விழா, திருவிழா!

ஒவ்வொரு வருடமும் நாம்  தீபாவளி, பொங்கல் என்று பல விழாக்களைக் கொண்டாடுகிறோம். அவற்றுள் உங்களுக்குப் பிடித்த விழா எது, அதை எவ்வாறு கொண்டாடுகிறீர்கள் என்பதைப் பற்றி உங்களுடைய கட்டுரையை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள்பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
தரமான கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள் – 31 மார்ச் 2015, திங்கள்கிழமை. வாழ்த்துகள்!

9 கருத்துரை

 1. பொங்கல் பண்டிகை
  உலகமெங்கும் மக்கள் அறுவடைத் திருவிழாவை வெவ்வேறு பெயர்களில் கொண்டாடுகிறார்கள். தமிழர்கள் அறுவடைத் திருவிழாவை ‘பொங்கல்’ என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். பொங்கலை போகி, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்களுக்குக் கொண்டாடுகிறார்கள்.
  தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக, மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று வீட்டைச் சுத்தம் செய்து, தேவையற்றப் பொருட்களை எரிப்பார்கள். வீட்டை மட்டுமல்ல, மனதில் இருக்கும் தவறான எண்ணங்களையும் நீக்க வேண்டும் என்பது இதில் உள்ள தாத்பர்யமாகும். கிராமங்களில் பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம்பூசி வீட்டை அழகுப்படுத்துகிறார்கள். ‘போக்கி’ என்றால் ‘நீக்கி’ என்று அர்த்தம். ‘போக்கி’ என்ற வார்த்தை மருவி ‘போகி’ என்றாகியது.
  தை மாதம் முதல் நாளன்று தைப்பொங்கல் அல்லது பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கலாகும். வீட்டின் வாசலில் சூரிய கோலமிட்டு, மாவிலைத் தோரணங்கள் கட்டி வீட்டை அலங்கரிப்பார்கள்.
  அடுத்து, உழவர்கள் ஆண்டு முழுவதும் தங்கள் விவசாயத் தொழிலுக்கு உழைத்த மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப்பொங்கலைக் கொண்டாடுகிறார்கள். அன்று மாடுகளைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, அவற்றிற்கு மஞ்சள் குங்குமமிட்டு, மாலை அணிவித்து அலங்கரிப்பார்கள். பிறகு, பொங்கலிட்டு, பூஜை செய்து மாடுகளுக்கு அவற்றை உண்ண கொடுப்பார்கள்.
  அடுத்து, காணும் பொங்கல் அன்று, உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக உழைத்தத் தொழிலாளிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்களுக்கு புத்தாடைகளையும், பணத்தையும் கொடுப்பார்கள். அதுமட்டுமல்லாமல், உறவினர்களையும் சந்தித்துத் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வர். வயதில் முதியவர்களின் ஆசிர்வாதத்தையும் பெறுவர்.
  நம்மில் பலர் இன்று நகரங்களில் வாழ்ந்தாலும், பொங்கல் பண்டிகையை இன்றும் தொடர்ந்து கொண்டாடுகிறோம். இதற்குக் காரணம், நாம் நம் கலாச்சாரத்தைத் தொடர வேண்டும் என்பதற்காகவே ஆகும். எனவே, நாம் பொங்கல் பண்டிகையை விமரிசையாகவும், குதூகலமாகவும் தொடர்ந்து கொண்டாடுவோம்.
  ஷஷான்கன், உயர்நிலை-3, வழக்கநிலை-2015, கிறைஸ்ட் ச்சர்ச் உயர்நிலை பள்ளி

 2. எனக்கு பிடித்த விழா தீபாவளி ஆகும்.தீபாவளி அன்று காலையில் குடும்பத்தினர் எல்லோரும் தலைக்கு எண்ணெய் வைத்து குளிப்பார்கள். சிறுவர்கள் தங்களுடைய பெற்றோர்களின் காலில விழுந்து ஆசி 
  பெறுவார்கள். பிறகு புது ஆடைகள் அணிந்து கோவிலுக்கு செல்வார்கள்.காலை உணவுக்கு இனிப்பு பாண்டங்கள் உண்டு மகிழ்வார்கள். பட்டாசுகளை வைத்து விளையாடுவார்கள். மற்ற உறவினர்களின் வீட்டுக்கு சென்று விருந்தோம்பல்நடக்கும். உறவினர்கள் தீபாவளி வாழ்த்து கூறி பரிசுகள் அளிப்பார்கள்.தீபாவளி அன்று எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். குடும்பத்தினருடன் ஒன்றிணைவதற்கான நேரமாகும்.
  பாலாஜி ஹர்ஷினி பாலா
  பாயா லேபார் பெண்கள் உயர்நிலை பள்ளி

 3. சிங்கப்பூரில் கொண்டாடப்படும் விழாக்களில் எனக்கு மிக பிடித்தமானது தைப்பூசத் திருவிழா ஆகும்.அன்று பக்தர்கள் பலவிதமான நேர்த்திக்கடன்களை முருகப்பெருமானுக்குச் செலுத்துவர். நெடுங்காலமாக சிங்கப்பூரில் தைப்பூசத் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலிருந்து பக்தர்கள் சுமார் நாக்கு கிலோ மீட்டர் நடந்து டோங் சாலை தண்டாயுதபாணி கோவிலில் தங்களின் கணிக்கைகளைச் செலுத்துவது வழமையாகும். ஆண்டுதோறும் என் அண்ணன் காவடி எடுப்பார்.
  சுமார் 8 மணி அளவில், நான் என் குடும்பத்தாருடன் பெருமாள் கோவிலுக்கு வந்துவிடுவோம். காவி வண்ண உடை உடுத்தி பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கோவில் வளாகத்திற்குள் குழுமி இருப்பர். ஒலிப்பெருக்கிநின் வாயிலாக முருகன் பக்திப் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும். அவ்விடமே பக்தி மணம் கமழும். ஆர்மப பூசைகளைச் செய்த பின், என் அண்ணனின் காவடி கிளம்பும். ” ஆரோஹரா” என்ற முழக்கம் விண்ணை எட்டும். காவடி சிந்து பாடலைப் பாடி என் அண்ணனின் காவடியைப் பின் தொடர்வேன். முருகன் கோவிலை நெருக்க நெருக்க இனம் புரியாத உணர்ச்சி தேகத்திலுள் உண்டாகும்.
  ” வேல் வேல் வெற்றி வேல்” எனக் கூறி முருகன் திருபாதங்களில் காவடியை அண்ணன் செலுத்துவர். அடுத்த நாள் காலையில், அலகு காவடிகளையும் ரதக் காவடிகளையும் பார்க்க மீண்டும் வரவேன். மேள தாள இன்னிசையுடன் ஒவ்வொரு காவடியும் ஆடியாடி வரும். பார்க்க பார்க்க பக்தியும் பரவசமும் பொங்கித் ததும்பும். நவீனமும் நாகரிகமும் மலிந்த சிங்கையில், இது போன்ற விழாக்கள் நமது பண்பாட்டை மட்டும் எடுத்து கூறாமல் பல இனங்களுக்கிடையே உள்ள சகிப்புத்தன்மையும் புரிந்துணர்வையும் பறைசாற்றுகின்றது.
  – நித்யஸ்ரீ
  ACJC தொடக்கக் கல்லூரி

 4. எனக்கு மிகவும் பிடித்த விழா தைப்பூசம். சிங்கப்பூரில் தைப்பூசம் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. நிறைய மக்கள் பால் குடமும் காவடியும் முருகனை வேண்டிக்கொண்டு எடுப்பார்கள். எல்லோரும் “வேல் முருகா வேல் வேல்” என்று உரக்க கூரிக்கொண்டு நடந்து செல்வார்கள். இந்த வருடம் என் அம்மா பால் குடம் எடுத்தார். அதனால் இரவு 11.30 மணி அளவில் பேருந்து எடுத்து “ஸ்ரீ ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவிலுக்குச்” சென்றோம். கூட்டம் அதிகமாக இருந்தது. என் அம்மா தண்ணீரில் நினைந்துக்கொண்டு குடத்தில் பாலை ஊத்திக்கொண்டு முருகனை வேண்டிக்கொண்டு “தேங் ரோட் தெண்டாயுதப் பாணி திரு கோவிலை” நோக்கிச் சென்றோம். கிட்ட தட்ட நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்தோம். கோவிலை அடைந்ததும் பாலை முருகன் சிலையின் மீது ஊற்றி வணங்கினோம். பிறகு சிறிது நேரம் ஒய்வு எடுக்கும் இடத்தில் உட்கார்ந்தோம். எங்களுக்கு மன நறைவும் அமைதியும் கிடைத்தது. பிறகு உந்துவண்டியில் ஏறி வீடு திரும்பினோம். அடுத்த வருடமும் கண்டிப்பாக தைபூசத்திற்கு நான் செல்வேன்.
  தாரணி செல்வகுமார்
  சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி

 5. ”ஆசைகளைத் துறந்த மனிதனே அமைதி பெறுவான்,” என்பதை உலகுக்கு எடுத்து கூறிய மகானான புத்தரின் நினைவாக ஆண்டுதோறும் நாம் விசாக தினத்தைக் கொண்டாடுகிறோம். புத்தர் பிறந்தது, ஞானம் பெற்றது, இவ்வுலகை விட்டு பிரிந்தது அனைத்துமே வைகாசி மாதத்தில் பௌர்ணமியன்று நடைபெற்றதால், நாங்கள் அந்நாளை புனிதமாக கருதி அதை விசாக தினமாகக் கொண்டாடுகிறோம்.
  விசாக தினத்தன்று நான் அதிகாளையிலேயே எழுந்து குளித்துவிட்டு வெள்ளை நிற உடை உடுத்திகொண்டு என் பெற்றோர்களுடன் ஆலயத்துக்குச் சென்று அங்கு கௌத்தமரை தியானித்து வழிபடுவேன். ஆலயத்திலேயே மத்திய வேளையில் அன்னதானம் அளிக்கப்படுவதால் நாங்கள் அதை உண்டுவிட்டு புத்தரின் போதனைகளையும் புத்த துறவிகளின் உரைகளையும் கேட்டு மகிழ்வோம்.
  மாலையில் நாங்கள் தீபம் ஏந்திக் கோவிலை மூன்று முறை வளம் வருவோம். மேலும் அக்கோவிலிலுள்ள போதி மரத்துக்கு நீர் வார்த்தும் நாங்கள் பூஜிப்போம். பிறகு, அவ்வாலையத்தில் இருக்கும் துறவிகளுக்கு அன்பளிப்பாக துணிமணிகளைக் கொடுப்போம். அவர்கள் பதிலுக்கு என்னையையும் என் குடும்பத்தினரையும் ஆசிர்வதிப்பார்கள்.
  அதைத் தொடர்ந்து நாங்கள் ஒரு செல்லப் பிராணி விற்கும் கடைக்குச் சென்று அங்குள்ள ஒரு பறவையை விலைக்கு வாங்கி அதை கூண்டிலிருந்து சுதந்திரமாகப் பறக்கவிடுவோம். புத்தர் உயிர் வதையை வெறுத்தார்; பிறர் துன்பங்கண்டு வருந்தினார். அதனால்தான் விசாக தினத்தை ஒரு கொண்டாட்ட நாளாக மட்டும் கருதாமல் நற்செயல்கள் செய்யும் ஒரு நாளாகக் கருதி நான் ஒரு பறவையை அந்நாளில் கூண்டிலிருந்து விடுவிப்பேன். இந்நாளில் மக்கள் அனைவரும் பிற உயிரினங்களை மதித்து நற்செயல்களில் ஈடுபட வேண்டும் என்பதே கௌதமரின் விருப்பமுமாகும்.
  குமரவேல் விக்னேஷ்
  ஆங்கிலோ-சீனத் தன்னாட்சிப் பள்ளி

 6. எனக்கு பிடித்த விழா பொங்கல் ஆகும். ஆண்டுதோறும் புக்கிட் பாஞ்சாங் சமுக நிலையத்தில் பொங்கல் விழா நடைபெறும். இந்த வருடம் சிங்கப்பூரின் ஐம்பதாவது பிறந்தநாள் என்பதால் பொங்கல் விழா பிரபலமாகக் கொண்டாடப்பட்டது. நானும் என்னுடைய குடும்பத்தினரும் இவ்விழாவிற்குச் சென்றோம். அங்கே மாடுகள் இருந்தன. அது மட்டும் இல்லாமல், அங்கே ஒரு பெரிய கோலம் இருந்தது. அது மிகவும் அழகாக இருந்தது. மக்கள் மண்பானையில் பொங்கல் செய்தார்கள். மேலும், எரிவாயு அடுப்பு இல்லாததால், கரி அடுப்பில் சமைத்தார்கள். புகை அதிகமாக இருந்தபோது நெருப்பை உண்டாக்க ஊதினார்கள். அதனால், அங்கே மிகவும் புகையாக இருந்தது. அந்தக் காலத்தில் நம்முடைய முன்னோர்கள் இப்படிதான் சமைத்தார்கள். அவர்களின் சிரமங்களை புரிந்துகொள்ள இந்நடவடிக்கை உதவியது. அதன்மூலம் நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் என்று புரிந்தது.
  பொங்கல் விழாவில் நிறைய போட்டிகள் இருந்தன. கபடி, உறியடித்தல் போன்ற போட்டிகள் நடைபெற்றது. என்னுடைய தம்பி அவனுடைய நண்பர்களுடன் கபடி விளையாடினான். அவன் சந்தோசமாக விளையாடினான். அங்கே கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. ஆடல் பாடல் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இருந்தன. உணவு ருசியாக இருந்தது. நானும் என்னுடைய குடும்பத்தினர்களுடனும் எங்களுடைய நேரத்தை மகிழ்ச்சியாகக் கழித்தோம்.
  வர்ஷா (Varsha)
  சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி (Chua Chu Kang Secondary School)

 7. சென்று வருடம், நானும் என் குடும்பத்தினர்களுடனும் கஷ்மீரில் இருக்கும் எங்கள் உற்றார் உறவினர்களைச் சந்திக்க இந்தியாவிற்குச் சென்றோம். அங்கே செல்வது எங்களுக்கு இதுதான் முதல் முறை. அங்கே சென்றதும், எங்கள் உறவினர்கள் எங்களை உபசரித்தார்கள். என் அத்தை இந்த மாதம் ஹோலி பண்டிகை நடைப் பெறுவதால், நாங்கள் எல்லாரும் இந்தப் பண்டிகையைக் கொண்டாடி விட்டுதான் சிங்கப்பூர்க்குச் செல்ல வேண்டும் என்று கூறினார். நாங்கள் அதற்கு ஒப்புக்கொண்டு பண்டிகைக்குத் தயார் செய்தோம். வீட்டின் அருகில் இருக்கும் கடைக்குச் சென்று, ஹோலி பண்டிகைக்குத் தேவையான பொருட்கள், முக்கியமாக வண்ணப் பொடியை வாங்கினோம்.
  அடுத்த நாள் வந்தது. காலையில் எழுந்ததும், வாளியில் வண்ணப் பொடியைத் தண்ணீருடன் கலந்து வைத்தோம். ஒவ்வோரு ஆண்டும் ஹோலி பண்டிகை நடைப்பெறும் இடத்திற்குச் சென்றோம். அங்கே நிறைய பேர் எங்களைப் போல், வாளி நிறைய பல வண்ணத்தில் தண்ணீர் கொண்டு வந்தார்கள். என் மாமா ஒர் ஆடவரின் பின்னால் நின்று, அவருக்குத் தெரியாமல் அவர் மீது வண்ணத் தண்ணீரை ஊற்றினார். அதற்கு பிறகு, எல்லாருமே மற்றவர்கள் மீது வண்ணத் தண்ணீரை ஊற்றினார்கள். எல்லாரும் சூரியனைக் கண்ட தாமரைப் போல் முகம் மலர்ந்தார்கள். சில மணி நேரத்திற்குப் பிறகு, ஹோலி பண்டிக்கை ஒரு நிறைவுக்கு வந்தது. எல்லாருடைய ஆடைகளும் முகமும் பல வண்ணத்தில் இருந்தது. என் குடும்பத்தினர்கள் வாய் விட்டுச் சிரித்தார்கள். எல்லாரும் இந்த பண்டிகையை விரும்பி கொண்டாடினார்கள். சிங்கப்பூரில் இந்த பண்டிகை கொண்டாடினாலும், இந்தியாவிற்குச் சென்று கொண்டாடினால் ஒரு தனிச் சிறப்பு கிடைக்கும். மீண்டும் இந்த விழாவை இந்தியாவிற்குச் சென்று என் குடும்பத்தினர்களுடனும் உறவினர்களுடனும் கொண்டாடுவேன்.
  வரிஜா (Varija)
  சுவா சூ காங் உயர்நிலை பள்ளி
  (Chua Chu Kang Secondary School)

 8. கிறிஸ்துவ விழாக்கள்
  வணக்கம். நான் இப்பொழுது கிறிஸ்துமஸ் பற்றி எழுதப்போகிறேன். கிறிஸ்துமஸ் ஏசு பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக உருவாக்கப்பட்டது. கோன்ஸ்டே்டீன் என்பவர் 25/12 என்னும் நாளில் கிரிஸ்துமஸ் கொண்டாடப்படனும் என்று சொன்னார். ஆனால், கிருஸ்துவர்களைப் பொருத்தவரை டிசம்பர் மாதம் முழுவதுமே கொண்டாட்டம் நடக்கும். கிறிஸ்துமஸ் நாளில் நாங்கள் புதிய ஆடை அணிவோம். தேவாலயத்திற்குச் செல்வோம். எங்கள் சபையில் ஏசுவுடைய அப்பா அம்மா ஏசுவைப் பெறுவதற்காகப்பட்ட கஷ்டம் முதல் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தது வரை ஏசு பிறப்புப் பற்றிய நாடகங்களும் நடனங்களும் இருக்கும். நண்பர்கள், உறவினர் வீடுகளுக்குச் சென்று பரிசு கொடுப்போம். கிரிஸ்துமஸ் விழாவிற்கு அடுத்து புதிய வருடப்பிறப்பையும் ஏசு விழாவாகவே கொண்டாடுவோம். காரணம், உலகம் முழுவதும் ஏசு பிறந்த பிறகு வரும் மாதத்தில் ஆண்டு தொடங்குவதாலேயேயாகும். அடுத்து நல்ல வெள்ளி (good Friday) என்னும் விழா கொண்டாடப்படும். அதுதான் ஏசு இறந்தநாள். இந்த நாளுக்கு முன் 40 நாள் விரதம் இருப்போம். அன்றைக்கும் ஏசு இறப்புப் பற்றிய நாடகமும் நடனங்களும் இருக்கும். ஈஸ்டர் பிறகு வரும். அது ஏசு உயிர்த்தெழுந்த நாள்.
  ஜோஷ்வா
  உயர்நிலை ஒன்று விரைவுநிலை
  யுவான் சிங் உயர்நிலைப் பள்ளி.

 9. சமீபத்தில் நான் சிறப்பாக கொண்டாடிய விழா ’பொங்கல் விழா’. சிங்கப்பூரில் ஒவ்வோர் ஆண்டும் சமூக மன்றங்களில் இவ்விழா சீரும் சிறப்புமாக கொண்டாடப்படும். இதில் அனைத்து இன மக்களும் கலந்துகொள்வார்கள். இதன் மூலம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல் கூடி வாழ்வதற்கு வாய்ப்பு ஏற்படும் என்பதால் பொங்கல் விழா சமூக மன்றங்களில் கொண்டாடப்படுகிறது.
  இந்த வருடம் சிராங்கூன் சமூக மன்றத்தின் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் நான் குடும்பத்துடன் கலந்துகொண்டேன். அந்த மண்டபம் மாவிலை,தென்னோலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மண்டபத்தின் வாசலில் மாக்கோலம் போடப்பட்டு இருந்தது. மண்டபத்திற்கு வெளியே இருந்த திறந்த வெளியில் பெண்கள் பலரும் பொங்கல் வைத்தனர். புதுப் பானையில் கோலம் போடப்பட்டிருந்தது. மஞ்சள் கொத்தும் ,இஞ்சிக்கொத்தும் கட்டி அலங்கரித்து இருந்தார்கள். பால் பொங்கி வரும்போது “பொங்கலோ பொங்கல்” என்று ஆரவாரம் செய்தனர். அத்தோடு பச்சரிசி ,வெல்லம் ,ஏலக்காய், முந்திரிப்பருப்பு, நெய் சேர்த்து பொங்கல் செய்தார்கள். பொங்கல் கொண்டாடப்படுவதன் நோக்கம் என்ன என்று விழா ஏற்பாட்டாளர் அவரது உரையில் தெளிவாகக் கூறினார். “உழவர்கள் சிறப்பாக கொண்டாடும் விழா இது. போகிப்பொங்கல் அன்று தேவையில்லாத பொருட்களையும் குப்பைகளையும் வீட்டிலிருந்து தூக்கி எறிவார்கள்.இது நம் மனதில் இருக்கும் கோபங்களையும் ,கெட்ட எண்ணங்களையும் மனதில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்பதைக் குறிக்கும். தைப்பொங்கல் அன்று,அதிகாலையில் எழுந்து,குளித்துப் புத்தாடைகள் அணிந்து பொங்கல் சமைத்து சூரியனுக்குப் படைப்பார்கள். மாட்டுப்பொங்கல் அன்று, தங்களுக்கு எப்போதும் உதவிடும் மாடுகளுக்கு நன்றி செலுத்துவார்கள். காணும் பொங்கல் அன்று தங்கள் உற்றார், உறவினர்களைச் சந்தித்து ஆசி பெறுவார்கள்” என்று பொங்கலின் சிறப்புகளை எடுத்துரைத்தார். அதற்குப் பிறகு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. திறந்த வெளியில் இந்திய பாரம்பரிய விளையாட்டுக்களான கபடி,பல்லாங்குழி, உறியடித்தல் போன்ற விளையாட்ட்டுப் போட்டிகள் நடைபெற்றன.கடைசியாக அனைவருக்கும் பொங்கல் கொடுக்கப்பட்டது.
  நம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பெருமைப்படுத்தும் பொங்கல் விழா எனக்கு மிகவும் பிடித்த விழா.
  ஷ்ரேயா(Shreya)
  க்ரெசண்ட் பெண்கள் பள்ளி
  (Crescent Girls’ School)

Your email address will not be published.


*