எதையும் கதையாய் சொல்லலாம் ..

இம்மாதம், எந்தக் கதையை, எந்தக் கருப்பொருளில் எழுத வேண்டும் என்ற எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. உங்கள் கற்பனைக் குதிரையை இஷ்டம்போல் பறக்கவிட்டு விரும்பிய கதையை எழுதலாம். உங்கள் திறனை வெளிப்படுத்தும் நல்ல வாய்ப்பு. எழுதுங்கள்.

உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, இந்தக் கதைக்கான பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.

அவற்றுள் சிறந்த மூன்று கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 7 அக்டோபர் 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!

*

ஆகஸ்ட் மாத வெற்றியாளர்கள்

5 கருத்துரை

 1. ‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்
  மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்’

  என்ற திருக்குறளின் உண்மை எனக்கு அப்போது தான் புரிந்தது.

 2. இந்து ரமேஷ்
  1 PR
  சிங்கப்பூர் சீனப் பெண்கள் பள்ளி (1 HT )

  “பள்ளி ஆரம்பித்து ஒரு மாதம் தான் ஆகியுள்ளது! அதற்குள், எனக்கு எட்டுப் பாடங்கள், துணைப்பாட வகுப்புகள் என்று பல மன உளைச்சல்கள் குவிந்துவிட்டன! ” என்று புலம்பியவாறு பள்ளியிலிருந்து வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தேன்! என்னைப் பின்தொடர்ந்த என் வகுப்புத் தோழி நான் மன உளைச்சலோடு இருந்ததைக் கண்டறிருந்து என்னை நலம் விசாரித்தாள். “என்ன மாலா? ஏன் இவ்வளவு கவலையோடும் மன உளைச்சலோடும் இருக்கிறாய்?” என்று வினவ நான் வீட்டுப்பாடங்களும் துணைப்பாடங்களும் எனக்கு அதிகமான மன உளைச்சலைத் தருவதாகப் பகர்ந்தேன்.

  “இதற்காகவா இவ்வளவு பயம்?” என்று மாலா கேட்க நான் அதிர்ந்தேன். எனது பிரச்சினைக்கு அவளிடம் தீர்வு இருப்பதை உணர்ந்து தீர்வு என்ன என்று வினவினேன். அப்பொழுது கலாவோ ஒரு சிகரெட் பாக்கெட்டை நீட்டினாள். எனக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. எனது இதயம் ‘படக் படக்’ என்று தாளம் போட்டது. எனினும், நண்பர்கள் கூறுவதை அலசி ஆராயாமல் அப்படியே நம்பும் கெட்ட பழக்கம் என்னிடம் இருந்ததால் அப்பாக்கெட்டைப் பெற்றுக்கொண்டேன். ‘என்ன செய்வது? கலா கூறினால் அவ்விஷயம் சரியாக தான் இருக்க வேண்டும்! எனினும், பல விளம்பரங்களில் புகை பிடிப்பது புற்று நோயைத் தரும் என்று நான் கேட்டதுண்டு. ஆனால், விளம்பரங்களை விட என் தோழியே நம்பகத்திற்கு உரியவள் என்று நினைக்கிறேன்! புகை பிடிப்பது எனது மன உளைச்சலைக் குறைக்கும் என்றால், ஏன் யோசிக்க வேண்டும்?’ என்று என் மனதில் எண்ணினேன். “சங்கோஜம் வேண்டாம்! புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் என்பது பொய்! புகை பிடித்தால் மன உளைச்சலைக் குறைக்கலாம்!” என்று கலா என்னைப் புகை பிடிக்க ஊக்குவித்தாள்.

  அப்பொழுது நான் எடுத்த தவறான முடிவு என் வாழ்க்கையில் ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்கியது.

  ‘குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்
  மிகைநாடி மிக்கக் கொளல்’

  என்ற திருக்குறளை மறந்து கலாவைத் தோழியாக நினைத்ததோடு

  ‘ஆழம் அறியாமல் காலை விடாதே’

  என்று என் தமிழாசிரியர் கற்பித்த முதுமொழியையும் மறந்து யோசிக்காமல் அச்செயலைச் செய்தேன். சற்றுத் தடுமாறியவாறு, ஒரு சிகரெட்டைப் பாக்கெட்டிலிருந்து எடுத்து மெல்ல என் வாயுக்கு அருகில் நகர்த்தி புகை பிடிக்க தொடங்கினேன். என்னை அறியாமலேயே அன்று ஒரு தீய பழக்கத்திற்கு அடிமையானேன். சிறிது நேரத்திற்கு, என் மன உளைசசல் எல்லாம் காற்றோடு பறந்து போனது. ஆனால், என் அம்மா திட்டுவாரா என்று சற்று பயமாக இருந்தது. சில சிகரெட்டுகளைப் புகை பிடித்து முடித்தவுடன் நாளை சந்திப்பதாக மாலாவிடம் கூறிவிட்டு வீட்டிற்குச் சென்றேன்.

  ‘அம்மாவிடம் என்ன சொல்வது? புகை பிடிப்பதாகச் சொன்னால் அம்மா திட்டுவாரா? இல்லை, இல்லை இந்த வம்பே வேண்டாம்! பொய் சொல்லித் தப்பித்து விடலாம்! பள்ளியில், நண்பர்களுடன் படித்ததாக சொல்லலாம்,” என்று எண்ணியவாறே
  வீட்டை அடைந்தேன். அப்பொழுது, எங்கோ படித்த ஒரு கவிதை ஞாபகத்திற்கு வந்தது.

  ‘உண்மையைக் கூறுவது கடினம்
  பொய் சொல்வது எளிது
  உண்மையை மறைக்க பொய் சொல்வது எளிது.
  பொய்யை மறைக்க மற்றொரு பொய் கூறுவது கடினம்.
  கசப்பான உண்மையைக் கூற, இனிப்பான விளைவுகள்.
  இனிப்பான பொய்யைக் கூற , கசப்பான தண்டனைகள்.’

  எனினும், பயம் என் கண்களை மறைக்க தாயாரிடம் பொய் ஒன்றைச் சொன்னேன். ஆனால், அக்கவிதையின் பொருள் எனக்கு உடனணடியாகத் தெரியவில்லை! ஏன், ஆண்டுத் தேர்விற்காக நான் மனப்பாடம் செய்த செய்யுள் கூட எனக்கு நினைவில்ல் இருந்தது. ஆனால், என்ன பயன்? அதை நான் தான் என் வாழ்க்கைக்கு உபயோகிக்கவில்லையே!

  ‘ஔவியம் பேசேல்’

  அடுத்த நாள், மீண்டும் பள்ளி முடிந்து வீட்டிற்குக் கீழே இருந்த ஒரு ஓரத்தில் நானும் கலாவும் இணைந்து புகை பிடித்தோம். மீண்டும், என் அம்மாவிடம் வேறு ஒரு பொய்யைச் சொல்லி சமாளித்தேன். நாட்கள் செல்ல செல்ல, நான் புகை பிடிப்பதற்கு முழுமையாக அடிமையானேன். புகை பிடிக்கமால் என்னால் ஒரு நாள் கூட இருக்க முடியவில்லை. எனது வீட்டுப்பாடங்களைச் செய்யாமல் பாடத்தில் கவனம் செலுத்தாமல், ஆசிரியரிடம் தினமும் திட்டு வாங்கினேன்.

  ஒரு நாள், என் ஆசிரியர் என்னைத் தனியாக அழைத்து என் பிரச்சினையைப் பற்றி விசாரித்தார். நானோ ஒன்றுமில்லை என்று தயக்கமின்றி வாய் கூசாமல் பொய் சொன்னேன். அரை ஆண்டு தேர்வுகளும் நெருங்க, நான் எவ்வித மன உளைச்சலுமின்றி தினமும் புகை பிடித்தேன். அன்று, நான் மாலாவோடு பள்ளி சீருடையில் புகை பிடித்து கொண்டிருந்ததை எதார்த்தமாக அங்கு வந்த என் மூத்த சகோதரி பார்த்து விட்டார். “மாலா! ” என்று சத்தமான குரல் ஒன்று என் பெயரை அழைக்க நான் திரும்பினேன். அங்கு என் அக்கா நின்றுகொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் சிலையாய் நின்றேன்.

  எனக்குப் பேச நா வரவில்லை! ” அக்கா, தயவு செய்து அம்மாவிடம் சொல்லாதீர்கள்! ” என்று மன்றாட என் அக்கா என் பேச்சைக் கேட்பதாக இல்லை கோபத்தோடு என்னை வீட்டீற்கு அழைத்துக்கொண்டு அம்மாவின் முன் நிறுத்தினார்! எனது கைகள் வெடவெடத்தன . ‘ஏன் தான், தவறு செய்தேன்’ என்று எனக்குத் தோன்றியது! ஆனால் அப்போது நேரம் கடந்துவிட்டது!

  “என்ன மாலா! உன் அக்கா கூறுவதெல்லாம் உண்மையா? உனக்கு எவ்வளவு தைரியமிருந்தால் என்னிடமே பொய் சொல்லி புகை பிடித்திருப்பாய்?” என்று என் அம்மா ஆத்திரத்தில் கர்ஜித்தார். ‘பளார்’ என்று என் இரு கன்னங்களிலும் அறைந்தார். அப்பொழுது தான் நான் எவ்வளவு பெரிய குற்றம் செய்துவிட்டேன் என்பது எனக்கே புரிந்தது. சிறு வயதிலிருந்து, நற்பண்புகளைக் கற்பித்து என்னை வளர்த்த என் அம்மாவிமே பொய் சொல்லி விட்டதை நினைத்து நான் வருந்தாத நாள் இல்லை!

  அடுத்த நாள், கலாவிடம் சென்றேன். “நீயெல்லாம் ஒரு தோழி! நீயும் தீய செயல்களில் இறங்கி என்னையும் புகை பிடிக்க வைத்துவிட்டாய்! இனிமேல், தோழி என்று சொல்லிக்கொண்டு என்னிடம் வராதே! ” என்று கத்தியவாறு சென்றேன். அன்று நான் கலாவின் நட்பை முறித்துக்கொண்டேன். தேர்வு நெருங்கி கொண்டிருந்ததால், ஆசிரியர்களிடம் உதவி நாடி இரவும் பகலுமாக கண் விழித்து படித்தேன். நான் செய்த முயற்சி என்னைக் கைவிடவில்லை. எல்லா பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள் கிடைத்தது.

  அப்பொழுது, நான் என் தாயாரின் முகத்தில் கண்ட மகிழ்ச்சி எனக்குப் பேரானந்தத்தைத் தந்தது. அச்சம்பவம், நண்பர்களைக் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது என்ற பாடத்தை எனக்குக் கற்பித்தது!

  ‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்
  மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்’

  என்ற திருக்குறளின் உண்மை எனக்கு அப்போது தான் புரிந்தது.

 3. மணிவண்ணனுக்கு சந்தோஷமாக இருந்தது. மதுரையிலிருந்து வந்த அவன் மாமா அவனுக்கு ஒரு பேனாவை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார்.
  மணிவண்ணன் இப்படி ஒரு பேனாவைப் பார்த்தது கூட கிடையாது.

  இவன் வகுப்பில் படிக்கும் எம்.எல்.ஏ. மகனிடம் கூட இப்படிப் பட்ட பேனா இல்லை.
  பேனாவின் மூடியும், முள்ளும் தங்கம் போல பளபள வென்றிருந்தது.

  பள்ளிக்கூடம் போனதும் பேனாவை எல்லோரிடமும் காட்டினான்.
  மாமா இவன் மீது மிகவும் அன்பு வைத்திருந்தார்.

  வகுப்பில் முதல் மாணவனாகவும் ஒழுக்கமானவனாகவும் விளங்கிய மணிவண்ணனை உற்சாகப்படுத்த விரும்பினார் அவன் மாமா.

  “நீ படித்து பெரியவனாகி என்ன வேலைக்குப் போவாய்” என்று கேட்டார் அவன் மாமா. “நான் படித்து கலெக்டராக வருவேன்” என்றான் மணிவண்ணன்.

  இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவன் அப்பா “தம்பி விரலுக்கேத்த வீக்கம் வேண்டும். நீ சாதாரண விவசாயியின் மகன். நீ ஆசைப்படுவதில் அளவு வேண்டும்” என்றார்.

  மணிவண்ணனின் சந்தோஷம் மணலில் பாய்ந்த தண்ணீராய் மறைந்து போனது.

  “ஒரு ஏழையின் மகன் கலக்டராக வர ஆசைப்படுவது பேராசையா?” என்று நினைத்தான்.
  வகுப்பில் மணிவண்ணன் உற்சாகமின்றி உட்கார்ந்திருந்தான்.
  பாடங்களில் அவன் மனம் லயிக்கவில்லை. வகுப்பு ஆசிரியர் அவனை கவனித்து விட்டார்.

  ஆசிரியர் அவனை தனியாக அழைத்து விசாரித்தார்.
  “ஒரு ஏழையின் மகன் கலக்டராக ஆசைப்படுவது பேராசையா” என்றான்.
  அவன் சொன்னதைக் கேட்டதும் ஆசிரியர் கலகலவென்று சிரித்தார். “இதற்கு நானே உனக்கு நல்ல பதிலைச் சொல்லுவேன். ஆனாலும் இன்று மாலை வரை காத்திரு. எது பேராசை என்று புரிந்து கொள்வாய்” என்றார்.
  அன்று மாலை பள்ளியின ஆண்டு விழா நடைபெற்றது.
  ஆண்டு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கினார்.
  மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும் போது மாணவர்கள் நன்றாகப் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்று அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார்.

  கூட்டத்தில் உட்கார்ந்திருந்த மணிவண்ணனிடம் வந்த ஆசிரியர்,
  “உன் சந்தேகத்தை அவரிடமே கேள்” என்றார்.
  முதலில் தயங்கிய மணிவண்ணன் தைரியமாக எழுந்து கலக்டரிடம் கேட்டான்.
  “ஒரு ஏழை விவசாயியின் மகன் கலெக்ட்ராக வர ஆசைப்படுவது பேராசையா?”
  “நிச்சயமாக இல்லை. நேர்மையான வழியில் பெறுவதாய் இருந்தால் உலகத்தைக் கூட வாங்க ஆசைப்படுவதில் தவறு இல்லை” என்று பளிச்சென்று கூறினார் கலக்டர்.
  “நானும் ஒரு சாதாரண ஏழை விவசாயியின் மகன் தான்”
  “உழைப்பும் உறுதியான முயற்சியும் இருந்தால் எதற்கும் ஆசைப்படலாம். அது பேராசை ஆகாது” என்று பேசி முடித்தார் கலக்டர்.
  இருபது ஆண்டுகள் கழிந்தன.
  அதே பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மணிவண்ணன் ஆண்டு விழாவில் பேசிக் கொண்டிருந்தார்.
  “நம்பிக்கையும் உறுதியான முயற்சியும் உழைப்பும் தர தயாராக இருந்தால் கலக்டராக மட்டுமல்ல. இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர ஆசைப்படுவது கூட பேராசை ஆகாது” என்று கலக்டர் மணிவண்ணன் சொன்ன போது மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

  JEYARAJ JUSTIN
  COMMONWEALTH SECONDARY SCHOOL

 4. ஒரு பெரிய மடாலயத்தில் சீடர்கள் வட்டமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கையில் ஒரு வாக்குவாதம் எழுந்தது. அது என்னவென்றால், “திருடனாக இருப்பவனுக்கு எப்போதும் கெட்டது தான் நடக்கும்” என்று ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் “இல்லை, நல்லதும் நடக்கும்” என்றும் வாதாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களது குரலைக் கேட்டு வந்த ஜென் மாஸ்டர், என்ன பிரச்சனை என்று கேட்டார். அதற்கு அவர்கள் அந்த வாக்குவாதத்தை கூறினர். ஆகவே அதில் உள்ள உண்மையை புரிய வைப்பதற்கு, அவர்களுக்கு ஒரு கதையைக் கூற ஆரம்பித்தார். அது என்னவென்றால், “ஜென்கை என்பவன் ஒரு சாமுராய் மகன். அவன் ‘எடோ’ என்ற இடத்திற்கு பயணித்தார். அங்கு ஒரு உயர் அதிகாரியிடம் பணியாளாக சேர்ந்து, அவரின் மனைவியை காதலித்து, மேலும் தற்காப்பிற்காக, அந்த அதிகாரியின் பெருந்தொகையை எடுத்துக் கொண்டு, அவருடைய மனைவியுடன் ஓடிவிட்டான். பின்னர், இருவரும் நன்கு சந்தோஷமாக வாழ்வதற்கு திருடர்களாக மாறினர். ஆனால் அந்த பெண், ஜென்கையின் நடவடிக்கைகளை கண்டு வெறுப்படைந்தாள். அதனால் அவள் அவனை விட்டு சென்று விட்டாள். ஆகவே மனமுடைந்த அவன் ‘பூசன்’ என்ற மாகாணத்தில் பிச்சைக்காரனாக இருந்தான். மேலும் அவனது கடந்த காலத்தில் செய்த பாவத்திற்கு பரிகாரமாக, ஜென்கை தனது வாழ்நாளில் சில நல்ல காரியங்களை சாதிக்க எண்ணினான். அப்போது ஒரு குன்றின் மீது ஓர் ஆபத்தான சாலை இருப்பதால், பல பேர் மரணம் மற்றும் காயம் அடைகின்றனர் என்பதை தெரிந்து கொண்டு, அங்கு அந்த மலை வழியாக ஒரு சுரங்கம் வெட்ட எண்ணினான். பகல் நேரங்களில் உணவுக்கு பிச்சை எடுப்பதும், இரவு வேளையில் சுரங்கம் தோண்டுவதை வேலையாகவும் செய்து வந்தான். முப்பது ஆண்டுகள் ஆயிற்று, சுரங்கப்பாதை 2.280 அடி நீளம், 20 அடி உயரம் மற்றும் 30 அடி அகலம் ஆனது. வேலை முடியும் இரண்டு ஆண்டுகளுக்கு முன், அவன் பணியாளாக ஒரு அதிகாரியின் கீழ் வேலை செய்தான் அல்லவா, அவருடைய மகன் ஒரு திறமைமிக்க வாள்வீரன். அவன் ஜென்கையை கண்டுபிடித்து பழிவாங்க வேண்டும் என்று தேடி அலைந்து வந்தான். அப்பொழுது அந்த ஜென்கையும் அவன் கண்ணில் தென்பட்டார். அதனால் ஆத்திரமடைந்த அவன் “நான் உன்னை என் கைகளால் கொல்ல வேண்டும்” என்று கூறினான். அப்போது அந்த ஜென்கை “நீ என்னை தாராளமாக கொள்ளலாம், ஆனால் எனக்கு ஒரு ஆசை உள்ளது, அது என்னவெனில் இந்த சுரங்கத்தை முடித்ததும் நீ என்னை கொல்,” என்று கூறினார். எனவே அந்த மகனும் அந்த நாளுக்காக காத்திருந்தான். பல மாதங்கள் கடந்தது. ஜென்கை மட்டும் தோண்டி கொண்டிருந்தான். எதுவும் செய்யாமல் இருந்ததால், அந்த வாள்வீரன் மிகவும் சோர்வடைந்தான். அதனால் அவனும் ஜென்கைக்கு உதவியாக சுரங்கம் தோண்ட ஆரம்பித்தான். ஓர் ஆண்டு காலம் ஆனதும், அந்த மகன் ஜென்கையின் வலிமையும் தன்னம்பிக்கையையும் கண்டு வியந்தான். கடைசியாக சுரங்கப்பாதை முடிந்தது. மக்களும் பாதுக்காப்பாக அந்த சுரங்கத்தில் பயணித்தனர். “இப்போது என் தலையை துண்டி, என் வேலை முடிந்தது” என்று ஜென்கை கூறினார். “எப்படி நான் என் சொந்த ஆசிரியர் தலையை துண்டிக்க முடியும்?” என்று கண்களில் இருந்து கண்ணீர் வழியக் கேட்டான்” என்று சொன்னார். பின் இறுதியில் ஜென் குரு சீடர்களிடம் “திருடனாக இருந்து, திருந்தியப் பின் நல்லதை நினைத்தால், அவனுக்கு நல்லதே நடக்கும்” என்று சொல்லி, உள்ளே சென்று விட்டார்.

  Swiss Cottage Secondary School
  2E1

 5. ‘ அதற்குள்ளேயே காலை ஆறு மணியாகிவிட்டதா?’ என்று நான் திகைத்திருந்தேன், என் படுக்கைக்கின் அருகிலிருந்து கடிகாரம் ஒலித்ததுடன். நான் உறங்க சென்றதோ அதிகாலை நான்கு மணி தான். காரணம், அன்று நிகழவிருந்த கணிதத் தேர்வுக்கு படிக்க. நல்ல மதிப்பெண்களை பெற்று, என் அம்மாவை புது படமான ‘செக்க சிவந்த வான’த்திற்கு என்னை அழைத்துச் செல்ல வலியுறுத்துவது. ஆனால், இரண்டு மணி நேர தூக்கத்துடன் எப்படி இத்தேர்வை எழுதப்போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை. ‘ எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துப்பான்’ என்று கூறிக்கொண்டே நான் குளியல் அறைக்குள் குளிக்க தண்ணீர் குழாய் திறந்தபொழுது, ஆர்க்டிக் கடலிலிருந்து தண்ணீர் கொட்டுவது போல், குளிர்ந்த நீர் என் உடலை உறைத்தது. தினமும் வெண்ணீரில் குளித்து பழகிய நான் இன்று குளிர்ந்த நீரில் மாட்டிக்கொண்டேன். ஒருவேலை தூக்க கலக்கத்தில் நீர் சூடேற்றியை இயக்கவில்லையோ என்று எண்ணிக்கொண்டே சரசர வென்று குளித்தேன், இந் நரகத்தைவிட்டுச் செல்ல வேண்டுமென்று. பிறகு என் பள்ளிக்கு தயாரிக்கொண்டிருந்தபோது மணியைப் பார்த்தால், என் இதயம் ஒரு நிமிடம் நின்றுவிட்டது. என் மணிக்கடிகாரம் ஆறு மணியை காட்டியது. அச்சச்சோ, கடிகாரம் சரியாக வேலை செய்யவில்லையே என்று என் தொலைபேசியை எடுத் துப்பார்த்தால், இன்னும் இறுப து நிமிடங்களில் பள்ளிகதவுகள் மூடிவிடும்..
  சீருடையை நான் மாட்டிக்கொண்டு அறக்கப் பறக்க தேர்வுக்கு தேவையான பொருளக்ளை எடுத்துக்கொண்டு என் வீட்டருகிளுள்ள பேருந்து நிறுத்தத்திற்கு ஓடினேன். நிற்காமல் ஓடினேன். ‘ என்னது, இன்று ஆறம்பமே அம்சமாக இருக்கிறதே’ என்று எண்ணிக்கொண்டு ஓடும்போது, கால் தடுக்கி, அருகிலிருந்தே தண்ணீர் குட்டையில் நான் விழுந்துவிட்டேன். நான், என் சீருடை, என் பள்ளிப்பை, எல்லாம் நனைந்துவிட்டன. ‘ ஆண்டவா, என்ன இது’ என்று கையை தூக்கி வாணத்தைப் பார்த்தபோது, என் கடிகார கண்ணாடி உடைந்திருந்து தெரிந்தது. விழுந்த வேகத்தினால் என் கடிகார கண்ணாடி உடைந்தது. ‘ அய்யோ கடிகாரம் போய்விட்டதே’ என்ற அதிர்ச்சியில் எழுந்து நான் பார்த்தப்பொழுது என் கண் முன்னே நான் பள்ளிக்கு எடுக்கும் 13 எண் பேருந்து, பேருந்து நிறுத்தத்தை தாண்டி சென்றுகொண்டிருந்தது. என் பள்ளிப்பையை எடுத்துக்கொண்டு, நான் அதை விரட்டிச் சென்றான். ஆனால் நான் என்ன உசைன் போல்ட்டா, பேருந்தை விரட்டி வெல்வதற்கு.
  கவலையில் நான் உட்கார்ந்து, அடுத்த பேருந்தை எடுத்த பள்ளிக்கு தாமதமாகச் சென்றேன். என் காலை வேதனையை என் பள்ளி ஆசிரியரிடம் எடுத்து விளக்குவதற்குள் என் பிராணமே போய்விட்டது. என்னைச் சுற்றியுள்ள எல்லோரும் என்னை வேடிக்கையாகவும், பரிதாபத்துடனும் பார்த்தார்கள். சரி, இவ்வளவு கடினப்பட்டு பள்ளிக்கு வந்தது தேர்வை எழுத தானே, அதை சிறப்பாக முடித்திடுவோம் என்று மனதை தேர்த்திக்கொண்டு தேர்வு அறைக்குச் சென்று தேர்வைத் தொடங்க என் பேனா பையை திறந்தபொழுது என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை. நான் பார்த்துக்கொண்டிருப்பது போலியா, அல்லது உண்மையா என்று எனக்கு விளங்கவில்லை. என் கால்குலேட்டரை காணும். என் தேர்வுக்கான முக்கிய அஸ்த்திரம் என்னடிமில்லை என்ற அதிர்ச்சி வலையில் சிக்கியிருந்தேன். எங்கே சென்றது என்று யோசித்துப் பார்த்தேன். ஆனால் ஒன்றும் என் நினைவுக்கு வரவில்லை.
  கால்குலேட்டர் இல்லாததால் என் மனம் படபடத்தது. எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தேர்வு ஆரம்பித்துவிட்டதால் நான் யாரிடமும் வேறு கால்குலேட்டரையும் கேட்க முடியாது. பதற்றத்தில் என்னால் சரியாக சிந்திக்கக்கூட முடியவில்லை. என் கைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. என் நெற்றியிலிருந்து வேர்வை துளிகிள் என் கணிதத் தேர்வுத் தாளில் விழுந்தன. உறங்காமல் படித்து, காலையில் அவ்வளவு பிரச்சனைகளை எதிர்நோக்கி இறுதியில் தேர்வை எழுத வந்தால் அது கூட என்னால் முடியவில்லையே என்று மனம் நொந்துபோனேன் நான். சோகக் கடலில் மூழ்கிய நான், கண்ணீர் துளிகள் மற்றும் விழாதது தான் குறைச்சல். முடிந்ததையாவது முயற்சித்துப் பார்ப்போம் எனறு தாளை திருப்பி திருப்பி கால்குலேட்டர் தேவைப்படாத கேள்வி இருக்கா என்று தேடினான். இறுதியில் இறுதி பக்கதிற்கே வந்துவிட்டேன். இதற்கு மேல் அந்த ஆண்டவனே வந்தாலும் என்னைக் காப்பாற்ற முடியாது என்று புரிந்துகொண்ட நான் கையை தலையில் வைத்துக்கொண்டே என் முன்னே இருந்த பெயர் மட்டும் எழுதப்பட்ட கணித தாளை கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டேன்.
  தேர்வு தாளை ஆசிரியர் வாங்கியவுடன், என் நண்பர்கள் எல்லாம் அவர்களுடைய பதில்களை ஒருவரையொருவருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, நான் எதுவும் பேசாமல், என் ஈரமான பள்ளிப்பையை தூக்கிக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டேன். வீட்டிற்கு நடந்துகொண்டிருந்தபோது எனக்கு என் வாழ்க்கை மீது கோபமும், வெறுப்பும் ஏற்பட்டது. ‘ நான் என்ன தவறு செய்தேன், இவ்வளவு துன்பங்களை அனுபவிக்க?’, ‘ நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன் ‘ , ‘ கடவுளுக்கு ஏன் இவ்வளவு இரக்கமில்லா குணம்’ என்று எரிச்சலில் சிந்தித்துக்கொண்டே சென்றபோது என் கவனத்தை ஒரு காட்சி சுண்டியிழுத்தது.
  தூரத்தில் ஒரு கண் தெரியாத முதியவர் தனியாக சாலையை கடந்துகொண்டிருந்தார்; பயத்தில் வேகமாக கடந்துக்கொண்டிருந்தார். அவர் நடப்பதை பலர் பார்த்துக்கொண்டிருந்தனர், ஆனால் யாரும் அவருக்கு உதவச்செல்லவில்லை. தூரத்தில் ஒரு காலை இழந்த முதியவர், தன்னுடைய மின்நாற்காளியில் உட்கார்ந்துகொண்டு அவரைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தார். ‘ என்ன ஒரு அரக்க குணம் ‘ என்று நினைத்துக்கொண்டிருந்தபோது பார்த்தால் கண் தெரியாத முதியவர் மின்நாற்காளியில் அமர்ந்திருந்த முதியவருக்கு அருகில் உட்கார்ந்துகொண்டு, அவரோடு பேசிக்கொண்டிருந்தார்; சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். ‘ என்னடா இது புதுசா இருக்கே’ என்று நினைத்துக்கொண்டே அவர்களை சற்று நேரம் கவனித்துக்கொண்டிருந்தேன்.
  அவர்கள் இருவரும், எந்த கவலையுமில்லாமல் ஒருவருடன் ஒருவர் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்தனர். ‘ ஒருவருக்கு பார்வையில்லை, ஒருவருக்கு ஒரு காலேயில்லை, இப்படி இருக்கும்போது எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்’ என்று நான் எண்ணினேன். அப்போது என் மனதிற்கு ஒன்று தோன்றியது. ‘ அவர்களுக்கு பிரச்சனையை அவர்கள் பெரிதாக பொருட்படுத்தாததால் தான் சந்தோஷமாக பேசி நேரம் கழிக்கிறார்கள். நான் என் அப்படி செய்யக்கூடாது’ என்று நான் எண்ணினேன். என் வாழ்க்கையை நேர்மறையாகப் பார்க்கக்கூடாது, ஏன் எதிர்மறையாக பார்க்கவேண்டும் என்று எனக்கு தோன்றியது. ‘ எனக்கு நடந்ததொன்றும் அவ்வளவு பெரிய கொடுமையில்லையே, என்னால் மீண்டு வர முடியமே’ என்று எனக்கு புரிந்தது. நான் நின்றுகொண்டயிடத்திலிருந்தே அவர்களுக்கு ஒரு கும்பிடுப் போட்டு மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு திரும்பினேன்.

  Hindbashini
  Bendemeer Secondary School

Your email address will not be published.


*