தமிழ்மொழி விழா 2018

ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகள். நீங்கள் பங்கேற்ற போட்டிகள், கலந்து கொண்ட நிகழ்ச்சிகள், நீங்கள் பார்த்த விளம்பரங்கள், தமிழ்மொழி பற்றி உங்கள் மனதில் தோன்றிய எண்ணங்கள், இம்மாதத்தில் உங்களுக்கு நேர்ந்த தமிழ்மொழி சார்ந்த அனுபவங்கள் – என்று எதைப் பற்றி வேண்டுமானலும் மனதை ஈர்க்கின்ற அழுத்தமான கட்டுரையாக எழுதுங்கள்.
கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கட்டுரைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
தரமான கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கட்டுரைகளை பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 15 மே 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***

7 கருத்துரை

 1. தமிழுக்கும் அமுதென்று பேர், அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.” என்ற பாரதிதாசரின் கவிதைக்கு ஏற்ப இந்த வருட தமிழ் மொழி மாதம் முழுவதும் சீரும் சிறப்புமாக நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. நான்கு இன மக்கள் சேர்ந்ந்து வாழும் சிங்கப்பூரில் தமிழுக்கும் முக்கியத்துவம் அளித்து, அதை பிரமாண்டமாக கொண்டாடுகின்றோம் என்று சொல்வதில் நான் பெருமிதம் அடைகிறேன். அவை அனைத்தும் மாணவர்களிடம் தமிழ் மொழியின் ஆர்வத்தை அதிகரிக்கவும் மாணவர்களின் தமிழ் திறனை வளர்ப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டன. எல்லா ஆண்டுகளையும்விட இந்த வருடம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இயல், இசை, நாடகம், போன்ற சங்கத்தமிழ் மூன்றும் சிங்கப்பூரில் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டன.
  கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோண்றிய மூத்த மொழி தமிழ் மொழி என்பதே தமிழின் சிறப்பாகும். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் தோன்றிய நமது தாய்மொழியை இன்றும் வாழவைப்பதற்கு இந்நிகழ்ச்சிகள் உதவுகின்றன. இந்நிகழ்ச்சிகளால் எனக்கு தமிழ் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், அம்மாதிரியான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தூண்டுகளாக இருந்தன. ஒருசில நிகழ்ச்சிகளை நேரில் கண்டு, உண்ர்வில் கலந்து மனதில் தங்கும் வண்ணம் அமைந்தது.
  ‘தமிழன் என்று சொல்லடா!
  தலை நிமிர்ந்து நில்லடா!’
  என்று மார் தட்டிக் கொள்ளும் நமக்கெல்லாம் பெரிய கொடையாக விளங்குகிறது சிங்கப்பூரில் நடைபெறும் தமிழ் மொழி மாத நிகழ்ச்சிகள்.
  எப்போதும் பேச்சில் நாட்டம் கொண்ட எனக்கு விவாதப்போட்டிகளே மிகவும் ஈர்த்த நிகழ்ச்சியாகும். சொற்களம் போன்ற விவாதப் போட்டி சுவாரஸ்யமாகவும் அறிவூட்டும் வகையிலும் அமைந்தது. இரு பள்ளிகளுக்கும் இடையில் அனல் பறக்கும் விவாதம் மும்முரமாக நடைப்பெற்றது. மாணவர்கள் தமிழில் சரளமாகவும் தன்னம்பிக்கையுடனும் பேசினார்கள். தங்களின் கருத்துகளை சுவாரஸ்யமான வகையில் விவாதித்தார்கள். அவை என்னை மிகவும் கவர்ந்தன. மாணவர்கள் இரவும் பகலும் உழைத்தனர் என்பது அவர்களின் அற்புதமான பேச்சிலிருந்தே அறியலாம். இரு பள்ளிகளுமே சிறப்பாக பேசினர். அந்த விறுவிறுப்பான போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களின் திறன் எனக்கு ஆர்வமூட்டுகிறது. மற்றொரு பள்ளியும் மனம் தளராமல் அடுத்த முறை இன்னும் சிறப்பாக செய்வோம் என்று உறுதியளித்தனர். அவர்களின் தன்னம்பிக்கை அரங்கத்திலிருந்த அனைவரையும் கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியிலிருந்து நான் என் மொழிவளத்தை அதிகரித்தது மட்டுமின்றி, என் புத்தாகத் திறனையும் வளர்த்துக் கொண்டேன்.
  ஆக மொத்தத்தில், தமிழ்மொழியையும் பாரம்பரியத்தையும் வளர்க்கவில்லை என்றால், அது மண்ணோடு மண்ணாக புதைந்து விடும். அதனால், இதற்கான முதற்படி தமிழ்மொழி விழாக்களை நடத்துவதே ஆகும். அதிவேகமாய் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்குள் தமிழ்மொழி அழிந்து விடாமல் பார்த்துக்கொள்வது நமது கடமையாகும். தமிழில் பேசுவோம், தமிழையே நேசிப்போம்.
  சேவா மானிக்கம்
  கான் எங் செங் பள்ளி
  உயர்நிலை 2

 2. தமிழ் மொழிவிழா இந்திய சிங்கப்பூரர்களுக்கிடையில் விழிப்புணர்வு மற்றும் தமிழ் மொழி பயன்பாட்டை ஊக்குவிக்க நடைபெறுகின்றது. இந்த விழாவில் நிறைய நடவடிக்கைகளும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இது போன்ற நடவடிக்கைகளால் இந்திய மாணவர்கள் தமிழ் மாழி அல்லது பாரம்பரியத்தைப்பற்றிக் கற்றுக் கொள்ளலாம்.
  நடந்த நடவடிக்களில் சொற்களம் மிகவும் சுவையான நிகழ்ச்சி ஆகும். சொற்களம் 2018 என்பது உயர்நிலைப்பள்ளி மாஒவர்களுக்கான தேசிய தமிழ் விவாத நிகழ்ச்சி. தமிழ் பேசும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் தமிழ்மொழிப் புழக்கம், ஆய்வுத் திறன், விவாதத் திறன் போன்ற திறமைகளை வெளிக்கொணரும் நோக்கத்துடன் இந் நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது.
  மற்றொரு நிகழ்ச்சி சொல், சொல்லாத சொல். இந்த நிகழ்ச்சியில் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற நிகழ்ச்சி. இதில் ஆங்கிலச் சொற்களைத் தமிழ் சொற்களுக்கு மொழிபெயர்க்க வேண்டும். இதில் மாணவர்களின் மொழித் திறனையும், மனனத் திறனையும் அறியும் விதமாகப் பல்வேறு வகையில் போட்டியினை நடத்தினர்.
  இவ்வாறு மாணவர்களுக்குப் பயன்தரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளைக் கொண்டு இந்தத் தமிழ் மொழி மாதம் இனிதே நிறைவுற்றது.

  சுபா 2 விரைவு
  பூச்சூன் உயர்நிலைப்பள்ளி

 3. இரண்டாயிரத்துப் பதினெட்டாம் ஆண்டு ஏப்பிரல் மாதம் எட்டாம் நாள் நடைபெற்ற மாணவர்கள் படைப்பு. இந்நிகழ்ச்சியில் 19 பள்ளிகள் 39 படைப்புகள், 69 மாணவர்கள் கலந்து கொண்டனர். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் நிகழ்ச்சியை வழிநடத்தியது. அ.இளங்கோவன் அண்ணாமலைப் பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவராவார்.
  இது முன்னாள் மாணவர்கள் இந்நாள் மாணவர்களுக்கு நடத்தும் ஒரு நிகழ்ச்சி. இதில் 69 மாணவர்கள் தமிழர் அறிவியல் என்னுந் தலைப்பில் தங்களது படைப்புகளை ஆசிரியர்களின் முன் படைத்தனர். பெற்றோர்களும் அப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்களும் ஆர்வமாக் கலந்துகொண்டு ஊக்கமளித்தனர். அந்தந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் தங்களுடைய ஆசிரியர்களுடனும் பெற்றோர்களுடனும் வந்திருந்தனர். மாணவர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்தபிறகு குழுவாகவோ தனியாகவோ தங்கள் படைப்பை ஆசிரியர்கள் முன் படைத்தனர். இந்த விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

  இரா. சந்தோஷ் 2 விரைவு
  பூச்சூன் உயர்நிலைப்பள்ளி

 4. வணக்கம். நான் தமிழ் மொழி விழா 2018 சொல் சொல்லாத சொல் என்னும் தலைப்பை ஒட்டிய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அப்போது அங்கு சில போட்டிகளும் நடைபெற்றன. அந்தப் போட்டியியல் தரப்படும் ஒரு ஆங்கில வார்த்தைக்குச் சரியான தமிழ் வார்த்தையைக் கூற வேண்டும். அல்லது தரப்படும் ஒரு தமிழ் வார்த்தைக்குச் சரியான ஆங்கில வார்த்தையைக் கூற வேண்டும். அந்தப் போட்டியிலிருந்து நான் எனக்குத் தெரியாத ஆங்கில வார்த்தைகளின் பொருளைப் புரிந்து கொண்டேன். அந்த நிகழ்ச்சி என் பாடத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்தது.
  நிகழ்ச்சியின் நடுவர்களில் உரையில் தமிழின் வரலாற்றையும், நாம் ஏன்தமிழில் பேசவேண்டும் என்பதையும் தெளிவாகக் கூறினர்.

  கிருஷ்ணகாந்த் 1 விரைவு
  பூச்சூன் உயர்நிலைப்பள்ளி

 5. சங்கத் தமிழே! செந்தமிழே! சிங்கைத் தமிழே வாழ்க நீ வையம் வாழும்வரை. வளமிக்க தமிழை மேலும் வளப்பமுடையதாக்க சிங்கைத் தமிழ் மன்றம் அது தினமும் புத்தாக்கக் கருத்தியலை நமக்கு வழங்கிவருவதை நாம் நுகர்ந்து வருகின்றோம். தமிழ் வளர்ச்சிக்குத் தமிழ் மன்றம் ஆற்றும் பணி அளவிடற்கரியது. இயல், இசை, நாடகம், என முத்தமிழால் அரங்கேறும் பட்டிமன்றம், சொற்பொழிவுகள், தமிழ் நாளேடுகளில் தமிழ் வளர்க்கும் திறன், அறிவியல் முறையால் தமிழ் மின்னியல் முறை என வளர்ந்தோங்கும் தமிழ், நம் நாட்டின் தமிழ் மன்றங்களின் தலையாயப் பணியாய் விளங்கி வருவதை நுகர்கின்றேன்.
  சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
  வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து என்ற திருக்குறளைச் சொல் சொல்லாத சொல் என்ற போட்டியின் மூலம் கற்றுக் கொண்டேன்.

  கல்தோன்றி மண்தோன்றாக் காலம் முதல் தமிழ் வளமையுடன் வளர்ந்து வந்துள்ளது. தொன்றுதொட்டு வளர்ந்துவரும் தமிழ் கால மாறுபாட்டால் முழுமையாகப் பொருளறியா நிலையிலேயே உள்ளது. பண்டைய தமிழை ஆய்ந்து பண்பட்ட தமிழின் பொருளை இன்று நாம் அறியும் வண்ணம் அளித்துவருகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
  வாழ்வியலைப் போதிக்கும் குறுந்தொகை வரலாற்றைச் சொல்லும் இலக்கியங்கள், நன்னெறி கூறும் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நீதிக் கதைகள், எனத் தமிழ் மொழி கூறாத செய்திகளேயில்லை. 1800-களிலிருந்தே தமிழ் சிங்கையில் வளர்ந்து வந்துள்ளது. ஓலைச்சுவடி, கல்வெட்டு என்ற காலம் மாறி இன்று தமிழ் கனிணி மயமாக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலத் தமிழறிஞர் கோ.சாரங்கபாணி அவர்களின் பணி அளவிடற்கரியது.

  தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்தூறும் அறிவு என்பது போல் இந்தத் தமிழ் மொழி மாதத்தில் பல்வேறு தலைப்புகளில் பலரும் பயன்படும்படியாகப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நான் ஒருசிலவற்றில் கலந்து கொண்டாலும் அவை எனக்கும் என் பாடத்திற்கும் மிகுந்த பயனளித்துள்ளன. நன்றி.

  யுவஸ்ரீ 4 விரைவு
  பூச்சூன் உயர்நிலைப்பள்ளி

 6. தமிழ் மொழிமாதம் தொடர்பாக நடத்தப்பட்ட சொல் சொல்லாத சொல் என்னும் போட்டியில், நானும் என் பள்ளி மாணவர்கள் சிலரும் பங்கேற்றோம். நானும் என் குழுவினரும் இந்தப் போட்டிக்குக் கடுமையாகப் பயிற்சி செய்தோம். ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் அந்தப் போட்டிக்காகத் தயார் செய்தோம். எங்கள் தமிழாசிரியர்கள் எங்களோடு கூடவே இருந்து எங்களுக்கு நிறைய உதவி செய்ததோடு தொடர்ந்து எங்களை ஊற்சாகமூட்டினார்.

  போட்டி தொடங்கும் நேரம் வந்தது. எங்கள் பள்ளியோடு போட்டியிட வேறோரு பள்ளியும் வந்திருந்தது. நிகழ்ச்சி தொகுப்பாளர் போட்டி விதிமுறைகளைத் தெளிவாக விளக்கினார். முதல் மூன்று சுற்றுகளில் எங்கள் அணியினர் மிகச் சிறப்பாகவே செய்தனர். ஆனால் இறுதி இரண்டு சுற்றுகளில் எதிரணியினர் சிறப்பாகச் செய்து வெற்றிபெற்றனர். எதிரணியினர் சிறந்த குழுவுணர்வோடும் விரைவாகவும் செயல்பட்டதே அவர்களின் வெற்றிக்குக் காரணம் என நினைக்கின்றேன்.

  எங்கள் குழுவின் கடின உழைப்பு வீணாகிவிட்டதே என்று எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆசிரியர் எங்கள் உணர்வறிந்து, போட்டியில் வெற்றியும் தோல்வியும் இயல்பு என எங்களுக்கு ஆறுதல் கூறினார்.
  இந்தப் போட்டியிலிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். விடாமுயற்சி, இறுதிவரை விடாமல் போராடுவது, குழுவுணர்வு, போன்றவை வெற்றிக்கு அவசியம் என்பதை உணர்ந்தோம். போட்டியை நடத்தியவர்கள் மாணவர்களுக்கு இக்காலகட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்றைப் போட்டியாக நடத்தி மாணவர்களை ஊக்கப்படுத்தினர். அவர்களுக்கும் என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த நிகழ்ச்சி என் மனத்தில் ஆழமானதோர் இடத்தைப் பிடித்துள்ளது.

  ச.இலக்கியன் 4 விரைவு
  பூச்சூன் உயர்நிலைப்பள்ளி

 7. தமிழ்மொழி விழா 2018, என்னால் மறக்க முடியாது, ஏன் என்பதைத் தெரிந்துகொள்ள மேலும் வாசித்துப்பாருங்கள். ஓவ்வொரு ஆண்டும் தமிழ்மொழி மாதத்தினையொட்டி நடைபெறும் கவிமாலை போட்டியில் எம் பள்ளி மாணவர்கள் கலந்துகொள்வார்கள். இந்த ஆண்டு அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த வருடம் கவிமாலை மன்றத்தினர் ஒரு புதிய முயற்சியில் இறங்கினார்கள். மாணவர்கள் கொண்டு கவியரங்கம் நடத்த முடிவு செய்தார்கள். இந்த மாணவர் கவியரங்கில் பங்கேற்க ஆறு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் அதில் நானும் ஒரு மாணவி. எங்கள் அனைவருக்கும் கவிதை படைப்பதற்கு ஒரு தலைப்பு கொடுக்கப்பட்டது. எனக்கு தீப்பெட்டி பேசினால் என்னும் தலைப்பு கிடைத்தது. தீப்பெட்டியைப் பற்றி எனக்கு தோன்றிய சில கருத்துகளைக் கவிதையாக எழுதினேன். என் ஆசிரியரும் கவிதையை மெருகு ஏற்ற உதவினார். பின்னர் அந்தக் கவிதையை கவிஞர், கவியரங்கத்திற்கு ஏற்றார் போல் சில மாற்றங்கள் செய்து முழுக்கவிதையாக மாற்றிக் கொடுத்தார். கவியரங்கத்திற்கு பயிற்சி செய்ய எனக்கு சரியாக ஒரு மாதம் இருந்தது. நானும் தினமும் கவிரயங்கத்திற்காக பயிற்சியெடுத்தேன். கவியரங்கம் நடைபெறும் நாளும் நெருங்கியது, என் வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தன, காரணம் பெரியோர் பலர் அமர்ந்திருக்கும் ஓர் அவையில் நான் கவிதைப் படைக்கப் போகிறேன் என்ற எண்ணமே எனக்குள் பெருமிதத்தை ஏற்படுத்தியது. நான் வாசித்து முடித்தபோது அவர்கள் தட்டிய கையொலி எனக்குள் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்தது.

  என்னையும் ஒரு படைப்பாளி ஆக்கிய தமிழ் மொழி விழா 2018, என்னால் மறக்க இயலாத விழாவாக என் மனதில் பதிந்துவிட்டது.

  ஸ்ரீநிதி
  பொங்கோல் உயர்நிலைப் பள்ளி

Your email address will not be published.


*