அப்பா, அம்மா சொன்ன கதை

நம்முடைய அப்பா, அம்மாவின் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள் நிறைய நடந்திருக்கும். அவை அவர்களின் இளம் வயதில், பள்ளியில், கல்லூரியில், திருமணமான புதிதில், அனுவலகத்தில் என எப்போது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். அதைப்பற்றி அவர்களிடம் கேளுங்கள். மகிழ்ச்சியாக உங்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். அவற்றை சுவை குன்றாமல் சுருக்கமாக, கதைபோல் எழுதி, இங்கே பகிருங்கள்.
உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, இந்தக் கதைக்கான பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 3 மே 2017.  பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!
****
மார்ச் 2017 கதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்

5 கருத்துரை

 1. அப்பாவின் கதை
  என் அப்பா மலேசியாவில் உள்ள பேராக் என்னும் கிராமத்தில், அவர் தாயாருடன் வசித்து வந்தார். அப்பொழுது நிறைய ஆடுகளை என் பாட்டி வளர்த்தார். அந்த ஆடுகளை மேய்க்கும் பொறுப்பை என் அப்பாவிடம் கொடுக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் சாயங்காலம் வழக்கம் போல ஆடுகளை அடைத்து வைக்கும் இடத்தில் அடைத்து வைத்தார் என் அப்பா, ஆனால், அதில் ஒரு சில ஆடுகள் மட்டும் அங்கிருந்து தப்பித்து ஓடியது. அதனைப் பார்த்த என் பாட்டி மிகுந்த கோபத்துடன் நீ அந்த ஆடுகளை ஓட்டி வந்து இங்கு அடைக்காவிட்டால் “உனக்குச் சோறு தண்ணி எதுவும் கிடையாது” என்று கூறிவிட்டார். அதனால், என் அப்பா அந்த ஆடுகளை அங்கும் இங்கும் தேடினார். பிறகு, ஒரு ஆட்டைத் தவிர மற்ற ஆடுகளைக் கண்டு பிடித்துக் கொண்டு வந்து அடைத்துவிட்டார். என் பாட்டி “அந்த ஒரு ஆட்டையும் தேடிவர வேண்டும்” என்று மிகுந்த கோபத்துடன் கூறிவிட்டார். உடனே என் அப்பா தன் அவரது நண்பர்களைத் துணைக்கு அழைத்துக்கொண்டு வயல்வெளிக்குச் சென்று தேடினார். இரவு வெகுநேரம் ஆகிவிட்டதால் இருட்டிவிட்டது. அப்போது அங்கு அவர்களுக்கு எதிரே ஒரு உருவம் தெரிந்தது. அதன் கண்கள் சிவப்பாக இருந்தது. அதனால் பயத்தில் அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர். அந்த உருவமும் அவர்களைத் துரத்த ஆரபித்தது. அது ஒரு நரியாக இருக்கலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். அவர்கள் காட்டுக்குள் ஓடிய வேகத்தில் கை, கால்களில் கற்கள், முட்கள் அனைத்தும் குத்தியது. வேகமாக ஊருக்குள் ஓடிவந்தனர். அப்போது வெளிச்சத்தில் திரும்பிப் பார்க்கும் போதுதான் அது ஒரு நாய் என்று அவர்களுக்குத் தெரிந்தது. அதன் பிறகுதான் அவர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். மறுநாள் காலையில் அந்தத் தொலைந்துபோன ஆடு தானாகவே வீட்டிற்கு வந்துவிட்டது. இதனைப் பார்த்த என் அப்பாவுக்கு ”போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது” என்று கூறினார்.
  SUSHMITHA D/O KRISHNAN
  FAJAR SECONDARY SCHOOL

 2. அப்பா, அம்மா சொன்ன கதை
  எனது அம்மா, அப்பாவின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களைப் பற்றி அவர்கள் என்னிடமும், எனது தம்பியிடமும் பலமுறை கூறியிருக்கிறார்கள். சிங்கப்பூரில் வளரும் எங்களுக்கு, இந்தியாவில் நடுத்தர ஓரு கிராமத்து சூழலில் வளர்ந்த அவர்களின் அனுபவங்கள் மிகவும் இரசிக்கத்தக்கதாக, சுவையானதாக இருக்கும். அவற்றில் மிகப்புதுமையான, என்னைக கவர்ந்த ஒரு சம்பவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
  எனது அம்மாவுக்கு எட்டு வயதாக இருக்கும் போது, அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் ஒரு பன்றியை வளர்த்தார்களாம். அது அவர்கள் வீட்டுக்கு வந்தபோது மிகவும் குட்டியாக இருந்ததாம்.
  காலை எழுந்தவுடன் எனது அம்மாவும், அவர்களது பக்கத்து வீட்டுத் தோழிகளும் அந்தப் பன்றிக்குட்டி கட்டியிருந்த இடத்தை சுத்தம் செய்வார்களாம். பிறகு ஒரு கழனியில் (கல்லால் செய்த பாத்திரம் போன்ற வடிவம்) , அது குடிப்பதற்காக அரிசி களைந்த நீர், காய் கழுவிய நீர் (அதற்குக் கழனித் தண்ணீர் என்று பெயர்) ஆகியவற்றை ஊற்றுவார்களாம். முந்தைய நாள் இரவே புளியங்காய் கொட்டைகளை இரும்பு சட்டியில் மணலில் இட்டு வறுத்து , அதன் தோலை நீக்கி, தண்ணீரில் ஊறவைத்து அதையும் அந்தக் கழனித் தண்ணீருடன் சேர்த்து பன்றிக்கு சாப்பிட வைப்பார்களாம். ஏனென்றால், அந்தக் கொட்டைகளில் இரும்பு சத்து அதிகமாக இருக்குமாம்.அதன் பிறகு தான் பள்ளிக்கே செல்வார்களாம்.
  சில மாதங்களில் பன்றி கொழு கொழு என்று வளர்ந்து பெரியதாக ஆனதாம். பிறகு அதை ஒரு நேர்த்திக் கடனுக்காக கோயிலில் விட்டு விட்டார்களாம்.
  தொலைக்காட்சி, கணினி விளையாட்டு என்று நேரத்தை வீணடிக்காமல் , நாமும் பெற்றோர்களுக்கு உதவியாகவும், வெளிப்புற நடவடிக்கைகளில் பங்கேற்றும் வாழ்க்கைக்குத் தேவையானவற்றை கற்றுக் கொள்ளவேண்டும் என்று உறுதி பூண்டேன்.
  பெயர்: தேஜல்
  பள்ளி: சுவா சு காங் உயர்நிலைப்பள்ளி

 3. என் தந்தையின் காலத்தில் அவருக்கு நிறைய மறக்க முடியாத சம்பவங்கள் நடந்தன.சில நேரங்களில்,என் தந்தையின் சிறுவயது குறும்புத்தனமான செயல்களை பார்த்து,”இவர் இப்படியெல்லாம் கூட இருப்பாரா?” என்று எனக்கு தொடரும்.அதில் என் தந்தையால் மறக்கமுடியாத ஒரு சம்பவத்தை இப்போது நான் உங்களிடம் பகிர்ந்துகொள்ள போகிறேன்.
  அப்போது என் தந்தைக்கு வயது பதினொன்று.அவர் ஒரு கிராமத்தில் வளர்ந்து வந்தார்.அன்று ஒரு நாள்,என் தந்தை தன் நண்பர்களுடன் ஆடு மேய்க்க காட்டிற்கு சென்றிருந்தார்.அவர் அவருடன் ஒரு வைக்கோல் குச்சியையும் கொஞ்சம் அரிசியும் வெள்ளமும் எடுத்து கொண்டு சென்றிருந்தார்.
  காட்டிற்கு சென்றவுடன், அவரும் அவருடைய நண்பர்களும் எடுத்து வந்த அரிசியையும் வெல்லத்தையும் மண் சட்டி ஓட்டில் வறுத்து உருண்டையாக்கினார்கள்.பிறகு சிலர், மரத்தில் ஏறி தேங்காய்கள் பறித்தனர். அந்த தேங்காயில் இருக்கும் மூன்று ஓட்டைகள் வழியாக அந்த அரிசி வெள்ளம் உருண்டையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு ஓட்டையை அடைத்தனர்.அந்த தேங்காயின் மேல் மண் சேற்றை போட்டு,மர கட்டைகளை வைத்து நெருப்பு உருவாக்கி அந்த தேங்காயை நெருப்பின்மேல் வைத்தனர்.பிறகு அதை வைத்து விளையாடலாம் என்று நினைத்தனர்.ஆனால் யாருக்கு தெரியும் சில வினாடிகளில் ஒரு விபரீதம் நடக்கும் என்று?
  திடீரென்று,அந்த தேங்காய் சூடு தாங்காமல் வெடித்து அதன் கூர்மையான பாகங்கள் என் தந்தையைத் தாக்கின.எதிர்பாராத விதமாக என் தந்தையின் மூக்கில் ஒரு பகுதி வெட்டப்பட்டிருந்தது.அவர் மூக்கிலிருந்து இரத்தம் கொட்டியது.அவருடைய நண்பர்கள் அதை பார்த்து அவரை ஊர் வைத்தியரிடம் கொண்டு சென்றனர்.ஊர் வைத்தியர் என் தந்தையுடைய மூக்கில் மூன்று தையல்கள் போட்டார்.அந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவரமுடியாமல் தவித்த என் தந்தைக்கு அன்று இரவு முழுக்க பயங்கரமான காய்ச்சல் வந்து படக்கூடாத துன்பத்தையும் அவர் பட்டு இன்று ஒரு நல்ல முன்னுதாரணமாக உள்ளார்.
  என்னுடைய முன்னுதாரணம் என் தந்தைதான்.இந்த கதையை படித்து சிலர் மாறுவர் என்று நான் நம்புகிறேன்.
  ரெத்தினம் ரெபேக்கா
  சுவா சூ காங் உயர்நிலை பள்ளி

 4. என் அப்பா அம்மா வாழ்க்கையில் நடந்த மிகப் பெரிய சுவையான சம்பவம் என்னவென்றால், எனது பிறப்பாகும். அதற்கு அடுத்த மிகப் பெரிய சுவையான சம்பவம் என்னவென்றால் என் பெற்றோர்கள் சேர்ந்து சென்ற முதல் சுற்றுலா பயனம் ஆகும்.
  திருமணமான புதிதில், இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் வடக்கப் பகுதியில், துங்கபத்திரை ஆற்றங்கரையில் உள்ள ஹம்பி என்ற சுற்றுலா நகரத்திற்கு அவர்கள் சென்றார்கள். நான் அவர்களிடம் அந்த ஊரைப் பற்றி கேட்ட போது, மனிதன் தான் கண்ட கனவுகளை கல்லில் செதுக்கினால் எப்படி இருக்கும், கல்லிலே கலை வண்ணம் கண்டான் என்ற பாடலுக்கு சொந்தமான ஊர் என்றால் அது ஹம்பிதான் என்றார்கள். மேலும், துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த ஊர் கட்டிட கலை மிக சிறப்பானது என்றார் அம்மா.
  அங்கே ஐந்து நாட்கள், என் அப்பாவின் நகமும் சதையும் போல நெருங்கிய நண்பனின் வீட்டில், இருவரும் பொழுதைக் கழித்தார்கள்.இறுதி நாள் அன்று, விருபாட்சா கோயிலுக்கு அவர்கள் சென்றோம் என்றார் அப்பா. துங்கபத்திரை ஆற்றின் கரையில் ஹேமகுதா மலை அடிவாரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது என்றார். கோயிலுக்கு சென்று வந்ததற்கு பின், விமானம் எடுத்து சிங்கப்பூருக்கு வந்தார்கள்.நான் பிறந்த போது எவ்வளவு இன்பம் அடைந்தார்களோ அதே அளவு, இந்த சுற்றுலா பயனத்திற்கு சென்ற போது மகிழ்ச்சி அடைந்தார்கள்.

 5. அத்தியாயம் 1
  என் வாழ்க்கையில் பல நல்ல கதைகளை கேட்டிருக்கிறேன். ஆனால் என் அப்பா கூறிய கதை எனக்கு பிடித்திருந்தது
  விவாதப் போட்டியில் என் குழுவிற்க்கு ஒருமுக்கியமான நிமிடம் அது. என் குழு வெற்றிப் பெறுவது என் கையில்தான் இருந்தது. நான் எழுந்து நின்றேன். பின் என் கருத்தைச் சொல்ல வாயைத் திறந்தேன். அந்தோ பரிதாபம்! என்ன சொல்ல வந்தேன் என்பதை மறந்துவிட்டேன்! என் கோல் அட்டையையும் கானும்!!!
  அன்று தோற்று விட்டேன் என்ற சோகத்தோடு என் கட்டில்லில் படுத்தேன். என் கண்ணிமைகளிலிருந்து ஆரு அளவுநீர் தப்பியோடியது. அப்போது என் அப்பா உள்ளே வந்தார். என்னைக் கட்டியனைத்து, ” தோல்வி என்பது வாழ்க்கைக் கற்றுத் தரும் பாடங்களில் ஒன்றே தவிர அவமானம் ஏதும் இல்லை. கவலை கொள்ளாமல் அடுத்தப் போட்டிக்கு தயார் செய். கடுமையாக உழை; வெற்றி உனக்கே!” என்று கூறிவட்டு வெளியே சென்றார்.நான் என் அப்பா கூறிய கருத்தை பற்றி யோசித்தேன்.
  அத்தியாயம் 2
  பல வருடம் கழித்து… இப்பொழது, என் வாழ்க்கை சிறப்பாக இருக்கிரது. என் அப்பா காலமாகி இருக்கிறார். அன்று நான் என் அப்பா கூறியதைக் கேட்டு நடந்திருக்கவில்லை என்றால், இன்று நான் விவாதத்தால் ஒரு பெரிய பதவியில் இருக்க மாட்டேன்.
  கதை எங்கே? என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள். இப்பொழுது நங்கள் படித்தீர்களே? அது தான் கதை. இக்கதை என் அப்பா கூறியது.
  தாருண் தணிகைவேலன்
  கான் எங் செங் உயர்நிலைப்பள்ளி

Your email address will not be published.


*