்கு பள்ளிக்கூடம் என்றாலே பிடிக்காது.தேர்வுகளில் தோல்வியை சந்தித்த வன்னம் இருந்தான். ஆனால் இவன் ஓவிய கலையில் திரனாளி. அவனுடைய தந்தைக்கு படிப்பு தான் முக்கியம் என்று இருக்கிறார். எனவே அவனை உறைவிடப் பள்ளியில் சேர்த்து விடுகிறார். அங்கே சோகமே வாழ்க்கை என்று வாழ்கிறான் இஷான். அங்கே அவன் அடிப்படையான பொறுப்புகளைக் கூட செய்ய தெரியாமல் அவதிப்படுகிறான். இவனை கவனி்த்து வரும் ஆசிரியர் ஒருவர் இவனுடைய திறனையும் படைப்பாற்றலையும் பற்றி அறிந்த பின்னர், அவனை பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள ஆசை படுகிறார். நாட்கள் செல்ல செல்ல இஷானுக்கு டிஸ்லெக்ஸியா என்ற இயலாமை இருக்கிறது என்பதை கண்டு பிடிக்கிறார். அப்பொழுது அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறார்.
  இப்படத்தில் ஆசிரியர் மாணவர் உறவு , மிகவும் அற்புதமாக சித்தரிக்க பட்டுள்ளது. “மாதா, பிதா, குரு, தெய்வம்” என்பதில் தெய்வத்திற்கு பின் குரு. பெற்ற தகப்பன் தன் மகனை புரிந்துக்கொள்ளாமல் அவனை “மனநிலை பாதிக்கபட்டவன்” என்று மோசமாக கூறிய நிலையிலும், இஷானுடைய ஆசிரியர் அவனுக்கு உதவி செய்ய துணிந்தார்.
  “இஷான் ஒரு சோம்பேறி ! அவனுக்கு உதவி செய்து பயன் இல்லை எனறு அந்த ஆசிரியர் எண்ணி இருக்கலாம். ஆனால் தன்னுடைய மாணவர்கள் மேல் வைத்திருக்கும் அக்கறையினாலும் பாசத்தினாலும், இஷானை தன் மகனை போல் பார்த்து கொண்டு வந்தார்.
  இப்படத்தைப் பார்ததப் பின் நான் எவ்வளவு அதிர்ஷ்டமானவள் என்பதையும், என்னுடைய ஆசிரியர்களை பாராட்ட வேண்டும் என்பதையும் தெரிந்துக் கொண்டேன். ஆசிரியர் நமக்கு ஒரு தோழன் போல,ஒரு நல்ல ஆசிரியர் எந்நேரத்திலும் தன் மாணவனுக்கு கை கொடுப்பார்கள் என்பதை இப்படம் அழகாக முன் எடுத்து வைக்கிறது.
  ஹார்ஷிதா 
  சைண்ட் ஹில்டச் செக் 3

 7. நான் பார்த்து ரசித்த படம், “ தெய்வத்திருமகள்”.
  இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கினார். இப்படத்தில் வரும் பாட்டுகளை ஜி.வி. பிரகாஷ் குமார் இயக்கினார்.
  இப்படம் ஒரு தந்தையின் ஊக்கம், தியாகம், உதவி, அன்பு மற்றும் பாசத்தை குறிக்கிறது. இந்த படத்தில் நடிகர் விக்ரம் மனநிலை பாதிக்கப்பட்ட தந்தையாக சிறப்பாக நடித்துள்ளார். இந்த படத்தில், விக்ரமும் சாராவும் ஒரு தந்தை மகள் இணைப்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தி நடித்த சில காட்சிகள் மிகவும் நன்றாக இருந்தது.
  நடிகை அமலா பால் சாராவின் சித்தியாக மிகவும் நன்றாக நடித்துள்ளார். இப்படத்தில், நடிகர் சந்தானம் மிகவும் நகைச்சுவையாக நடித்துள்ளார். இப்படம் என்னை மிகவும் அழுகவைத்தது. நான் மலேசியாவில் என் குடும்பத்தினருடன் இந்த படத்தை பார்த்தேன். இப்படத்திலிருந்து, தந்தையின் பாசத்திற்கு அளவேயில்லை என்பதை கற்றுக்கொண்டேன்.
  நிகேத்னா ஸ்ரீ
  உயர்நிலை இரண்டு விரைவுனிலை
  யுவான் சிங் உயர்நிலைப் பள்ளி

 8. எனக்குப் பிடித்தமான படம் தெய்வத்திருமகள்.
  அப்படத்தின் கருவான தந்தை-மகள் உறவு என் மனத்தை மிகவும் கவர்ந்தது. அவருக்கு மதி இறுக்கம் உள்ளது. அவருடைய மனைவி இறந்த பின்னர் தன் மகளை எப்படி வளர்ப்பது என்ற சவாலை எதிர்க்கொண்டார். அவருடைய நண்பர்கள் நகையும் சதையும் போல இருந்து உதவினர். அவர்கள் அவருக்கு நிறைய உதவிச் செய்தார்கள். உதாரணமாக, அவர்கள் அந்தக் குழந்தைக்கு சட்டைகள் மற்றும் விளையாட்டுப் பொருள்கள் வாங்கினர். மனைவியின் தங்கை அந்த குழந்தைக்காகப் போராடியபோது அவர்கள் அந்த தந்தைக்குத் துணையாக நீதிமன்றத்திற்குப் போனார்கள். கடைசியில், அந்த குழந்தை அவளுடைய தந்தையிடம் இருக்கும்படி தீர்ப்பு வரும். ஆனால், தந்தை தன் மகளை அவரின் மனைவியின் தங்கையிடம் கொடுத்து, “அவள் ஒரு மருத்துவராக வரவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அதனால், நீங்கள் தான் அவளைச் சீரும் சிறப்பமாக வளரத்து அவள் ஒரு மருத்துவராக வர உதவவேண்டும்”, என்று கூறுவார். அந்த காட்சியைப் பாரத்து, நான் கண் கலங்கினேன்.
  இந்த படத்தின் மூலம், பெற்றோர்கள் அவர்களுடைய குழந்தைக்காக எதுவும் செய்ய தயாராக இருப்பர் என்று நான் புரிந்துக்கொண்டேன். இந்தப் படத்திற்குப் பிறகு, நான் என் பெற்றோரிடம் அவர்களின் அன்பை நினைவுகூர்ந்து நன்றி கூறி, அவர்களை அணைத்தேன்.
  வார்ஷா
  சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி

 9. பார்த்து ரசித்த திரைப்படம் “உன்னால் முடியும் தம்பி“
  நான் சற்று வித்தியாசமானவள் என்று நினைக்கிறேன். எனக்குப் புதுப்படங்கள் பார்ப்பதை விட பழைய படங்கள் பார்ப்பது மிகவும்.
  அப்படங்கள் என்னை ஒரு பரபரப்பான நகர வாழ்க்கையிலிருந்து , ஒரு அமைதியான உலகத்துக்கு இட்டுச் செல்லும். அதனால் பழைய படங்கள் பார்ப்பதை நான் ஒரு பொழுதுபோக்காகக் கொண்டிருந்தேன்.
  அப்படி ஒருநாள் நான் பொழுதுபோக்காக பார்த்த திரைப்படம், வாழ்க்கையைப் பற்றிய எனது கண்ணோட்டத்தை முற்றிலுமாக மாற்றியது.
  “பிறப்பு என்பது ஒரு சம்பவமாக இருந்தாலும், இறப்பு என்பது ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்” என்ற வரிகளை நினைவில் நிறுத்தும் படம், “உன்னால் முடியும் தம்பி”.
  அப்படத்தில் ஒரு சமையல்காரத் தாத்தா , அவரது ஓய்வு நேரங்களில் செடிகளை நட்டு , அவைகளுக்குத் தண்ணீர் ஊற்றி தன் பிள்ளைகள் போல் வளர்ப்பதை தனது கொள்கையாகக் கொண்டிருப்பார்.
  “நாடு என்ன செய்தது என்பதை விட நாட்டுக்கு நாம் என்ன செய்தோம்” என்ற வரிகளை அவரது செயல் நமக்கு உணர்த்தும்.
  சிலர் எவ்வளவு வசதிகள் இருந்தாலும் , தனது வாழ்வில் கிடைக்காதவற்றை எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.
  அந்த சமையல்காரத் தாத்தாவுக்கு குழந்தைகள் இல்லை , அவருக்கு என்று ஒரு குடும்பம் இல்லை. கவலைப்பட எவ்வளவோ விசயங்கள் இருந்தாலும் , அவர் தன்னலம் கருதாமல் , இந்த பூமியை விட்டுப் போகும்போது ஏதாவது உபயோகமாக விட்டுச்செல்ல வேண்டும் என்று தனது செயலால் உணர்த்துவார்.
  வார்த்தைகளை விட செயல்களுக்கு சக்தி அதிகம். அந்தக் காட்சி வாழ்க்கையைப்பற்றிய தெளிவான பாதையை எனக்குக் காட்டியது.
  “காலம் பொன் போன்றது! கடமை கண் போன்றது!” என்று திரு. லீ குவான் யூ வாழ்ந்ததால் தான், இந்த குறுகிய காலத்தில் சிங்கப்பூர் தென்கிழக்கு ஆசியாவின் இதயமாகத் திகழ்கிறது.
  அந்த மாவீரரிடமிருந்து, நமது மாணவ சமுதாயம் சரியான செயல்திட்டம் மற்றும் அந்த திட்டத்தை செயல்படுத்தும்போது வேண்டிய அயராத உழைப்பு, தன்னம்பிக்கை ஆகிய வழிமுறைகளைக் கற்றுக் கொள்ளவேண்டும்.
  இன்றைய மாணவர்கள்! நாளைய தலைவர்கள்! நாம் சரியான பாதையில் வெற்றி நடை போட்டு, இதை விட சிறந்த சிங்கப்பூரை நமது எதிர்கால தலைமுறைக்கு விட்டுச் செல்வோமாக!
  இது தான் வளமான, பாதுகாப்பான, தூய்மையான, அழகான சிங்கப்பூரை செதுக்கிய தன்னலமற்ற சிற்பிக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி!!!
  தேஜல்
  சுவா சு காங் உயர்நிலைப்பள்ளி

 10. உலகநாயகன் என்று சொல்லும்போது நம் மனதில் அவருடைய வித்தியாசமான நடிப்பு, விதவிதமான வேடங்கள் மற்றும் பலவற்று நினைவுக்கு வரும். நடிப்பையும் தாண்டி இயக்கம், நடனம், பாடல், தயாரிப்பு என்று எல்லாவற்றிலும் புகுந்து விளையாடி மக்களுக்கு வெவ்வேறு கோணங்களிலிருந்து கமலஹாசன் என்றால் யார் என்று காட்டியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு சகலகலாவல்லவன் தயாரித்து, எழுதி, நடித்தப் படம் உத்தம வில்லன் ஆகும். இரை ரமேஷ் அரவிந்த் என்பவர் இயக்கியுள்ளார்.
  இப்படம் எல்லா பிரபலமான நடிகர்களின் ‘மாஸ்’ படங்களைப் போல் இல்லாமல் ஒரு எளிமையான கதைக் கருவைக் கொண்டுள்ளது. இறுப்பினும் அக்கரு மிகவும் அழகான முறையில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் கமல் ஒரு பிரபல நடிகராக இருப்பார். அவருக்குப் புற்றுநோய் இருப்பதாகத் தெரிய வந்ததும் அவர் தன் கடைசி ஆசையாக ஒரு படம் நடிக்கத் திட்டமிட்டிருப்பார். தன் ஆசானான மார்கதர்ஷியிடம் அப்படத்தை இயக்கும்படி கேட்டதற்கு அவரும் ஒற்றுக்கொண்டிருப்பார். அப்படத்தைப் பார்த்துவிட்டு எல்லாரும் தங்கள் முகங்களில் புன்னகையுடன் வீடு திரும்பவேண்டும் என்று மார்கதர்ஷியிடம் வேண்டிக் கேட்டுக்கொள்வார். மேலும், அப்படத்தில் கமலின் கதாப்பாத்திரத்தின் பெயர் மிருத்திஞ்செயன், அதாவது சாகா வரம் பெற்றவன்.
  இப்படத்தில் அனைத்து நடிகர்களும் மிகவும் சிறப்பாக நடித்து தங்கள் கதாப்பாத்திரங்களை மக்களிடம் திறம்பட கொண்டு சேர்த்தனர். மேலும், இப்படத்தின் வசனங்கள் மக்களிடம் சிரிப்பை மூட்டும் வகையிலும் மக்கைச் சிந்திக்கச் செய்யும் வகையிலும் இருந்தது. இவைமட்டுமின்றி இறப்பு என்பது யாருக்கும் எப்படி வேண்டுமானாலும் எந்நேரமும் வரும் என்றும் வாழும்போதே வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்துவிட வேண்டும் என்றும் உணர்த்தியது. இப்படம் தினசரி வாழ்வுக்குத் தேவையான அறநெறி பண்புகளையும் கற்றுகொடுத்தது. உதாரணத்திற்கு கமல் தன் உடல்நலம் மோசமடைந்த நிலையிலும் விடாமுயற்சியுடன் படத்தை நடித்து முடித்திருப்பார். நாமும் எதையும் முழு மனதுடன் மனம் வைத்து கடினமாக செயல்பட்டால் அது நிறைவேறும்.
  விஷ்ணுபிரியா
  ராஃபிள்ஸ் தொடக்கக் கல்லூரி

 11. ‘ஒரு கை தட்டினால் ஓசை எழுமா?’
  இப்பழமொழியை நாம் நம் வாழ்கையில் அடிக்கடி கேட்பதுண்டு. ஒருவனால் எதையும் செய்ய முடியாது என்பதே இதன் விரிவாக்கம்.ஆனால் ஒரு தனி மனிதனாலும் எதையும் செய்ய முடியும் என்ற கருத்து அல்லது எண்ணத்தை தூண்டுகிறது ஒரு படம்.அது என் மனதில் நிறைய கேள்விகளை தட்டி எழுப்பியது.அப்படத்தின் பெயர் தான் ‘தனி ஒருவன்’.இந்தப் படத்தில் ஜயம் ரவியும் அரவிந்து சுவாமியும் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படத்தின் கதை என்னவென்றால், அரவிந்து சுவாமி சிறு வயதில் தன் தந்தைக்கு பரிமாற்றமாக, அவர் அரசியல் தேர்தலில் எம்.எல்.ஏ. இருக்கை பெற, சிறைக்கு செல்ல தயாராகிறார்.பிற்காலத்தில், ஜயம் ரவி ஒரு காவலாலி ஆகுகிறார்.அவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து அடிக்கடி மோசடிகளை ,தனியாக தீர்க்கின்றனர்.ஆனால் ஜயம் ரவி ,அவருடைய நண்பர்களுக்கு கூட தெரியமல் , ஒரு குற்ற வழக்கை தீர்க்கிறார். அக்குற்றத்தின் தலைமை குற்றவாளியாக அரவிந்து சுவாமி சித்தரிக்கப்பட்டுள்ளார்.
  ‘தனி ஒருவன் நினைத்துவிட்டால், இந்த உலகத்தில் தடைகள் இல்லை!’ – என்ற பாடல் வரிகள் என் மனதில் மிகவும் ஆழமாக பதிந்து வட்டது.யாராலும் ,மனது வைத்து அக்காரியத்தில் இறங்கினால்,எதையும் சாதிக்க முடியும் என்பதை அழகாக கூறுகிறது.
  ‘நல்லவனுக்கு நல்லது செய்றதுல வெறும் ஆசை தான் இருக்கும்.கெட்டவனுக்கு கெட்டது செய்றதுல பேராசை இருக்கும்.’ ,’என்னைக்கும் ஆசைக்கும் பேராசைக்கும் நடக்குற போர்-ல ஜைக்கிறது பேராசைத்தான்.’ மற்றும் ‘தீமைத்தான் வெல்லும், எவன் தடுத்தாலும்’ -போன்ற பாடல் வரிகள் வெறும் கேட்டு ரசிக்கும் வரிகளாக மட்டுமில்லாமல், பல ஆழமான கருத்துகளை முன்வைக்கிறது.
  இப்படத்தை பார்த்த பின்பு தீமைகளை தவிர்த்து, வென்று, வெற்றியை அடைய வேண்டும் என்ற உணர்ச்சி என்னை தூண்டியது.எனவே என்னை கவர்ந்த படமாக ‘தனி ஒருவன்’ திகழ்கறது.
  ஷாஹின்
  தஞ்சோங் காதொங் பெண்கள் பள்ளி

 12. எனக்குப் பிடித்தமான படம் ஹரிதாஸ். இந்தப் படத்தின் தந்தை மகன் உறவு என்னைக் கவர்ந்தது. அவருடைய மகன் பிறந்தப்போது, குறைவான மூளை வளர்ச்சியுடன் பிறந்தான். அவர் தன் மகனை வளர்க்க நிறைய சவால்களை எதிர்நோக்கியது பற்றியதுதான் இந்தப் படம். இந்த படத்தில் அந்த தந்தை ஒரு காவலராக வேலை செய்தார். அவர் வேலைக்குச் செல்லும் போது, மற்றவர்கள் ஹரிதாஸைப் பார்த்துக்கொள்வார்கள். உதாரணமாக, ஹரிதாஸின் ஆசிரியர் அவனுக்கு பாடம் கற்பிப்பார். அது மட்டும் இல்லாமல், அவனுடைய தாய் இறந்தப்பின், அவனுக்கு ஒரு தாயாக இருந்து அவனைப் பார்த்துக்கொண்டார். அவனைப் பார்த்துக்கொள்ள தன் நேரத்தை ஒதுக்கினார். அந்த ஆசிரியர் செய்தத் தியாகம் என் மனத்தை உருகவைத்தது. தன் மகன் குறைவான மூளை வளர்ச்சியுடன் பிறந்ததால் நிறைய பேர் அவனைக் கீழ்த்தனமாக பார்ப்பார்கள். இதைக் கவனித்த அவன் தந்தை அவனும் மற்ற பிள்ளைகள் போல வாழ்க்கையில் சாதனை படைப்பான் என்று மற்றவர்களிடம் காட்டவேண்டும் என்ற மன உறுதி்யுடன் தன் மகனை ஒரு ஓட்டப்பந்தயப் போட்டியில் சேர்ப்பார். தன் மகன் இந்த பந்தயத்தில் வெற்றிப் பெற அவனை தயார் செய்துக்கொள்ள நிறைய பயிற்சி அளித்தார். போட்டி நாள் வந்தபோது, அவனுடைய அப்பா ஒரு முக்கியமான வேலைக்குச் செல்வார். அதனால் அவன் ஆசிரியர் அவனை அழைத்துச் செல்வார். அவன் அந்த போட்டியில் ஓடும் போது, தன் அப்பாவின் ஊக்குவிப்பு அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில், அவன் அப்பா வேலையில் உயிர் இழந்துவிடுவார். ஆனால், விடாமுயிற்சியுடன் பந்தயப் போட்டியில் வெற்றிப் பெறுவான். அவன் அப்பா இறந்த செய்தியைக் கேட்டப் பிறகு, அவன் கண்ணீரும் கம்பலையுமாக காணப்படுவான். அந்த காட்சி என்னை அழவைத்தது. இந்தப் படத்தின் மூலம், ஹரிதாஸ் போன்ற சிறுவர்களைப் புறக்கணிக்காமல் அவர்களை ஊக்குவிப்பதுடன் உதவியும் செய்து அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற நாம் நம் பங்கை ஆற்றலாம் என்று நான் நினைக்கிறேன்.

  வரிஜா (Varija)
  சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி (Chua Chu Kang Secondary School)

 13. “சுவாரசியம் நிரம்பிய கதைக்களம், கண்கவர்மிக்க படக்காட்சிகள், பார்ப்போரை நடிப்பால் பிரம்மிப்பூட்டும் நடிகர்கள்” – இவை மட்டுமே ஒரு படத்தின் அடையாளங்கள் என வரையரைத்திடலாமா? இவற்றையும் கடந்து, சமுதாயத்திற்கு விழிப்புணர்வூட்டுவதோடு, இருபத்தோறாம் நூற்றாண்டின் ரசிகர்களுடைய எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் ஒரு படமாகவும் மிளிர வேண்டும்; அது தான் செம்மையான திரைப்படம்.
  நான் கண்டு திளைத்த படங்கள் அளவிடற்கரியவை; எனினும், என்னைத் தன் பக்கம் ஈர்த்த தமிழ் திரைப்படம், “கோச்சடையான்”. கே.எஸ். ரவிகுமாரின் கற்பனை மிகுந்த கதை, ஐஸ்வர்யா தனுஷின் நிபுணத்துவம் வாய்ந்த இயக்கம், ஏ.ஆர்.ரகுமானின் மெய்சிலிர்க்க வைக்கும் இசை, தேனருவியாகப் பொழியும் கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகள், நடை, உடை, பாவனை முதலியவற்றின் வாயிலாக தன்வசமிழுக்கும் ரஜினிகாந்த் மற்றும் தீபிகா படுகோன், என இப்படத்தின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்! எல்லா வயதினோராலும் எளிமையாகப் புரிந்துகொள்ளும் தமிழ் இப்படத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் சிறப்பம்சமாகும். படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள், கேட்போரின் சிந்தனைகளைத் தூண்டக்கூடியதாக அமைந்துள்ளன. ‘நீ ஓட்டம் பிடித்தால், துன்பம் உன்னைத் துரத்தும்; எதிர்த்து நில், துரத்திய துன்பம் ஓட்டம் பிடிக்கும்,’ போன்ற பாடல் வரிகள் ரசிகர்களின் மனதில் ஓர் விதமான உந்து சக்தியை உண்டாக்குகின்றன. நவீனத்துவம் மிகுந்த இன்றைய சமூகத்தில் வாழும் மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் பண்டைக் கால வாழ்க்கையின் சாராம்சத்தை மிக அழகாக கொண்டு சேர்க்கும் படம், ‘கோச்சடையான்’. நகைச்சுவையின் பற்றாக்குறை, நடிகர்களை முற்றிலும் தொழில்நுட்பத்தைக் கையாண்டு சித்தரித்த முறை, முதலியவை குறிப்பிடத்தக்க சில குறைகளாகும். இக்குறைகளைச் சரி செய்திருந்தால், நிச்சயம் இப்படத்தின் தரம் மெருகூட்டப்பட்டிருக்கும்; மேலும் பலரின் கவனத்தைக் கையகப்படுத்தியிருக்கும்!
  ராஜேந்திரன் ராஜேஷ்
  விக்டோரியா தொடக்கக்கல்லூரி

 14. ஒரு திரைப்படத்தின் பெயரைக் கேட்டவுடனே நம் மனதில் குதூகலம் உண்டாகவேண்டும். அப்படிப்பட்ட படமும் நான் என் குடும்பத்தோடு சேர்ந்து பார்த்து ரசித்த படமும் தான் ‘பசங்க 2 ‘. இந்த படம் என்னவோ என் வீட்டில் நடப்பவைகளை அப்படியே படமாக்கியது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. இந்தப் படத்தில் பெற்றோராக நடித்துள்ள சூர்யா,அமலா பால் இருவரும் மற்ற பெற்றோர்களுக்கு உதாரணமாக நடித்துள்ளனர். பெற்றோர் பிள்ளைகள் உறவை மிகவும் அற்புதமாக சித்தரித்துள்ளார்கள். இதில் நடித்துள்ள கவின் எனும் சிறுவனும், நயானா எனும் சிறுமியும் சிறுவர்களின் மனதைக் கவரும்படி நடித்துள்ளார்கள். பெற்றோர்களின் ஆசைகளை பிள்ளைகள் மீது திணிக்கக்கூடாது என்று அழகாக சொல்லியுள்ளார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளின் விருப்பம், திறமை என்னவென்று கண்டறிந்து அதன்படி அவர்களை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்றும் காட்டியுள்ளார்கள். இதில் கவின் எனும் சிறுவன் எங்கு பாடல் கேட்டாலும் உடனே ஆட ஆரம்பித்துவிடுவான். இவனின் ஆடும் திறமையை அவனுடைய பெற்றோர்கள் கண்டுகொள்ளாமல், மற்றவர்களுக்காக அதைக் கட்டுப்படுத்திவிடுவார்கள். தன்மகனுக்கு நடனமாடும் திறமை இருப்பதை உணரமாட்டார்கள். மாறாக அவனுடைய சிறுசிறு குறும்புத்தனங்களைக்கூட ரசிக்காமல், அதை பெரும் குறையாகவே கருதுவார்கள்.
  இதே போல் தான், நயானா என்ற சிறுமி செய்யும் குறும்புத்தனத்தை அவளுடைய பெற்றோர் ரசிக்காமல் அதை பெரும் குறையாகவே கருதுவார்கள். அவளிடம் இருக்கும் கற்பனை கலந்து கதை சொல்லும் திறனை ஊக்குவிக்காமல், உற்சாகப்படுத்தாமல் தட்டிக் கழிப்பார்கள். கவினும்,நயானாவும் மற்ற பிள்ளைகளைப்போல் இல்லாமல் வித்தியாசமாக இருப்பதால் அவர்களை உறைவிடப்பள்ளியில் சேர்த்து விடுவார்கள். பின்பு அவர்கள் படும் துயரம், வேதனைகளை இயக்குநர் பாண்டிராஜ் அழகாக படமாக்கியுள்ளார்.பிள்ளைகளின் வளர்ச்சிக்கு பெற்றோரும், சுற்றுச்சூழலும் முக்கியக்காரணம் என்றும், பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பட்டு பேசக்கூடாது என்றும் அருமையாகச் சொல்லியிருக்கிறார்கள்.
  “பூக்களைக் கிள்ளிவந்து இங்கே போட்டது யார்? புன்னகை போதுமென்று இங்கே சொன்னது யார்?” என்ற பாடல் வரிகள், ஆருள் கரோலியின் இசை என் கண்ணில் கண்ணீர் வரச் செய்தது. மற்ற பாடல்களும், வண்ணமயமான காட்சிகளும் என்னை கனவுலகத்திற்கு அழைத்துச் சென்றன.மொத்தத்தில் இந்தப் படம் குழந்தைகளுக்கான படம் என்று சொல்வதைவிட பெற்றோர்களுக்கான படம் என்று சொன்னால் அது மிகையாகாது.
  முருகன் சிநேகா
  தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளி

Your email address will not be published.


*