கட்டுப்பாடில்லா கதை

இம்மாதம், எந்தக் கதையை, எந்தக் கருப்பொருளில் எழுத வேண்டும் என்ற எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. உங்கள் கற்பனைக் குதிரையை இஷ்டம்போல் பறக்கவிட்டு விரும்பிய கதையை எழுதலாம். உங்கள் திறனை வெளிப்படுத்தும் நல்ல வாய்ப்பு. எழுதுங்கள்.
உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, இந்தக் கதைக்கான பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 5 செப்டம்பர் 2018பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
*
ஜூலை மாத வெற்றியாளர்கள்
Vishnu Punggol Secondary School Story
Indhu Ramesh Singapore Chinese Girls School Story
Nithyasree Riverside Secondary School Story

8 கருத்துரை

 1. ‘சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா’ என்று மீனா வீட்டில் ரசித்துப் பாடினாள். அப்பொழுது, மீண்டும் பாடத் தொடங்கி விட்டாயா? உன்னை பாடத்தில் தானே கவனத்தை செலுத்த சொன்னேன். எந்த பாடத்திலாவது நல்ல மதிப்பெண்கள் பெற்றாயா? உன் அறைக்கு சென்று பாடத்தில் கவனம் செலுத்து’ என்று மீனாவின் அப்பா அவளை திட்டினார். மீனாவின் அப்பா அவளை ஒரு மருத்துவராக்க ஆசைப்பட்டார். ஆனால் மீனா ஒரு பெரிய பாடகியாக ஆசைப்பட்டாள். மீனா பள்ளியில் சராசரியான மதிப்பெண்களைப் பெறுவாள். இதைக் கண்டால் அவளின் அப்பாவிற்கு எரிச்சல் ஏற்படும்.
  மீனாவின் அப்பா திட்டியதால் அவள் தன் அறைக்கு விரைவாக ஓடி கண்ணீரும் கம்பலையுமாக இருந்துவிடுவாள். சிறிதுநேரம் கழித்து மீனா தன் மனதை நிதானப்படுத்த வெளியே சென்று கொஞ்ச நேரம் நடந்துகொண்டிருந்தாள். அபோது மீனா அருகில் ஒரு ஒரு அறிவுப்பு பலகையில் ஒரு இசை போட்டியைப் பற்றி ஒரு சுவரொட்டி இருந்தது. மீனா அதைப்பார்த்து மகிழ்ச்சியில் மானைப் போல் குதித்தாள். அந்த போட்டி நாளை சனிக்கிழமை அன்று நடைபெறும் என்று அந்த சுவரொட்டியில் இருந்தது.
  அடுத்த நாள் காலையில் மீனா போட்டிக்காக அவளை அலங்காரபடுத்தினாள். அதைப் பார்த்த அவளின் அப்பாவிற்கு சந்தேகமாக இருந்தது. அதனால் அவள் எங்கே செல்வதாக கேட்டார். அதற்கு ‘அது வந்து அது வந்து …… நான் தோழியின் வீட்டிற்கு சென்று படிக்க போகிறேன் என்று பொய் சொன்னாள். அவளின் அப்பா படிப்பில் கவனம் செலுத்துகிறாள் என்று பெருமையடைந்தார்.
  மீனா போட்டியில் பங்கேற்றாள். அவளின் குரல் நன்றாக இருந்ததால் போட்டியில் வெற்றி பெற்றாள். அவள் பாடியதை ஒருவர் ‘யுடியூப்’ என்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தார். அது உலகம் முழுவதும் பரவியது. அந்த காணொளி அவளின் அப்பாவின் நண்பருக்கும் கிடைத்தது. அவர் அதை அப்பாவிற்கு அனுப்பினார்.
  அதைப் பார்த்த மீனாவின் அப்பா ஆத்திரத்துடன் இருந்தார். தன்மகள் அவரிடம் பொய் சொன்னதால் அவரின் ரத்தம் கொதித்தது. மீனாவின் அறைக்கு சென்று திட்ட நினைத்தார். அப்பொழுது அவரின் நண்பர் அவருடன் தொடர்புக்கொண்டு அவரின் மகளைப் பற்றி புகழ்ந்து பாராட்டினார். இதைக்கேட்டவுடன் ‘மீனா நீ ஆசைப்பட்டது போல் ஒரு பாடகியாக இரு’ என்று மகளை கட்டி அணைத்தார்.
  நம்முடைய மிகப் பெரிய சாகசமே நம்முடைய கனவு வாழ்க்கையை வாழ்வதே!

  Teck Whye Secondary School
  Sec1 Ex

 2. மொகுஜென் என்னும் ஜென் துறவிக்கு எப்படி சிரிப்பதென்றே தெரியாது, சொல்லப்போனால் எப்போதும் முகத்தை கோபமாக இருப்பது போலவே வைத்திருப்பார். ஒரு நாள் அவர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆகவே “இந்த உலகத்தை விட்டு போகப் போகிறோம்” என்பதை உணர்ந்த அவர் தன் சீடர்களுக்கு ஒரு உண்மையை சொல்ல விரும்பினார். அது என்னவென்றால், நீங்கள் என்னிடம் பத்து ஆண்டுகளுக்கு மேல் படித்துள்ளனர். எங்கே நீங்கள் கற்றுக் கொண்ட ஜென் தத்துவத்தை வெளிகாட்டுங்கள் என்று சொன்னார். பின் யார் ஒருவர் அதனை சரியாக வெளிப்படுத்துகிறாரோ, அவரே என் வாரிசு மற்றும் அவர் என் கோப்பையை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினார். அனைத்து சீடர்களும் பதிலளிக்காமல், மொகுஜென்னின் சிரிக்காத முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். என்சோ என்னும் சீடன், அவரைப் பார்த்தாலே மிகவும் பயப்படுவான். இருப்பினும் அவருடன் நீண்ட நாட்கள் இருந்ததால், அவரின் அருகில் சென்று, அங்குள்ள ஒரு மருந்து கோப்பையை நகர்த்தினான். இதுவே துறவியின் கேள்விக்கான பதில் என்பது போல் அந்த என்சோ வெளிப்படுத்தினான். அப்போது அந்த துறவியின் முகம் இன்னும் கடுமையாக மாறியது. பின் அந்த துறவி “என்ன அனைவருக்கும் புரிந்ததா?” என்று கேட்டார். அதனைக் கண்ட அவன், உடனே எழுந்து வெளியே சென்று விட்டு, திரும்பி பார்த்து, மீண்டும் அவரின் அருகில் சென்று, அந்த கோப்பையை நகர்த்தினான். பின்னர் இதுவரை சிரிக்காமல் இருந்த துறவியின் முகமானது, அவனது செய்கையைக் கண்டு, புன்னகையானது பீறிட்டு வெளிவந்தது. பிறகு அந்த துறவி அவனிடம் “முட்டாளே! நீ என்னுடன் பத்தாண்டுகள் இருந்தாய். நீயோ இதுவரை என் உடல் நிலை எவ்வாறு உள்ளது என்று பார்த்ததில்லை. இருப்பினும் நீ அதைப் புரிந்து கொண்டு, எனக்கு உதவினாய். ஆகவே நீ இந்த கோப்பையை எடுத்துக் கொள். இனிமேல் இது உனக்கு சொந்தமானவை” என்று சொன்னார்.

  Narayanamurthy Sriram
  Swiss Cottage Secondary School
  2E1

 3. “புத்தகம் என்பது எத்தனை அற்புதம்? தூரம் தூர்ந்து போகும்… இறந்த காலம் மீண்டும் வாழும்… கத்தியின்றி ரத்தமின்றி உள்ளங்கையில் யுத்தம்!” என்பது கவிஞர் வைரமுத்தின் வரிகள். இக்கவிதையை நான் எங்கு படித்தேன் என்று நீங்கள் கேட்டால் பூரிப்படைவீர்கள். ஆம், இப்பொன்னான வரிகளை நான் சமீபத்தில் புதிதாக திறக்கப்பட்ட யிஷுன் நூலகத்தில் கண்டேன். சுமார் ஓர் ஆண்டாக மூடப்பட்டிருந்த யிஷுன் நூலகம் இப்போது புதுப்பிக்கப்பட்டு, பல்வேறு வசதிகளோடு, பொலிவுடன் காணப்பட்டது. நானும் என் தோழியும் நூலகத்தின் திறப்பு விழாவிற்கு சென்றிருந்த பொது வண்ண பலூன்களோடும் பிரகாசமான விளக்குகளோடும் வரவேற்கப்பட்டோம். பழைய நூலகத்தை விட புதிய நூலகம் அதிக விரிவாக்கம் செய்யப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான நூல்கள் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அமைதியான சூழலில் படிக்க விரும்புவோருக்கு தனியொரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறார்கள் தொழில்நுட்பம் வழி கல்வி கற்க ஆங்காங்கே ஐபாட்களும் கணினிகளும் பொருத்தப்பட்டிருந்தன. பட்டறைகள் நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறுவதற்கு ஓர் அறையும் இருந்தது. அனைத்துக்கும் மேலாக என்னை மிகவும் கவர்ந்த ஒன்று நூலகத்தில் இனி வாராவாரம் நடைபெறவிருக்கும் கதை சொல்லும் போட்டி. புதிய நூலகத்தில் நான் இரவல் பெற்ற முதல் நூல், அறிஞர் அப்துல் கலாம் பற்றிய, “ கலாம் கனவின் கதை” என்ற ஒன்றாகும். அந்நூலிலிருந்து நான் வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய பண்புகள் பற்றியும் கலாம் அவர்களின் வாழக்கை கொள்கைகள் பற்றியும் நான் மேலும் அறிந்துகொண்டேன். எனவே, அறிவு வளர ‘நூல் பல கல்’ என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

  கீர்த்தனா
  ரிவர்சைட் உயர்நிலைப்பள்ளி

 4. ஒரு காட்டில் செடி ஒன்று இருந்தது. அதில் சிறிதும் பெரிதுமாக நிறையப் பூக்கள் இருந்தன. கருவண்டு ஒன்று தேனுக்காக அந்தச் செடியைச் சுற்றிவந்தது. அப்போது, பூ ஒன்று மிகுந்த வாட்டத்துடன் இருப்பதைப் பார்த்ததும், “நீ ஏன் வாட்டமா இருக்கே?” என்று கேட்டது.
  அதற்கு அந்தப் பூ, “பூக்களின் தோற்றம் வளர்ச்சியில் ஏழு நிலைகள் உண்டு. அதை நீ தெரிஞ்சுக்கிட்டா என் வாட்டத்துக்கான காரணத்தைப் புரிஞ்சுக்க முடியும்!” என்றது.

  “பூக்களின் வளர்ச்சில் ஏழு நிலைகளா? சொல்லு… சொல்லு” என ஆர்வமானது வண்டு.

  ‘`ஒரு பூ முதன்முதலா செடியில் உருவாகும்போது ‘அரும்பு’ எனச் சொல்வாங்க. அப்படி நான் உருவானபோது, ரொம்பச் சந்தோஷமா இருந்துச்சு. தாய்ச்செடி என்கிட்ட ரொம்ப வாஞ்சையா இருந்துச்சு. என் சகோதரிகள், பிரியமா நடந்துக்கிட்டாங்க. மழை, வெயில், காற்று, பனியினால் எனக்குக் கெடுதல் வந்துடக் கூடாதுனு, இலைகளால் மூடிப் பாதுகாக்கப்பட்டேன். அரும்புதான் என் மழலைப் பருவம். மிகவும் இனிமையான பருவம்!” என்றது பூ.

  ‘`ஆஹா அருமை. பூக்களின் இரண்டாம் நிலை?’’ – கேட்டது கருவண்டு.

  ‘`பூக்களின் இரண்டாம் நிலை ‘மொட்டு’. இந்த நிலையில் பூவின் இதழ்கள் வளர ஆரம்பிச்சாலும், குவிஞ்ச நிலையில்தான் இருக்கும். என் உடலில் வெளிர்நீல வரிகள் உருவாவதைக் கவனிச்சேன். என் சகோதரிகள், அடர்த்தியான நீலவண்ணத்தில் ரொம்ப அழகா இருந்தாங்க. பெரிய பூவாக வளரும்போது எனக்கும் அந்த நிறம் கிடைக்கும்னு தாய்ச்செடி சொல்லுச்சு. அப்போ, சிறிசும் பெருசுமா நிறைய மொட்டுகள் இருந்தோம். நாங்க எல்லாரும் கூடிப் பேசுவோம். எங்க எல்லாருக்கும் பல கனவுகள் இருந்துச்சு. ‘மொட்டு’ எனது உற்சாகமான சிறார் பருவம்!” என்றது பூ.

  “உன் கதையைக் கேட்கவே சுவராஸ்யமா இருக்கு. உன் அடுத்த நிலை என்ன?” என ரீங்காரமிட்டது கருவண்டு.

  “பூக்களின் மூன்றாம் நிலை ‘முகில்’. ஒரு மொட்டின் இதழ்கள் முதன்முதலா அவிழ்ந்து விடுபடுவதைத்தான் முகிழ் அல்லது முகிழ்த்தல் எனச் சொல்வாங்க. இந்த நிலையில் எனக்குத் தாய்ச் செடியின் பராமரிப்பு அதிகம் தேவைப்படலை. நான் தன்னம்பிக்கையோடு இருந்தேன். நெக்டார் எனப்படும் தேன், என்னிடம் உருவாக ஆரம்பிச்சது. முகிழ்ப் பருவத்தை இளமையின் ஆரம்பநிலைனு சொல்லலாம்!” என்றது பூ.

  வண்டு வியப்புடன் பார்க்க, பூ தொடர்ந்து பேசியது. “பூக்களின் நான்காம் நிலை ‘மலர்’. இந்த நிலையில் எனது இதழ்கள் மேலும் பெருசா வளர்ந்துச்சு. என் நிறம், அடர்த்தியான நீலத்துக்கு மாறி, பார்க்கிறவங்க மனசைக் கவர்ந்தது. தினமும் காலையில் சூரிய உதயத்தின்போது மலர்வேன். அந்திசாயும் வேளையில் இதழ்கள் குவிவேன். உன்னை மாதிரி வண்டுகளும் பட்டாம்பூச்சிகளும் தேனுக்காக வரும். மலர் ஒரு பூவின் துடிப்பான இளமைப் பருவம்!”

  குறுக்கிட்ட வண்டு, “மொட்டுகளா இருந்தப்போ பலருக்கும் பல கனவுகள் இருந்ததா சொன்னியே, அது என்ன?” எனக் கேட்டது.

  “வளர்ந்த மொட்டுகளைத் தங்கள் தேவைக்காக மனுஷங்க கொய்து எடுத்துட்டுப் போவாங்க. சில மொட்டுகளுக்குத் தாங்கள் அழகான மாலையாகத் தொடுக்கப்படணும்னு ஆசை இருந்துச்சு. சில மொட்டுகள் இறைவனுக்கு அர்ச்சனை செய்யப்படும் பாதமலரா இருக்கணும்னு ஆசைப்பட்டாங்க!”

  “ஓகோ… நினைச்சது நடந்துச்சா?”

  “எண்ணம்தானே வாழ்க்கை. எல்லா மொட்டுகளுக்கும் அவங்க நினைச்சதே நடந்துச்சு. பூக்களின் ஐந்தாம் நிலை ‘அலர்’. ஒரு பூ எப்போதும் மலர்ந்த நிலையிலேயே இருப்பது அலர்!” என்றது பூ.

  “ஒரு சந்தேகம்… அலருக்கும் மலருக்கும் என்ன வித்தியாசம்?” எனக் கேட்டது கருவண்டு.

  “அலர்ந்த நிலையில் ஒரு பூ தன் இதழ்கள் குவிந்து விரியும் தன்மையை இழந்துரும். மலர் இளமைப் பருவம்னா, அலர் முதுமையின் ஆரம்பம்னு சொல்லலாம். அலர்ந்த நிலையில் ஒரு பூவுக்குப் பனிக்காற்று, வெயில், மழையிலிருந்து பாதுகாப்பு கிடைக்காது. இதனால், பூ வாடத் தொடங்கும். மகரந்தத்தாள் காய ஆரம்பிக்கும். ஓர் அலர்ந்த பூ வாடும் நிலைதான் ஆறாம் நிலை!” என்றது பூ.

  “புரியுது புரியுது! அப்போ, ஏழாம் நிலை என்ன?”

  “பூக்களின் ஏழாம் நிலை, ‘செம்மல்’. வாடிய பூ வதங்கும் நிலை. பூக்களின் இதழ்கள் சுருங்கும். மகரந்தத்தாளும் முழுசா வாடிரும். இப்போ, நான் வதங்கியிருக்கேன். இது எனது ஏழாம் அதாவது கடைசி நிலை. இப்போ, இந்தச் செடியில் பெயரளவுக்குத்தான் ஒட்டிக்கிட்டுருக்கேன். ஒரு சின்னக் காற்று அடிச்சாலும் உதிர்ந்திருவேன். நீ என் பக்கத்துல வந்து உன் இறக்கைகளைப் படபடத்துவிட்டுப் போ!” என்றது பூ.

  பூ கேட்டுக்கொண்டபடி கருவண்டு செடியின் அருகில் வந்து படபடத்தது. அதன் அதிர்வில் பூ காம்பிலிருந்து உதிர்ந்து ஓசையின்றித் தரையில் வீழ்ந்தது. விழுந்த பூவின் அருகே வண்டு சென்றது. “மொட்டா இருந்தப்போ, நீ என்ன ஆசைப்பட்டே?” எனக் கேட்டது வண்டு.

  “என் ஏழு நிலைகளையும் தாய்ச் செடியிலேயே கழிக்கணும். அதன் காலடியில் விழுந்து சருகாக வேண்டும் என ஆசைப்பட்டேன். நான் நினைச்சதே நடந்தது!” சிரித்தபடி சொன்னது பூ.

  ‘’ஆனால், யாருக்கும் பயனில்லாமல் போய்ட்டோமோ என்ற வருத்தம் இல்லியா?’’ எனக் கேட்டது கருவண்டு.

  ‘’யார் சொன்னது பயனில்லாமல் போனதாக? உன்னைப்போலப் பலருக்கும் பசியாற்றினேன். பார்க்க இது முடிவு மாதிரி தெரிஞ்சாலும், முடிவு கிடையாது. இது புதிதான ஒன்றின் ஆரம்பம். என் தாய்ச் செடிக்கே நான் உரமாகிறேன். என்னை இத்தனை தூரம் வளர்த்த மண்ணுக்கு நன்றி சொல்றேன்’’ – இதுதான் அந்தப் பூ கடைசியாகப் பேசிய வார்த்தைகள்.

  கருவண்டு அமைதியாகத் தலைவணங்கி, அந்தப் பூவைச் சுற்றி வந்தது. பிறகு, ரீங்காரமிட்டபடி பறந்துசென்றது.

 5. நம்மிலிருந்து துவங்குவோம் !

  தமிழ் ஆசிரியர் இலக்கியன் ஏழாம் வகுப்பினுள்ளே நுழைந்தார். மாணவர்கள் “வணக்கம் ஐயா” என வணங்கினர். ஆசிரியர் “இன்று நாம் அனைவரும் கலந்துரையாடப் போகின்றோம், ஒவ்வொருவரும் தங்களுக்கு மனநிறைவு தந்த நிகழ்வு பற்றி அனைவர் முன்னின்று பகிரவேண்டும்” என கூறினார். முதலில் வந்த விக்னேஷ், தான் இரண்டு நாள் முன்பு தனியாக அங்காடி சென்று வீட்டிற்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்கி வந்தது தனக்கு மனநிறைவு தந்ததாக கூறினான். அடுத்து வந்த சஞ்சித், தன் ஐந்து வயது தங்கைக்கு மிதிவண்டி ஓட்டிப் பழக கற்றுத் தந்தது எனவும், ஒருவர் பின் ஒருவராக பகிர்ந்தனர்.

  மாலாவின் முறை வந்தது. அவள் “நான் சென்ற மாதம் விடுமுறை நாளன்று என் பெற்றோர்களுடன் அதிகாலை கடற்கரைக்குச் சென்றிருந்தேன். அங்கு கிடந்த சோழிகளில் எனக்குப் பிடித்தவற்றை எடுத்து ஒரு பையில் போட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு நீல நிற நெகிழிப்பை நகர்வதை கண்டு அதன் அருகே சென்றேன். அந்த நெகிழிப்பையினூடே ஒரு சிறிய ஆமை சிக்கி அதன் கழுத்து இறுக்கிக்கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ந்து, என் பெற்றோர்களை அழைத்து வந்தேன். என் தாய், அந்த ஆமையை கையில் எடுத்து, மிக கவனத்துடன் அதன் கழுத்தை நெருக்கிக் கொண்டிருந்த நெகிழிப்பையைக் கிழித்து ஆமையை விடுவித்தார். அதன்பின் ஆமை மெதுவாக நகர்ந்து கடலில் இறங்கியது. இந்நிகழ்வு என் மனதை மிகவும் பாதித்தது. நாம், இதுபோன்ற பிற உயிர்களை துன்பத்திற்கு ஆளாக்காமல் இருக்க, இனி நாம் நெகிழியினால் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கவோ, உபயோகப்படுத்தவோ கூடாது என கூறியதை என் பெற்றோர்களும் ஆமோதித்து, அன்று முதல் நாங்கள் அதனை கடைபிடித்து வருகின்றோம்” என கூறியதை கேட்ட அனைவரும் கைதட்டியதுடன் இன்றிலிருந்து ஆசிரியர் உட்பட அனைத்து மாணவர்களும் இதனை பின்பற்றுவோம் என உறுதிமொழியேற்றனர்.

  தான் செல்லும் அனைத்து வகுப்பிலும் இவ்வுறுதிமொழியினை ஏற்கச்செய்தலே தனக்கு மனநிறைவு தருமென நினைத்தவாறே ஆசிரியர் எட்டாம் வகுப்பு ‘ஈ’ பிரிவு நோக்கி நடந்தார்…

  ஜயனி சிவக்குமார் யுவபாரதி சர்வதேசப் பள்ளி

 6. “எல்லாரும் மெதுவாக உங்களின் சுவாச கவசங்களை அணிந்துவிட்டு வெளியே வாருங்கள். நீங்கள் காணொளியில் பார்த்ததைப் போல தான் இருக்கும். பயந்து விடாதீர்கள்.” என்று கூறினார் நாசா (NASA) சட்டையை அணிந்திருந்த ஆடவர். செவ்வாய் கோலத்தில் புதியதொரு ஏரியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்திருந்தார்கள். நம் உலகத்தில் வெப்பமயமாதல் அதிகமாவதால், சிலரை மட்டும் செவ்வாய் கோலத்தில் வாழ அழைத்திருந்தார்கள். எனக்கென்று கூறிக்கொள்ள யாரும் இல்லை. நான் சிறு வயதிலிருந்து சிறுவர் இல்லத்தில் தான் படித்து வாழ்ந்தேன். விண்வெளிக்குச் செல்ல வேண்டும் என்னும் நெடுநாள் கனவு எனக்கு இருந்தது. இப்போதாவது அது நிறைவேறியதே என்று எண்ணி மனமகிழ்ந்தேன்.

  அந்த விண்வெளி கப்பலிலிருந்து வெளியே சென்ற அடுத்த நிமிடம் என்னால் என் கண்களையே நம்ப முடியவில்லை! எங்கும் சிவப்பாய் இருந்தது. பூமி முழுவதும் ரோஜா பூக்கள் மட்டும் பூத்து குலுங்கியதைப் போல காட்சியளித்தது. எங்கோ சின்ன ஏரி ஓடும் ஓசை மட்டும் செவிகளை எட்டியது. எங்கும் கண்ணாடி வீடுகளும், செயற்கை கோள்களுமாய் இருந்தன. நான் உடனே என் புது உலகத்தின் மீது காலடி எடுத்து வைத்தேன். அப்போது எனக்கு “நீல் ஆர்ம்ஸ்ட்ரோங்” (Neil Armstrong) ஆனது போல ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது. துள்ளி குதித்த அடுத்த நிமிடம் புவி ஈர்ப்பு இல்லாத அந்தக் கோலத்தில் பறக்க ஆரம்பித்தேன். சிரித்தவாறு அங்கும் இங்கும் சுழன்று விளையாடினேன். எல்லாரும் என்னை விசித்திரமாக முதலில் பார்த்தாலும், இறுதியில் அவர்களும் பறந்தனர். என் புது வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்துப் போனது.

  எதுவும் அதிகமாக இருந்தால் திகட்ட ஆரம்பித்து விடுவது இயல்பு. அவ்வாறு தான் எனக்கும் என் புது வாழ்கை அமைந்தது. நாட்கள் செல்ல செல்ல சிவப்பு பூமியையும் மேகமில்லா வானத்தையும் பார்க்க பிடிக்கவில்லை. பூமியின் எக்கச்சக்கமான வண்ணங்களும், அழகான இயற்கையையும் காண ஏங்கினேன். ஆனால் எங்களை அங்கு கூட்டிவந்தவர்கள் கூறிய முதல் விதிமுறை, செவ்வாய் கோலத்திலிருந்து வெளியே போக கூடாது. எவ்வளவு முயற்சித்தாலும் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. மற்ற அனைவரும் அவர்களுடைய குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருந்தார்கள், நான் மட்டும் தனியே அங்கும் இங்கும் சுற்றியவாறு இருந்தேன். ஆனால் எங்கு சுற்றினாலும், ஒரே சிவப்பு பூமியாகத் தெரிந்தது. பித்து பிடித்துவிடும் போல இருந்த போது நான் ஒரு முடிவுக்கு வந்தேன், செவ்வாய் கோலத்திலிருந்து நிச்சயம் தப்பிக்காமல் இருக்கமாட்டேன்.

  எங்களைக் கூட்டிவந்தவர்கள் அடிக்கடி ஒரு கண்ணாடி கூடத்தினுள் செல்வதும், வருவதுமாக இருந்தார்கள், ஆனால் எங்களை மட்டும் உள்ளே விடமாட்டார்கள். அதற்கும் மீறி உள்ளே சென்றவர்கள் வெளியே வரமாட்டார்கள். ஏன் என்று கேட்டவர்களும் எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை. ஆனாலும், அக்கூடத்தில் வெளியே செல்லும் வழி நிச்சயம் இருக்கும் என்று என் மனம் கூறிய ஒரே காரணத்தினால் நான் சரியான நேரம் பார்த்து கூடத்தினுள் செல்ல முற்பட்டேன். இரவில் அவர்கள் அவரவர் வீட்டிற்குச் சென்று, இரு ரோபோக்களை மட்டும் அங்கு விட்டுவிட்டு செல்வார்கள். அந்த இரு ரோபோக்களை மட்டும் ஏமாற்றினால் உள்ளே சென்று விடலாம். நான் மெதுவாக ரோபோக்களின் பின்னால் நடந்து சென்றேன். அவற்றின் தோள்களில் சில மின்கம்பிகள் மாட்டப் பட்டிருந்தன. அந்நிமிடம் ஒரு யோசனை தோன்றியது. என்னிடம் இருந்த இரண்டு சாக்லேட் சுற்றியிருக்கும் உரைகளை அவர்கள் பக்கத்தில் தூக்கி வீசினேன். நான் நினைத்தபடியே இரு ரோபோக்கலும் ஆளுக்கொரு உரையை எடுத்து நோட்டமிட்டன. அந்நிமிடம் பார்த்து உடனே அவற்றின் மின்கம்பிகளைப் பிடித்து இழுத்தேன். இரண்டு ரோபோக்களும் செயலிழந்தன. அடுத்த நிமிடமே என் விடுதலையை நோக்கி சிட்டாய் பறந்தேன்.

  கண்ணாடி கூடத்தில் இருவர் ஏதோ பேசி கொண்டிருந்தார்கள். நான் உடனே சில பெட்டிகளுக்குப் பின்னால் மறைந்து கொண்டேன். “அவர்கள் சம்மதிக்கும் வரை, அனைவரும் நம் கட்டுப்பாட்டில் இருக்கட்டும்.” என்றார் கருப்பு மேலாடை அணிந்திருந்தவர். அவருக்குப் பக்கத்தில் இருந்த மொட்டை தலை மனிதரோ, “அனைவரையும் சித்திரவதைப் படுத்தி அதை காட்டுவோம், உடனே ஒத்துக்கொள்வார்கள். அவர்களுக்குக் கொடுக்கும் செயற்கைச் சுவாசத்தை வெட்டிவிடுவோம்!” என்றார். “இரண்டு வாரங்கள் தான் ஆகியிருக்கின்றன. இன்னும் சில வாரங்கள் ஆகட்டும், என்னை நாசாவில் சேர்த்துக்கொள்ள அவர்கள் சம்மதித்தால் நிச்சயம் அனைவரையும் விட்டுவிடுவோம். இப்போது இவர்களை வைத்து மிரட்டினால் போதும். நாசாவால் 10000 மேலானவர்கள் இறந்து போனால் NASA வுக்கு தான் கெட்ட பெயர்!” என்றார் மேலாடை அணிந்திருந்தவர். இருவரும் அத்தருணம் வெளியேறினர். அவர்கள் கூறியது என்னை வாயடைக்க செய்தது. உடனே அவர்கள் சென்ற பாதையில் பின்தொடர்ந்தேன். படிக்கட்டில் இறங்கி சென்றேன். அங்கு நான் கண்டது என்னை நிலைகுத்தி நிற்க செய்தது.

  உலகம்! என் உலகம்! வாகனங்கள், தெருக்கள்! வானம்! என் கண்களை என்னாலே நம்ப முடியவில்லை, நான் பூமியில் இருந்தேன்! என் பூமியில்! உடனே சூரியனைக் காண வெளியே ஓடோடினேன். திடீரென, இரும்பு போன்ற கைகள் என்னைப் பிடித்து இழுத்தன. அந்த மேலாடை அணிந்தவரும் அவருடைய நண்பரும் அங்கு இருந்தனர்!! “எங்கே செல்கிறாய்?” என்று பற்களைக் கடித்தவாறு கேட்டார். நானோ பயத்தில் உளறி கொட்டினேன். “நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று எனக்கு தெரியும்! எங்களை அடைத்து வைத்து கொண்டு யாரையோ மிரட்டுகிறீர்கள்! நான் காவலர்களிடம் புகார் கொடுக்க போகிறேன்!” என்றேன். அவரோ சிரித்தார். “போ! நீ என்ன சொன்னாலும் அவர்கள் நம்ப மாட்டார்கள். இந்த விஷயம் எங்களுக்கும், NASA வுக்கும் மட்டும் தான் தெரியும். அவர்கள் என்னை ஓர் ஆராய்ச்சியாளராக ஏற்று கொள்ளும் வரை, 10000 கணக்கானவர்களைக் கொன்று விட மிரட்டி கொண்டு தான் இருப்போம். அப்படி என்னை ஆராய்ச்சியாளராக ஏற்றுக்கொள்ளாமல் போனால் நாங்கள் உங்களைச் சித்திரவதைப் படுத்தும் போது நீங்கள் அனைவரும் நாங்கள் NASA விலிருந்து வந்தவர்கள் என்று எண்ணி, அதை தான் கூறுவீர்கள். “NASA விலிருந்து வந்தவர்கள் எங்களை ஏமாற்றி விட்டார்கள்!” என்று கூறி அழுவதை உலகம் முழுவதும் பரப்புவோம்! அப்போது NASA வுக்கு தான் கெட்ட பெயர்!” என்று கூறி சிரித்து கொண்டிருந்தார். அந்த தருணம் பார்த்து நான் கீழே கிடந்த சுவாச கருவியை கையில் எடுத்தேன். 20kg இரும்பால் ஆனதை அப்படியே இருவரின் தலையிலும் தூக்கி போட்டு ஓட்டம் பிடித்தேன். உடனே காவல் நிலையத்திற்கு ஓடோடினேன்.

  “எங்கே நீ கூறிய செயற்கை செவ்வாய் உலகம்? இங்கு ஒன்றும் இல்லையே!” என்று காவலர்கள் என்னை கேள்விக்குறியுடன் பார்த்தனர். நானோ குழப்பத்தில் இருந்தேன். அவர்கள் இருவரும் அங்கேயே தான் இருந்தனர். என்னை பார்த்து கேலியாக சிரித்தனர். “நாங்கள் இங்கு தையல் கடை மட்டும் தான் வைத்திருக்கிறோம். இந்தச் சிறுமிக்கு பித்து பிடித்துவிட்டது போல!” என்று கூறி நகைத்தனர். காவலர்களும் தேடி பார்த்துவிட்டனர். எங்கும் படிக்கட்டை காணவில்லை. எனக்கு தான் பைத்தியம் பிடித்துவிட்டதோ என்று நானே என்னை கேட்டு கொண்டிருந்த வேளையில் என் கண்களில் தரையில் இருந்த சிறிய பொத்தான் பட்டது. நான் உடனே அதை கால்களால் அழுத்தினேன். படிக்கட்டுகள் மெதுவாக வெளிவந்தன! உடனே காவலர்களுடன் செயற்கை செவ்வாய் கோளிற்கு சென்றேன், அந்த இரு ஆடவர்களை காவலர்கள் பிடித்துக்கொண்டு அந்தச் செயற்கை உலகத்தைத் தேடிப்பார்த்து, செய்தியாளர்களைக் கூப்பிட்டார்கள். ஒரு நாளில் அனைவருக்கும் இது பற்றி தெரிய வந்தது. 10000 பேரை காப்பாற்றியதற்குப் புகழும் பாராட்டும் எனக்குக் கிடைத்தது. NASA வே என்னை பாராட்டியது! ஆனாலும், உண்மையான செவ்வாய் உலகத்தைக் காணவில்லையே என்னும் சோகம் என்னுள் இருந்தது.

  “மெதுவாக வெளியே செல்ல வேண்டும், குதிக்க கூடாது.” என்று கூறினார் எங்களின் தலைமை விண்வெளி வீரர். நான் மெதுவாக முதல் முறையாக செவ்வாய் கோளத்தை காண காலடி எடுத்து வைத்தேன். நான் கண்டது என்னைப் பிரமிக்கச் செய்தது. பூமி சிவப்பாக இருந்தாலும், அந்த இடத்திலிருந்து, உலகத்தைப் பார்க்க முடிந்தது. மற்ற கோள்களையும் காண முடிந்தது. ஒரு வழியாக கனவு நினைவெறியதை எண்ணி துள்ளி குதித்தேன். அடுத்த நிமிடம் சிறு வயதில் பறந்தது போல பறக்க ஆரம்பித்தேன்!! இம்முறை நிஜமாகவே மகிழ்ச்சியடைந்தேன்.

  க. கபாஷினி
  மெத்தடிஸ்ட் பெண்கள் பள்ளி
  உயர்நிலை 2

 7. நான் ஒரு வினோதமான புகைப்படத்தை பார்த்தேன். அதை பற்றி விவரித்து தான் நான் இப்போது எழுதப்போகிறேன்.

  அந்த புகைப்படத்தில் நான் ஒரு மிக பெரிய கட்டடத்தைத் தல கீழ இருப்பதைப் பார்த்தேன். அதுமட்டுமல்லாமல் வானம் பூமயின் இடத்தில் இருந்தது. கட்டடம் ஆகாயத்தில் இருந்தது. பூமியில் இருக்கும் வானத்தில் நிறைய மேகங்கள் இருந்தன. அந்த மேகங்களின் மீது தாவி தாவி குதித்து சென்ற ஓர் ஆடவரை பார்த்தென். அந்த ஆடவரின் முகம் மிகவும் பீதியை மற்றும் குழப்பத்தை காட்டியது. அந்த ஆடவரின் முகத்தில் ஏதோ ஒரு விதமான ஆழ்ந்த பதட்டத்தை நான் கவனித்தேன். அதை பார்க்கும் போது அந்த ஆடவரின் உணர்வுகள், தற்போது இருக்கும் நிலமையை அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் ஆழமாக ஏற்பட்டது.

  எனவே அந்த ஆடவரின் உணர்வுகளை அறிய வேண்டும் என்பதற்காக நான் என் கற்பனை உலகத்திற்குள் நுழைந்தேன். என் கற்பனை உலகத்திற்குள் நுழைந்து நான் இரண்டு கதாப்பாத்திரங்களை உருவாக்கினேன். முதல் கதாபாத்திரம் கட்டடமாக செயல்படும் நான், இரண்டாவது கதாபாத்திரத்தை எடுத்துக்கொண்டது என் தோழி அவள் அந்த ஆடவருடைய கதாபாத்திரத்தில் இருந்தாள். என் கற்பனை கதையில் ஆடவராக இயங்கிய என் தோழி ஓர் மிகப் பெரிய தப்பு செய்தாள், அந்த தவறு என்னவென்றால் அவள் தேர்வில் படிக்காமல் பக்கத்தில் அமர்ந்திருக்கும தோழியை பார்த்து விடையை எழுதி ஏமாற்றினாள். அவள் சரியான பாடத்தை புகட்டி கொள்ள வேண்டும் என்பதற்காகவே, கட்டடமாக இருந்த நான் அவளைச் சுற்றி இருக்கும் சாம்ராஜ்ஜியத்தை முழுமையாக தலை கீழ் மாற்றி அவளுடைய தவற்றை அவளையே அறிந்து கொள்ள வைத்தேன்.

  கட்டடம் கதாபாத்திரத்தில் இருந்த நான் நல்லது மற்றும் கெட்ட உணர்வுகளை வெளிப்படுத்தினேன். இந்த கற்பனை உண்மை இல்லை என்றாலும் இதிலிருந்து கத்துக்கொள்வதறகு எல்லோருக்கும் ஒர் கத்துக்கொள்ளும் பாடம் இருக்கிறது. இவ்வாறு கற்பனை கொள்வதிலும் ஒரு நல்ல நீசை இருக்கிறது என்பதையொட்டி முடித்துக்கொள்கிறேன்.

  kftha
  ST.ANTHONY’S CANOSSIAN SECONDARY SCHOOL

Your email address will not be published.


*